Published : 10 Feb 2016 10:26 AM
Last Updated : 10 Feb 2016 10:26 AM

உலக மசாலா: பாரம்பரிய டயட்

நியூயார்க்கைச் சேர்ந்த சமையல் கலைஞர் பஸ்க்வாலே கோஸோலினோ 168 கிலோ எடை கொண்டவராக இருந்தார். இத்தாலியில் இருந்து நியூயார்க் வந்ததில் இருந்து தினமும் ஒரு பாக்கெட் ஓரியோ பிஸ்கெட்டும் 2,3 சோடா கேன்களும் குடிப்பார். எடை வெகு வேகமாக அதிகரித்துவிட்டது. எடை அதிகரிப்பால் எந்த நேரமும் மாரடைப்பு வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துவிட்டனர். மூட்டு வலி, முதுகு வலி, அல்சர் என்று பல பிரச்சினைகளும் வந்து சேர்ந்தன. தன்னுடைய எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் கோஸோலினோ. இத்தாலிக்குச் சென்றார்.

அங்கே பாரம்பரியமாகத் தயாரிக்கப்பட்டு வரும் பிட்ஸாவின் செய்முறையைக் கற்றுக்கொண்டார். சுத்திகரிக்கப்படாத மாவு, தண்ணீர், உப்பு, ஈஸ்ட் என்ற 4 பொருட்களை மட்டுமே சேர்த்து தயாரிக்கப்படும் பிட்ஸா இது. இதில் வெண்ணெய் உட்பட வேறு எந்தப் பொருட்களும் சேர்ப்பதில்லை. இந்த மாவை 36 மணி நேரம் ஊறவைத்து, 12 அங்குல பிட்ஸாவாக உருவாக்கினார். தக்காளி சாஸ், பச்சைக் காய்கறிகள் சேர்த்தார். இதிலிருந்து 600 கலோரிகள் கிடைத்தன. இது மதிய உணவுக்கானது. காலையில் பல வகை தானியங்கள், பழங்கள், ஆரஞ்சு ஜூஸ், காபி எடுத்துக்கொண்டார்.

இரவில் காய்கறிக் கலவை, கடல் உணவு, ஒரு தம்ளர் ஒயின். ஒரு நாளைக்கு 2,700 கலோரிகள் கிடைத்தன. சர்க்கரை சேர்க்காமல், கலோரிகள் குறைய ஆரம்பித்தபோது தலைவலியும் கோபமும் அதிகரித்தன. சில மாதங்களில் உடல் இந்த உணவுக்குப் பழகிவிட்டது. 3 மாதங்களில் 18 கிலோ குறைந்துவிட்டது. ‘‘தினமும் பிட்ஸா சாப்பிடுவதால் நொறுக்குத்தீனி சாப்பிடுவதை விட்டுவிட்டேன். உடலுக்குத் தேவையான சரிவிகித சத்துகள் கிடைத்தன. 7 மாதங்களில் 46 கிலோ எடை குறைந்துவிட்டது. இடுப்பு அளவு 48 அங்குலத்தில் இருந்து 36-க்கு வந்துவிட்டது.

‘‘இயற்கையான, பாரம்பரிய உணவுகள் மூலம் எடையைக் குறைக்க முடியும் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன். என்னுடைய டயட்டை மருத்துவர்களும் அங்கீகரித்துவிட்டனர். என் முகமே மாறிவிட்டது. மிக உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன். எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள். தங்களுக்கும் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள்’’ என்கிறார் கோஸோலினோ.

ஆச்சரியமான டயட்டாக இருக்கிறதே!



அமெரிக்காவில் வசிக்கும் சாராவுக்கு டிஸ்னியின் கதாபாத்திரங்கள் மீது சின்ன வயதில் இருந்தே ஆர்வம் அதிகம். அவர் வளர்ந்த பிறகு, எல்லோரும் டிஸ்னி இளவரசியைப் போலவே இருப்பதாகக் கூறினார்கள். மார்கெட்டிங் மேனேஜராகப் பணிபுரியும் சாரா, 10 லட்சம் ரூபாயைச் செலவு செய்து 17 இளவரசி உடைகளை வாங்கினார். வார இறுதி நாட்களில் டிஸ்னி இளவரசி போல ஆடைகள் அணிந்து, வலம் வந்தார். ‘‘நான் இவ்வளவு செலவு செய்வதோ, டிஸ்னி இளவரசியாக வலம் வருவதோ என் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் ஆச்சரியம் அளிக்கவில்லை.

ஒவ்வொரு ஆடையையும் தயாரிக்க 6 மாதங்கள் பிடித்தது. முழுநேரமும் டிஸ்னி இளவரசியாக வேலை செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். என்னுடைய பெரிய கண்களும் பொம்மை போன்ற உடலும் கச்சிதமாக டிஸ்னி கதாபாத்திரங்களுக்குப் பொருந்திவிடுகின்றன. பிறந்தநாள், திருமணம் போன்ற விழாக்களில் நான் பங்கேற்றால் 1 மணி நேரத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறேன். சிண்ட்ரெல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, லிட்டில் மெர்மயிட், ராபுன்ஸெல், ஸ்நோ ஒயிட் என்று எந்தக் கதாபாத்திரங்களில் வரச் சொன்னாலும் நான் வந்துவிடுவேன்’’ என்கிறார் சாரா.

கலக்குங்க பிரின்சஸ்!



கனடாவில் உள்ள க்யூபெக் சஃபாரிக்குச் சென்றது ஒரு குடும்பம். கார் நிறுத்தும் இடத்துக்கு பனிமான் ஒன்று வந்தது. அதைப் பார்த்த தந்தை, ‘‘உனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டு கேரட் ஒன்றைக் கொடுத்தார். சாப்பிட்ட பனிமான், பின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தையிடம் சென்றது. அந்தக் குழந்தை சிறிதும் பயப்படவில்லை. தன் அப்பாவைப் போலவே உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபடி, கேரட்டைக் கொடுத்தது. வாங்கிச் சாப்பிட்ட பனிமான், அடுத்து காருக்குள் தலையை விட்டு கேரட்களைத் தேடியது. குழந்தை சிறிது பயந்தாலும் ஆச்சரியமடைந்தது. மீண்டும் கேரட்டைக் கையில் எடுத்தது. பனிமான் அவள் கொடுக்கும் வரை காத்திருக்காமல், கையில் இருந்து தானே எடுத்துக்கொண்டது. பிறகு அங்கிருந்து நகர்ந்தது.

புது விலங்குகளிடம் குழந்தைகளை நெருங்க விடுவது ஆபத்தானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x