Published : 12 Mar 2015 10:25 AM
Last Updated : 12 Mar 2015 10:25 AM

உலக மசாலா: பல் தேய்த்துவிடும் பறவை!

சிட்னியில் வசிக்கும் ப்ளூம் குடும்பத்தினர் மேக்பை பறவையை வளர்த்து வருகிறார்கள். மனிதர்கள் செய்யும் பல செயல்களையும் இந்த மேக்பை செய்து அசத்துகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டு, பெங்குவின் என்று பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்கள். ப்ளூம் மகன்களுடன் படுக்கையில் படுத்து தூங்குகிறது. அதிகாலை எல்லோரையும் எழுப்பி விடுகிறது.

பல் தேய்க்கும்போது தோளில் அமர்ந்து, பற்களைச் சுத்தம் செய்துவிடுகிறது. உடற்பயிற்சி செய்கிறது. குழந்தைகளைப் போலவே உரக்கக் குரல் கொடுத்து அழைக்கிறது. பாடுகிறது. மேஜையில் அமர்ந்து சாப்பிடுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் அலகால் முத்தம் கொடுத்து, பள்ளிக்கு அனுப்பி வைக்கிறது. கம்ப்யூட்டரில் வேலை செய்வதை வேடிக்கை பார்க்கிறது.

கால்குலேட்டரைக் கால்களால் தட்டி விளையாடுகிறது. குழந்தைகள் படிக்கும்போது அவர்களின் கைகளை ஆதரவாகத் தன் கால்களால் பிடித்தபடி படுத்துக் கிடக்கிறது. குழந்தைகளுடன் சேர்ந்து விதவிதமாக போஸ் கொடுக்கிறது.

ஒரு நாயைப் போல இத்தனை அன்பாக பறவை பழகுவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன் என்கிறார் ப்ளூம். பெங்குவின் மற்றும் ப்ளூம் குடும்பத்தினரின் புகைப்படங்கள் இணையதளங்களில் அமோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இப்பறவையின் அன்பு ஆச்சரியம் தருகின்றது

ஜப்பானியக் கண்டுபிடிப்பாளர் கொய்சி உச்சிமுரா பேசும் தலையணை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். எந்நேரமும் வேலை வேலை என்று இருக்கும் இளம் வயதினர், தனிமையில் இருக்கும்போது மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் தனிமையைப் போக்குவதற்காக இந்தத் தலையணையை உருவாக்கியிருக்கிறார். ஓய்வாக இருக்கும் நேரத்தில் தலையணையுடன் பேச ஆரம்பிக்கலாம்.

அதாவது தலையணையைத் தொட்டால், அது பேசும். மெதுவாகத் தொட்டால் மென்மையாகப் பேசும். கொஞ்சம் அழுத்தமாகத் தொட்டால் அதற்கு ஏற்றவாறு பதில் அளிக்கும். மிக மோசமாகத் தலையணையை அழுத்தினால் எச்சரிக்கை செய்துவிட்டு, அதற்குப் பிறகு பேசாமல் தன் எதிர்ப்பைக் காட்டும்.

அதனால் தலையணையைப் பயன்படுத்துகிறவர்கள் கண்டிப்பாக, அதை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். 500 விதமான பேச்சுகளைத் தலையணையில் ஏற்றியிருப்பதால், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உரையாடலாம் என்கிறார் உச்சிமுரா. தலையணையின் விலை 10 ஆயிரம் ரூபாய்.

ஆச்சரியம்தான்… ஆனால் மனிதர்களின் இடத்தைத் தலையணையால் ஈடு செய்ய முடியுமா?

சீனாவின் அதிக எடை கொண்ட மனிதராக 26 வயது லியாங் யங் வலம் வந்தார். 222 கிலோ எடையைச் சுமக்க முடியாமல் திணறி வந்தவருக்கு, உதவ முன்வந்தது ஒரு மருத்துவமனை. ஆம்புலன்ஸில் லியாங்கை ஏற்ற முடியவில்லை. ஒரு ட்ராலியில் வைத்து, இரண்டு வீரர்கள் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சையுடன் ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும் அளிக்கப்பட்டன. மூன்று மாதங்களில் 82 கிலோ எடையைக் குறைத்துவிட்டார் லியாங். இன்று குறைந்த காலத்தில் அதிக எடையைக் குறைத்த மனிதர் என்ற சிறப்பைப் பெற்றுவிட்டார்!

அட! லியாங் என்ன செஞ்சாலும் சாதனையாயிருதே…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x