Published : 08 Jan 2017 11:35 AM
Last Updated : 08 Jan 2017 11:35 AM

உலக மசாலா: பலநாள் திருடர் ஒருநாள் அகப்பட்டுக்கொண்டார்!

தாய்லாந்தைச் சேர்ந்த 41 வயது பிரபிட்சா ஸ்மாட்சோரபுத், பள்ளி ஆசிரியராக அமெரிக்காவின் விர்ஜினியாவில் வேலை செய்துவந்தார். உலகின் முன்னணி நிறுவனங்களின் விலை மதிப்பு மிக்க கைப்பைகளை ஆன்லைன் மூலம் வாங்குவார். தான் ஆர்டர் செய்த கைப்பையைப் போல அச்சு அசலாக சீனாவில் இருந்து கைப்பைகளை வாங்கி வைத்திருப்பார். ஒரிஜினல் பை கைக்கு வந்தவுடன் பிடிக்கவில்லை என்று, போலி பையைத் திருப்பி அனுப்பி வைத்துவிடுவார். அந்த நிறுவனமும் பைக்குரிய பணத்தை மீண்டும் அவர் வங்கிக்கே திருப்பிச் செலுத்திவிடும். ஒரிஜினல் பைகளை ஆன்லைனில் நல்ல விலைக்கு விற்றுவிடுவார். அமெரிக்காவின் 12 மாகாணங்களில் இப்படிப் பைகளை வாங்குவதும் போலி பைகளை அனுப்பி வைப்பதுமாக இருந்தார். இதற்காக 16 விதமான கடன் அட்டைகளைப் பயன்படுத்திவந்தார். கோடிக்கணக்கில் பணம் புரண்டது. வெற்றிகரமாகத் தொழில் சென்றுகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் டி.ஜே. மாக்ஸ் நிறுவனம் பிரபிட்சாவின் ஏமாற்று வேலையைக் கண்டுபிடித்துவிட்டது. காவல்துறையின் உதவியோடு அதிரடியாக பிரபிட்சாவின் வீட்டுக்குள் நுழைந்தபோது 572 கைப்பைகளைக் கைப்பற்றினர். இதில் ஒரிஜினல் பைகளும் போலி பைகளும் கலந்திருந்தன. டி.ஜே. மாக்ஸ் நிறுவனத்தில் மட்டும் 226 கைப்பைகளை வாங்கி, போலி பைகளை அனுப்பி வைத்திருக்கிறார். இதன் மூலம் பல கோடி ரூபாய்களை இந்த நிறுவனத்தில் இருந்து மட்டும் பெற்றிருக்கிறார். பிரபிட்சா கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை நடைபெற்று வந்தது. சீன நிறுவனத்துக்குப் போலி கைப்பைகளைக் கேட்டு அவர் அனுப்பிய இமெயில்களைக் கண்டுபிடித்தனர். பிரபிட்சாவுக்கு எதிராக ஏகப்பட்ட சாட்சிகள் இருந்ததால், வேறுவழியின்றி குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். கோடிக்கணக்கில் இவர் செய்த ஏமாற்று வேலைக்கு 40 ஆண்டுகளாவது சிறைத் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் பிரபிட்சாவின் வழக்கறிஞர், இவர் குழந்தையிலிருந்து பெற்றோரால் மனத்தாலும் உடலாலும் மிக மோசமாக நடத்தப்பட்டவர். அதனால் மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று வாதாடினார். இறுதியில் 30 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஏமாற்றியவர்களுக்கு உரிய பணத்தையும் கொடுத்துவிட வேண்டும் என்று கூறியிருக்கிறது நீதிமன்றம்.

பலநாள் திருடர் ஒருநாள் அகப்பட்டுக்கொண்டார்!

பிரேசிலில் வசிக்கும் வயதான பெண்மணி ஒருவர், பொம்மையைக் கடவுள் என்று நினைத்து தவறுதலாக வழிபட்டு வந்திருக்கிறார். “என் மகள் தன் பாட்டி வணங்கும் உருவங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதைக் கண்டதும் என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. போச்சுக்கீசிய நாட்டைச் சேர்ந்த புனிதத் துறவி அந்தோணி என்று நினைத்து, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவலில் வரக்கூடிய எல்ரான்ட் பொம்மையை வணங்கி வந்திருக்கிறார் பாட்டி. இரண்டு சிலைகளையும் அருகில் வைத்துப் பாட்டிக்கு வித்தியாசத்தைக் காட்டினோம். என் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை என்று வருந்தினார்” என்கிறார் கேப்ரியலா பிராண்டோ.

இதில் பாட்டியின் தவறு ஒன்றுமில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x