Published : 27 Dec 2015 11:23 AM
Last Updated : 27 Dec 2015 11:23 AM

உலக மசாலா: பிசினஸ் என்றால் எந்த இடத்தையும் விட்டு வைப்பதில்லை...

ஷ்யாவைச் சேர்ந்த சலவட் ஃபிடாய் மினியேச்சர் சிற்பங்களை உருவாக்குவதில் உலகிலேயே மிகச் சிறந்த கலைஞர். அவரது கலைகளில் மிகவும் முக்கியமானது பென்சில் முனையில் வடிக்கும் சிற்பங்கள். உருப்பெருக்கிக் கண்ணாடியையும் கத்தியையும் வைத்துக்கொண்டு மிகப் பிரபலமான உருவங்களை எல்லாம் செதுக்கி விடுகிறார். “என் பெற்றோர் கலைஞர்கள். நான் வக்கீலாக வேலை பார்த்து வந்தேன். ஆனாலும் கலைகள் மீதுதான் என் ஆர்வம் முழுவதும் இருந்து வந்தது. ஒருகட்டத்தில் வேலையை விட்டுவிட்டு, முழு நேர கலைஞராக மாறிவிட்டேன். பென்சில் கிராபைட்டில் உருவங்களைச் செதுக்குவதுதான் மிகவும் சவாலான பணியாக இருக்கும். ஆரம்பத்தில் ஏராளமான தோல்விகள். எவ்வளவு பென்சில்கள் உடைந்தன என்பதற்கு கணக்கே இல்லை. இப்பொழுதும் கூட ஒவ்வொரு உருவமும் செதுக்குவதற்குள் 7 பென்சில்களாவது உடைந்துவிடுகின்றன. நிறைய நேரமும் அளவற்ற பொறுமையும் தேவைப்படும். வான் காவின் இரவு ஓவியத்தை பூசணி விதையில் தீட்டியிருக்கிறேன். அதைப் பார்ப்பதற்கே லென்ஸ் வேண்டும்” என்கிறார் ஃபிடாய்.

ஆஹா! உழைப்புகேற்ற அட்டகாசமான பலன்!

பெரு நாட்டில் இன்கா மக்கள் வாழ்ந்த மலைப் பகுதிகளில் கண்ணாடியால் ஆன 3 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. 1,312 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த விடுதிக்குச் செல்வதே மிகப் பெரிய சாகசமாக இருக்கிறது. இரும்புக் கம்பிகளால் ஆன படிகள் மீது கவனமாக ஏறிச் செல்ல வேண்டும். சின்னஞ்சிறு இடத்தில் படுக்கை, கழிவறை, உணவு மேஜை என்று கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. விடுதியில் இருந்து பள்ளத்தாக்கைப் பார்த்தால் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மாலை நேரத்தில் ஒருவித அழகும் அதிகாலையில் வேறுவிதமான அழகுடன் மலையும் மலையைச் சுற்றியுள்ள இடங்களும் காட்சி தருகின்றன. “இந்த விடுதிக்கு சாதாரண சுற்றுலாப் பயணிகள் வந்து தங்க முடியாது. மலையேற்றம் செய்பவர்களும் சாகசத்தை விரும்புகிறவர்களும்தான் தங்க முடியும். பார்க்க பயமாக இருந்தாலும் மிகப் பாதுகாப்பாக விடுதியை உருவாக்கி இருக்கிறோம். நாங்கள் சொல்வது போல நடந்துகொண்டால் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஒரு இரவு இங்கே தங்குவதற்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறோம். கீழே இருக்கும்போது இது அதிகக் கட்டணம் என்று நினைப்பவர்கள், இங்கே தங்கிச் செல்லும்போது, “இந்தக் கட்டணம் பெரிய விஷயமில்லை” என்று கூறுகிறார்கள்” என்கிறார் ஸ்கைலாட்ஜ் கேப்சூல் என்ற இந்த விடுதியின் உரிமையாளர்.

பிசினஸ் என்றால் எந்த இடத்தையும் விட்டு வைப்பதில்லை…

ஷ்யாவின் பனி சூழ்ந்த யுரால் மலையை ஒட்டிய காடுகளில் அங்கீகரிக்கப்பட்ட வேட்டைகள் நடைபெற்று வருகின்றன. பீட்டர் மாக்ஸிமோவ் விடுமுறை நாட்களில் இங்கே வேட்டைகளில் ஈடுபடுவார். மரம் மீது கூடாரம் அமைத்து, வேட்டைக்காகக் காத்திருந்தபோது, தூரத்தில் மிகப் பெரிய காட்டுப் பன்றி வந்துகொண்டிருந்தது. குண்டு களால் இருமுறை சுட்டார். அலறிக்கொண்டே ஓடிவிட்டது. இதுவரை இவ்வளவு பெரிய காட்டுப் பன்றியைக் கண்டதில்லை என்பதால், அருகில் இருந்த கிராமத்திலிருந்து இருவரை அழைத்துக்கொண்டு, காயம்பட்ட காட்டுப் பன்றியைத் தேடிச் சென்றார் மாக்ஸிமோவ். நீண்ட தேடுதலுக்குப் பிறகு காட்டுப் பன்றி தென்பட்டது. உயிர் இருந்தது. மாக்ஸிமோவ் அழைத்து வந்தவர்கள் மீண்டும் சுடவும் உயிர் பிரிந்தது. இதுவரை யாருமே இவ்வளவு எடை கொண்ட பன்றியைப் பார்த்ததில்லை. பன்றியை ட்ரக்கில் ஏற்ற முடியவில்லை. 535 கிலோ எடையும் 1.7 மீட்டர் உயரமும் இருந்தது காட்டுப் பன்றி. கிழக்கு ஐரோப்பாவில் 270 கிலோ எடை வரை காட்டுப் பன்றிகள் இருந்திருக்கின்றன. ரஷ்யாவில் இதுவரை 350 கிலோ எடையுடைய பன்றிதான் அதிக எடையாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இது 535 கிலோ எடை கொண்ட ராட்சச பன்றியாக இருந்தது. உலகம் முழுவதும் விலங்குகள் வேட்டையாடப்படுவதால் முழு அளவில் வளர்ச்சியடைவதற்குள் மரித்துவிடுகின்றன. இந்தக் காட்டுப் பன்றி வேட்டைக்காரர்களின் கண்களுக்குத் தென்படாமல் இத்தனைக் காலமும் இருந்ததால் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.

அநியாயம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x