Published : 30 Aug 2015 12:29 PM
Last Updated : 30 Aug 2015 12:29 PM

உலக மசாலா: பாதுகாப்பான தண்ணீர் கிடைக்க வழி செய்த தெரசாவுக்கு வாழ்த்துகள்

தண்ணீரை வடிகட்டக்கூடிய புத்தகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு மூலம் உலகம் முழுவதும் பல கோடி மக்களுக்குச் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைக்க இருக்கிறது. புத்தகத்தைத் திறந்து ஒரு தாளை எடுத்து, அதன் மீது தண்ணீரை ஊற்றினால், மிக சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. இப்படிச் செய்வதன் மூலம் 99 சதவிகித பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டு விடுகின்றன. கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் தெரசா டான்கோவிச்சின் கடின உழைப்பில் தண்ணீரைச் சுத்தப்படுத்தும் புத்தகம் உருவாகியிருக்கிறது. மிகச் சிறிய வெள்ளி, செம்புத் துகள்களால் புத்தகத்தின் பக்கங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் வழியாக நீர் செல்லும்போது, பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டுவிடுகின்றன.

‘‘கண்ணீரைக் கூட இந்தத் தாளில் விட்டால், சுத்தமான தண்ணீராக மாறிவிடும். ஆறு, குளம், கிணறு என்று எங்கிருந்து தண்ணீர் எடுத்தாலும் இந்தப் புத்தகம் சுத்தப்படுத்திவிடும். வெள்ளி, செம்பு போன்றவற்றை வைத்து தண்ணீரைச் சுத்தம் செய்திருக்கிறார்கள். நான் அவற்றை புத்தக வடிவில் மாற்றியிருக்கிறேன். உலகிலேயே தண்ணீரைச் சுத்தம் செய்யக்கூடிய முதல் புத்தகத்தை நான்தான் கண்டுபிடித்திருக்கிறேன்’’ என்கிறார் தெரசா. புத்தகத்தின் ஒவ்வொரு தாளும் 100 லிட்டர் தண்ணீரைச் சுத்தம் செய்யும் ஆற்றல் படைத்தது. ஒரு புத்தகம் ஒரு மனிதரின் தண்ணீர்த் தேவையை 4 ஆண்டுகளுக்குச் சுத்தப்படுத்திக் கொடுத்துவிடும். விரைவில் இயந்திரங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன.

பாதுகாப்பான தண்ணீர் கிடைக்க வழி செய்த தெரசாவுக்கு வாழ்த்துகள்

உலகிலேயே மிக அழகான சிலந்தி ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பீகாக் சிலந்தி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. 3 முதல் 5 மி.மீ. அளவுக்கு இருக்கும் இந்தச் சிலந்தியின் முகம் நீல நிறமாக இருக்கிறது. கால்களில் கறுப்பு, வெள்ளைக் கோடுகள் காணப்படுகின்றன. பெண் சிலந்திகளைக் குடும்பம் நடத்த அழைக்கும்போது ஆண் சிலந்திகள் கால்களைத் தட்டி, நடனமாடுகின்றன. டாக்டர் ஓட்டோவும் டாக்டர் ஹில்லும் பீகாக் சிலந்திகளில் 21 முதல் 39 வகைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள்தான் சிலந்தியின் நடனத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். ‘’பீகாக் சிலந்தியைப் பார்க்கும் மக்கள், சிலந்திகளைப் பற்றிய தங்களின் கருத்துகளை நிச்சயம் மாற்றிக்கொள்வார்கள்’’ என்கிறார் ஓட்டோ.

அடடா! இத்தனைக் காலம் எங்கே ஒளிந்திருந்தாய்?

பெண்களின் பிரசவ வேதனையை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, சீனாவில் செயற்கையாக ஆண்களுக்குப் பிரசவ வலி கொடுக்கப்பட்டது. இப்பொழுது ’மிஸ்டர் மம்மி’ என்ற பெயரில் ஒரு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேரும் ஆண்கள் செயற்கையாக பிரசவ வலியை உணர்வார்கள். குழந்தையின் நனைந்த துணிகளை அடிக்கடி மாற்றிவிடுவார்கள். பொம்மை அழும்போது, தோளில் தூக்கிக்கொண்டு நடப்பார்கள். இரட்டைக் குழந்தைகள் என்றால் 2 பொம்மைகளை வைத்துப் பயிற்சி. இரண்டாவது பிரசவம் என்றால், முதல் குழந்தையையும் கவனித்துக்கொண்டு, பிறந்த குழந்தையையும் கவனிக்கும் விதத்தில் விதவிதமாகப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 24 மணி நேரம் அளிக்கப்படும் பயிற்சியின்போது, ஆண்கள் பிரசவ உடையை அணிந்துகொள்ள வேண்டும். பிரசவத்தின்போது கொடுக்கப்படும் உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும்.

‘‘பயிற்சியின்போது என்னால் வேறு எதையும் சிந்திக்கவே முடியவில்லை. குழந்தைக்குப் பாலூட்டுவது, உடை மாற்றுவது, தாலாட்டுவது, தூங்க வைப்பது என்று அடுத்தடுத்து வேலைகள் இருந்துகொண்டே இருந்தன. நிம்மதியாக சாப்பிடவோ, சிறிது நேரம் தூங்கவோ முடியவில்லை. பெண்களின் கஷ்டம் இப்பொழுதுதான் தெரிகிறது’’ என்கிறார் பயிற்சி எடுத்த ஒருவர். ‘‘பிரசவ வலியையோ, குழந்தை வளர்ப்பின் கஷ்டத்தையோ அறியாத ஆண்கள், பெண்களை மதிக்கத் தவறி விடுகிறார்கள். சிறிய பிரச்சினை என்றாலும் விவாகரத்து வாங்கிச் சென்றுவிடுகிறார்கள். பெண்கள்தான் தனியே குழந்தைகளுடன் கஷ்டப்படுகிறார்கள். ஆண்களின் இந்த எண்ணத்தை மாற்றுவதற்காகவே இந்தப் பயிற்சியை ஆரம்பித்திருக்கிறேன். பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் ஒருநாளும் பெண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க மாட்டார்கள். குழந்தை வளர்ப்பில் உதவுவார்கள்’’ என்கிறார் ஜேன் ஜியாங்.

இந்தப் பயிற்சியை உலகம் முழுவதும் கொண்டுவந்தால், பெண்களின் பிரச்சினைகள் காணாமல் போய்விடலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x