Published : 11 Apr 2015 11:02 AM
Last Updated : 11 Apr 2015 11:02 AM

உலக மசாலா: பழங்கால செயற்கை ஓவியங்கள்!

பிரான்ஸில் கண்டறியப்பட்ட குகை ஓவியங்கள் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்த ஓவியங்கள் எல்லாம் 36 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களால் தீட்டப்பட்டவை. பிரான்ஸில் உள்ள பழங்காலக் குகையிலிருந்து 36 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களை எல்லாம் புகைப்படங்கள் எடுத்தனர்.

பிறகு அதேபோல ஒரு குகையை செயற்கையாக உருவாக்கினார்கள். இதில் ஆயிரம் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. 425 ஓவியங்களில் கம்பளி காண்டாமிருகங்களும் கம்பளி யானைகளும் காணப்படுகின்றன. குகையின் வெளிப்பகுதி நவீனமாக அமைக்கப்பட்டிருந்தாலும் உள்ளே அச்சு அசலாக நிஜக் குகையை ஒத்திருக்கின்றன.

20 ஆண்டுகளுக்கு முன்பு நிஜக் குகை கண்டறியப்பட்டது. மிகப் பழமையான இந்த ஓவியங்களைக் காப்பாற்றி, பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தச் செயற்கை குகை அமைக்கப்பட்டிருக்கிறது. 6 ஆயிரம் டிஜிட்டல் புகைப்படங்களைப் பார்த்து அப்படியே மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

அடடா! அற்புதமான ஓவியங்கள்.. அற்புதமான பணி!

சீனாவில் வசிக்கும் 34 வயது ஸாங் யியி மிகப் பெரிய எழுத்தாளர். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாக இல்லை. தன்னுடைய குழந்தை பருவத்து ஹீரோவான வில்லியம் ஷேக்ஸ்பியரைப் போல தன் உருவமும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவு செய்து, 10 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். கண், கண் இமை, மூக்கு என்று ஒவ்வோர் உறுப்பும் அறுவை சிகிச்சை செய்வதற்குப் பல மாதங்கள் ஆகின. இவ்வளவு செய்தவர் தன்னுடைய நீளமான முடியை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை.

ஸாங் இதுவரை ராயல்டியாக சம்பாதித்த அத்தனை பணமும் அழகுபடுத்திக்கொள்வதற்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர் ஸாங். ஆங்கில நாடகங்களில் பங்கேற்றபோது, ஷேக்ஸ்பியர் போல தன் உருவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் வந்தது. பல வருடப் போராட்டங்களுக்குப் பிறகு, ஸாங் மிகச் சிறந்த எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைத்தது. பெரும் பணக்காரராக மாறினார். தன்னுடைய இந்த வளர்ச்சி ஷேக்ஸ்பியரால்தான் வந்தது என்று கருதும் ஸாங், அவரைப் போல உருவத்தை மாற்றிக்கொள்ள விரும்பினார். எண்ணத்தைச் செயல்படுத்தியும் விட்டார்.

எவ்வளவு செலவு செய்தாலும் நீங்கள் அவராக முடியாது ஸாங்…

எகிப்தில் உள்ள கெய்ரோ சுரங்க ரயில் நிலையத்தின் சுவர்களுக்கு நடுவே 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பூனை மாட்டிக்கொண்டது. அந்தப் பூனையை மீட்கும் வழி தெரியவில்லை. பூனையின் அலறல் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கும். வயதான அப்டோ பூனையை மீட்கப் பெரும்பாடுபட்டார். ஆனால் முடியவில்லை.

அதனால் தினமும் பூனைக்கு வேண்டிய உணவுகளையும் தண்ணீரையும் சுவரில் உள்ள துளை வழியே போட்டு விடுவார். 5 ஆண்டுகள் இப்படியே இருட்டுக்குள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தது பூனை. சுவற்றை ஒட்டிய கடைகள் எல்லாம் தற்போது காலி செய்யப்பட்டுவிட்டன. சுவற்றை உடைத்து, பூனையை மீட்டிருக்கிறார் அப்டோ. இதுவரை இப்படி ஒரு மீட்புப் பணி எகிப்தில் நடைபெற்றதில்லை என்கிறார்கள் மீட்புப் படையினர்.

பூனைக்கு ஆயுசு கெட்டி…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x