Published : 21 Jul 2015 10:22 AM
Last Updated : 21 Jul 2015 10:22 AM

உலக மசாலா: பாவாடை அணியும் ஆண்கள்!

ஸ்காட்லாந்தில் இருக்கிறது ஹூட்டானன்னி உணவு விடுதி. இங்கே பணிபுரியும் ஆண்கள், கட்டாயம் ஸ்காட்லாந்தின் பாரம்பரிய பாவாடையை அணிந்துகொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பாவாடை அணிந்துகொள்வது பொருத்த மாக இல்லை என்றாலும், நல்ல சம்பளம் என்பதற்காக பாவாடையை அணிந்து வருகிறார்கள்.

சமீப காலமாக இந்த விடுதிக்கு வரும் பெண்கள், மது அருந்திவிட்டு பாவாடை அணிந்திருக்கும் ஊழியர்களைக் கிண்டல் செய்கிறார்கள். சிலர் பாவாடையை இழுக் கிறார்கள். ஆரம்பத்தில் விளையாட்டு என்று நினைத்த ஊழியர்கள், இப்படிப் பட்ட விஷயங்கள் தொடர்ந்து நிகழ்ந்ததில் மனம் உடைந்து போனார்கள். இனிமேல் தாங்கள் இந்தப் பாவாடைகளை அணிந்து கொண்டு வேலை செய்ய இயலாது என்று எல்லோரும் கூறிவிட்டனர்.

‘‘வாடிக்கையாளர்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல என்னுடைய ஊழியர்களும் முக்கியம். இனி யாரும் பாரம்பரிய பாவாடையை அணிய வேண்டாம்’’ என்று கூறிவிட்டார் விடுதியின் மேலாளர்.

ஐயோ... ஒருவரின் ஆடையை இழுப்பதும் மோசமாகப் பேசுவதும் அநாகரிகமானது…

ஒரேகான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ் லாங்டனும் அவரது நண்பரும் கடல்பாசியில் செய்யும் உணவுகளுக்குக் காப்புரிமை பெற்றிருக்கின்றனர். பசிபிக், அட்லாண்டிக் கடல் பகுதிகளில் கடல் பாசிகள் கிடைக்கின்றன. அங்கே காய்ந்த கடல்பாசிகள் ஒரு கிலோ 2700 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மனித உணவுகளில் கடல் பாசிகளின் பங்கு இனிவரும் காலங்களில் மகத்தானதாக இருக்கும் என்கிறார்கள்.

கடல்பாசிகளில் கனிமங்கள், வைட்டமின்கள், புரோட்டீன் சத்துகள் நிறைந்திருக்கின்றன. இவற்றைச் சமைக்கும்போது அற்புதமான சுவையைத் தருகின்றன. பன்றி இறைச்சியை ஒத்த சுவை இருப்பதால், எல்லோரும் கடல்பாசியைச் சாப்பிடலாம் என்கி றார்கள். ஆசிய கடல் பகுதிகளில் சிவப்பு கடல்பாசிகள் அதிகம் விளை விக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.

‘‘எதிர்காலத்தில் மனிதர்களின் உணவுத் தேவையைச் சமாளிப்பதற்காகவே நாங்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டோம். கடல்பாசிகளை வைத்து பானங்களில் இருந்து, சாப்பிடும் உணவு வரை தயாரிக்கலாம். பால் கூட சேர்க்காத விகன் உணவு உட்கொள்பவர்களுக்கும் சைவ உணவு சாப்பிடுகிறவர் களுக்கும் கடல்பாசி அருமையான உணவு’’ என்கிறார் கிறிஸ் லாங்டன். கடல்பாசி பணம் கொழிக்கும் தொழிலாக உருவாகி வருகிறது.

கடல்பாசி இல்லாத இடங்களில் செயற்கையாகக் கடல்பாசி வளர்ப்பதும் சூழல்கேடுதான்…

பிரிட்டனைச் சேர்ந்தவர் 31 வயது ஜான் வாட்கின்சன். 10 ஆண்டுகள் ஒரு வங்கியில் ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தார். நல்ல சம்பளம், குடும்பம், நண்பர்கள் என்று இருந்தாலும் ஏனோ மகிழ்ச்சியாக இல்லை ஜான். உடனே தன்னு டைய வேலையை ராஜினாமா செய்தார். பாங்காக் வந்து, தென்கிழக்கு ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். லாவோஸுக்கு அருகில் டான் டெட் தீவில் நிரந்தரமாகத் தங்குவதற்கு முடிவு செய்தார்.

மூங்கிலால் செய்த ஒரு வீட்டைத் தானே உருவாக் கினார். தனக்குத் தேவையான உணவுகளைத் தானே விளைவித்துக் கொண்டார். தானே மீன்களைப் பிடித்தார். வாத்து, கோழிகளை வளர்த்தார். ஆரோக்கியமான, சுவையான உணவுகளைத் தானே தயாரித்துக்கொண்டார். தினமும் 7 மைல் தூரம் தீவைச் சுற்றி ஓடி வருகிறார். ஆற்றில் குளித்து, துவைத்துக்கொள்கிறார். ஜானிடம் தொலைக்காட்சி பெட்டியோ, தொலைபேசியோ இல்லை. மின்சாரம் மட்டும் பயன்படுத்திக்கொள்கிறார்.

’’படிப்பு, கம்ப்யூட்டர், இணையதளம் என்று நான் ஏதோ அதிகம் கற்றவன் என்று ஒருகாலத்தில் நினைத்திருந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகுதான் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று அறிந்துகொண்டேன். செடி வளர்ப்பு, பால் கறத்தல், மீன் பிடித்தல் என்று இங்குள்ள மக்களிடம்தான் ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டேன். ஒரு குழந்தையைப் போல அத்தனை கனிவாகச் சொல்லிக் கொடுத்தார்கள். இந்த வாழ்க்கைக் கொஞ்சம் கடினமானதுதான். ஆனால் இங்கே கிடைக்கும் மகிழ்ச்சி எனக்கு பிரிட்டனில் கிடைக்கவில்லை. குடும்பம், நண்பர்கள் பிரிவைத் தவிர வேறு எந்த வருத்தமும் எனக்கு இல்லை’’ என்கிறார் ஜான். இவருடைய இன்றைய வாழ்க்கை பிரிட்டன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியிருக்கிறது.

தனக்குத் தேவையானதைத் தானே செய்துகொள்ளும்போது மனநிறைவும் மகிழ்ச்சியும் வரும் ஜான்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x