Published : 31 Dec 2016 01:01 PM
Last Updated : 31 Dec 2016 01:01 PM

உலக மசாலா: பாலங்களில் சாதனைகளைப் படைத்து வருகிறது சீனா!

தென்மேற்கு சீனாவின் நிஜு நதி பள்ளத்தாக்கின் மீது கட்டப்பட்டிருக்கிறது பெய்பன்ஜியாங் பாலம். 3 ஆண்டுக் காலத்தில் 4,396 அடி நீளத்துக்குப் பாலம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. 146.7 மில்லியன் டாலர்கள் செலவாகியிருக்கிறது. பள்ளத்தாக்கில் இருந்து 565 மீட்டர் உயரத்தில் பாலம் இருக்கிறது. இந்தப் பாலத்தின் மூலம் ஸுவான்வேய் நகருக்கும் ஷுசெங் நகருக்கும் இடையேயான பயணத்தில் 4 மணி நேரம் மிச்சமாகியிருக்கிறது. உலகிலேயே மிக உயரமான பாலம் என்ற பெருமையும் பெய்பன்ஜியாங் பெற்றிருக்கிறது. உலகிலேயே இரண்டாவது, மூன்றாவது உயரமான பாலங்களும் சீனாவில்தான் உள்ளன.

பாலங்களில் சாதனைகளைப் படைத்து வருகிறது சீனா!

ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் ஜிம் க்ளாப், டிலன் பார்கர் வசிக்கும் நியூயார்க் குடியிருப்புக்கு சாண்டா க்ளாஸுக்கு அனுப்ப வேண்டிய நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து சேரும். ஒவ்வொரு கடிதத்தையும் பிரித்துப் படித்து, யாருக்கு என்ன தேவையோ அவற்றை அனுப்பி வைக்கும் பணியை இருவரும் செய்துவருகிறார்கள். ‘நாங்கள் அந்தக் குடியிருப்புக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது, சாண்டா க்ளாஸ் பெயரிட்டு, எங்கள் முகவரிக்குச் சில கடிதங்கள் வந்திருந்தன. ஏன் வந்தன, யார் இப்படி எங்கள் முகவரிக்கு அனுப்பி வைப்பது என்றெல்லாம் தெரியாது. கடிதங்களைப் படித்தபோது, அவர்கள் கேட்பதைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களை சாண்டா க்ளாஸ் பெயரில் அனுப்பி வைத்தோம். அடுத்த ஆண்டு தினமும் 25, 30 கடிதங்கள் வர ஆரம்பித்துவிட்டன. அந்த ஆண்டு மட்டும் 400 கடிதங்கள் வந்தன. ஒவ்வொருவருக்கும் பரிசுப் பொருட்களை வாங்கி, அனுப்பி வைத்தோம். அப்படியே ஒவ்வொரு ஆண்டும் கடிதங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வந்தது. பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள்தான் எழுதியிருப்பார்கள். சில கடிதங்கள் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் எழுதியிருப்பார்கள். துணிகள், பொம்மைகள், ஷுக்கள், கிறிஸ்துமஸ் விருந்துக்காக வான்கோழி போன்றவற்றைத்தான் அதிகம் கேட்பார்கள். நாங்கள் பரிசுகளை அனுப்புவதைக் கேள்விப்பட்டு நண்பர்கள், தெரிந்தவர்கள் எங்களுக்கு உதவ முன்வருகிறார்கள். அவர்களிடம் கொஞ்சம் கடிதங்களைக் கொடுத்து, பரிசுகளை அனுப்பி வைக்கச் சொல்கிறோம். நாங்கள் இருவரும் தற்போது லண்டனில் வசித்து வருகிறோம். நண்பர்களிடம் சொல்லி, நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு வரும் சாண்டா க்ளாஸ் கடிதங்களை அனுப்பி வைக்கச் சொல்கிறோம். எங்கள் நண்பர்கள் பிரித்துக்கொண்டது போக எங்களுக்கு மட்டும் 350 கடிதங்கள் வந்துசேர்ந்தன. இதுவரை நாங்கள் உதவி செய்த ஒரு குழந்தையைக் கூட நேரில் பார்த்ததில்லை, இவர்கள் எல்லாம் யார் என்றே தெரியாது. ஏழைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ’22-வது தெருவின் அற்புதம்’ என்ற பெயரில் ஓர் அறக்கட்டளை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறோம்” என்கிறார்கள் ஜிம்மும் டிலனும்.

ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்களுக்கு பூங்கொத்து!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x