Published : 19 Feb 2016 08:43 AM
Last Updated : 19 Feb 2016 08:43 AM

உலக மசாலா: பார்வை இழந்தும் நீர்ச்சறுக்கு விளையாட்டு

பிரேசிலைச் சேர்ந்த டெரெக் ராபெலோ நீர்ச்சறுக்கு விளையாடும்போது எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிறந்ததில் இருந்து ராபெலோவுக்குப் பார்வை தெரியாது. பார்வை இல்லாவிட்டாலும் மற்றவர்களைப் போலவே தன் மகனும் இயல்பாக இருக்க வேண்டும், சாகசம் நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தார் அவரது அப்பா. தினமும் அதிகாலை கடலுக்கு அழைத்துச் செல்வார். அலைகளின் ஓசைகளையும் நீரின் ஆவேசத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ராபெலோவுக்குப் பழக்கினார்.

அலைகளின் ஓசையை வைத்தே, அது எப்படிப்பட்ட அலை என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ராபெலோ நிபுணத்துவம் பெற்றார். நீர் விளையாட்டுகளில் இறங்கினார். ஆரம்பத்தில் ராபெலோவின் அப்பா பயிற்சியளித்தார். பிறகு சக நீர்விளையாட்டு வீரர்கள் ராபெலோவுக்கு உதவி வருகிறார்கள். ‘‘எனக்குப் பார்வை இல்லை என்பது குறித்து கவலைப்பட்டதில்லை. பார்வை இல்லாததால் எந்தவிதத்திலும் இழப்பைச் சந்திக்கவில்லை. சக வீரர்கள் என்னை ஒரு பார்வையற்றவனாக எப்பொழுதும் பார்த்ததில்லை. எல்லா விதங்களிலும் சரி சமமாகவே நடத்துகிறார்கள்.

உங்களுக்கு ஏதாவது கனவு இருந்தால், அதை உங்களால் செய்ய முடியும் என்று முதலில் நம்புங்கள். இல்லாவிட்டால் அதைச் செயல்படுத்துவது கடினமாகிவிடும்’’ என்கிறார் 23 வயது ராபெலோ. ’’பார்வையற்றவர்கள் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவது அத்தனை எளிதான விஷயமில்லை. அபாரமான ஆற்றல் இருந்தால்தான் இது சாத்தியம்’’ என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

பார்வை இல்லாமல் அலைகளைக் கையாள்வது ஆச்சரியமானது!



சீனாவில் வசிக்கும் ஸு ஷுன்லுவும் அவரது மனைவி லி ஹுவான்வும் 35 ஆண்டுகளாக ஒரு விருந்தினரைத் தங்கள் வீட்டில் தங்க வைத்து, பார்த்துக்கொள்கிறார்கள்! 35 ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் வந்துகொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஸு ஸென்னை எல்லோரும் கிண்டல் செய்தனர். அவர் பதில் பேசவும் இல்லை, தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் இல்லை. அந்தக் காட்சியைக் கண்ட தம்பதியர் இருவரும் ஸென்னை வீட்டுக்கு அழைத்து வந்தனர். தங்களது சிறிய வீட்டில் தங்க வைத்தனர். தங்களது குறைந்த வருமானத்தை ஸென்னுக்கும் பகிர்ந்தளிக்க அவர்கள் சிறிதும் தயங்கவில்லை.

ஆரம்பத்தில் புதிய சூழலில் ஸென்னால் பொருந்திக்கொள்ள முடியவில்லை. பல முறை வீட்டை விட்டு ஓடியிருக்கிறார். தம்பதியர் இருவரும் அவரைத் தேடிப் பிடித்து அழைத்து வருவார்கள். தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து, குடும்பப் பெயரையும் சூட்டினார்கள். நாளடைவில் சமைக்கவும் சுத்தம் செய்யவும் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளவும் கற்றுக்கொடுத்தனர். இன்று 70 வயதான ஸென் சிறு சிறு வேலைகள் செய்து, தனக்கான உணவைத் தானே தேடிக்கொள்ளும் அளவுக்கு வந்துவிட்டார்.

80 வயதைத் தாண்டிய தம்பதியர், இன்றும் ஸென்னை ஒரு குழந்தை போல அன்புடன் கவனித்துக்கொள்கிறார்கள். குடும்பம் பற்றி எப்பொழுது கேட்டாலும் பதிலே சொன்னதில்லை ஸென். இன்று யாராவது அந்தக் கேள்வியைக் கேட்டால் இந்தத் தம்பதியரைத்தான் தன் குடும்பம் என்கிறார்.

எதிர்பார்ப்பில்லாத அன்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x