Published : 21 Feb 2015 10:53 AM
Last Updated : 21 Feb 2015 10:53 AM

உலக மசாலா: பழமையான பர்கர்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எட்வர்ட் நீட்ஸ், கேஸி டீன் இருவரும் உலகிலேயே மிகப் பழைமையான பர்கர் தங்களிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு பார்டிக்காக பர்கர் வாங்கியிருக்கிறார்கள். அதில் ஒரு பர்கர் மீதமாகிவிட்டது.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தவர்களுக்கு ஆறு மாதம் வரை நினைவே வரவில்லை. அதற்குப் பிறகும் ஏனோ அதை எடுக்கவே இல்லை. இருபதாண்டுகளுக்குப் பிறகு பர்கரைப் பிரித்துப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.

ஏனென்றால் இப்பொழுதும் சாப்பிடக்கூடிய நிலையிலேயே நன்றாக இருந்தது பர்கர். உலகின் பழமையான பர்கரைப் படம் பிடிப்பதற்காக தொலைக் காட்சிகளில் இருந்து வந்தனர். செங்கல் போல் உறைந்து இருந்த பர்கரை, சுவைத்துப் பார்க்க யாருக்கும் தைரியம் வரவில்லை. ‘சீனியர் பர்கர்’ என்ற பட்டம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது!

ம்ம்… ஒரு மறதி சாதனையாகிவிட்டது!

அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டென் ஆலிஸ் ஃபேஷன் டிசைனர். ஃப்ளோரிடாவிலும் நியூ யார்க்கிலும் தன்னுடைய நிறுவனத்தை நடத்தி வருகிறார். சுழலியலில் சின்ன வயதிலிருந்தே அக்கறை கொண்டவர் ஆலிஸ். அதனால் குப்பையில் எறியும் பிளாஸ்டிக் காகிதங்கள், கூல்ட்ரிங் பாட்டில்கள் போன்றவற்றை வைத்து ஆடைகளை உருவாக்கி வருகிறார்.

சுற்றுச் சூழலைப் பற்றிக் கவலைப்படாமல் ஒவ்வொரு மனிதரும் ஒரு நாளைக்கு எவ்வளவு பொருட்களைக் குப்பையில் எறிகிறோம். அவற்றை எல்லாம் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தினால் நல்லதுதானே என்ற எண்ணத்தில்தான் இந்த ஆடைகளை உருவாக்குவதாகச் சொல்கிறார் ஆலிஸ்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆடைகள் பிரபலமடைந்து வருகின்றன. ஃபேஷன் ஷோக்களில் கூட அணிந்து செல்கிறார்கள் என்பதில் ஆலிஸுக்கு மகிழ்ச்சி.

நல்ல முயற்சிதான்… ஆனால் இதை அணிந்தால் இயல்பாக இருக்க முடியுமா?

உக்ரைனைச் சேர்ந்த சாஷாவும் சீனாவைச் சேர்ந்த நெட்டி ஸென்ஸும் கடந்த ஓராண்டு காலமாக நல்ல நண்பர்களாகப் பழகி வந்தனர். உக்ரைன் சென்று சாஷா குடும்பத்துடன் பழகியிருக்கிறார் நெட்டிஸென்ஸ். அதேபோல சீனாவில் நெட்டிஸென்ஸ் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் எடுத்திருக்கிறார் சாஷா.

ஆனாலும் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி சாஷாவிடம் கேட்க ஏனோ நெட்டிஸென்ஸுக்குத் தயக்கம் இருந்தது. நன்றாக யோசித்தவர், பாண்டா போல் உடை அணிந்துகொண்டார். சாஷாவிடம் சென்று, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படிக் கேட்டார்.

பாண்டா முகமூடியை விலக்கிப் பார்த்த சாஷா மகிழ்ச்சியோடு சம்மதம் சொன்னார். ‘சாஷாவுக்குப் பாண்டா என்றால் மிகவும் விருப்பம். அவருடைய செல்லப் பெயரே பாண்டாதான்! பாண்டா உருவத்தில் வந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார் என்று நம்பினேன். அதேபோல நடந்துவிட்டது’ என்று சந்தோஷப்படுகிறார் நெட்டிஸென்ஸ்.

வாழ்க மணமக்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x