Published : 11 Sep 2016 11:09 AM
Last Updated : 11 Sep 2016 11:09 AM

உலக மசாலா: பனி மனிதன், இனிமேல் கிடைக்கப் போகிறானா?

பாகிஸ்தானில் உள்ள லாண்டி கோட்டல் ராணுவ முகாமில் ஓர் ஆலமரம் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கிறது. தடி மனான 4 சங்கிலிகள் மரத்தில் இருந்து நிலத்துக்குள் புதைக்கப் பட்டிருக்கின்றன. மரத்தில் இருக்கும் ஒரு பலகையில், ‘நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. 1898-ம் ஆண்டு ஜேம்ஸ் ஸ்க்விட் என்ற பிரிட்டிஷ் அதிகாரி, மது அருந்திவிட்டு, மரம் தன் மீது பாய்ந்து மிரட்டுவதாகச் சொன்னார். உடனே ஓர் அதிகாரியை அழைத்து, இந்த மரத்தைக் கைது செய்யுங்கள் என்று ஆணையிட்டார். அவர் சொன்னது போலவே அதிகாரியும் சங்கிலியால் மரத்தைப் பிணைத்தார். அந்தச் சங்கிலிகள் நூறு ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அப்படியே தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பகுதியில் வசித்த பழங்குடி மக்கள், பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தால் மரத்துக்கு ஏற்பட்டுள்ள கதிதான் உங்களுக்கும் என்று எச்சரிக்கும் விதமாகவும் இந்த மரம் கைது செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இந்த மரத்துக்கு இன்னும் விடுதலை கிடைக்கலையே!

ட்டி என்று அழைக்கப்படும் பனி மனிதன் பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. சீனாவில் வசிக்கும் 62 வயது ஜாங் ஜியான்ஸிங், பனி மனிதனைத் தேடி கடந்த 22 ஆண்டுகளாக காடுகளில் அலைந்து கொண்டிருக்கிறார். 1994-ம் ஆண்டு மலைப் பகுதியில் வசிக்க ஆரம்பித்தார் ஜாங். அப்பொழுதுதான் பனி மனிதன் ஆர்வம் வந்தது. 6 அடி உயரமும் சிவப்பு ரோமங்களும் கொண்ட பனி மனிதனைப் பற்றி நிறைய விஷயங்களைச் சேகரித்தார். 22 ஆண்டுகளாக மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிகிறார். ஆண்டுக்கு 10 மாதங்கள் பனி மனிதன் தேடுதல். 2 மாதங்கள் நாட்டுக்குள் வந்து, தேவையான பொருட்களை வாங்குவது, ஓய்வெடுப்பது, தான் சேகரித்தவற்றை ஆவணப்படுத்துவது என்று இருக்கிறார் ஜாங். பச்சை ராணுவ உடை அணிந்து, கேமராவுடன் தினமும் பல மைல் தூரம் பயணம் செய்கிறார். பெரிய பாறைகள், குகைகள், பெரிய மரப் பொந்துகள் என்று ஒவ்வோர் இடமாகத் தேடி அலைகிறார். இதுவரை பனி மனிதனின் 100 முடிகளைச் சேமித்து வைத்திருப்பதாகவும் 3 ஆயிரம் காலடித் தடங்களை ஒளிப்படம் எடுத்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார். 19 முறை பனி மனிதனுக்கு அருகில் தான் இருந்ததாகவும் விரைவில் நேருக்கு நேர் சந்தித்துவிடும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் காத்திருக்கிறார். ’’நான் சீனாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்திவிட்டேன். அப்படி ஓர் உயிரினமே கிடையாது. பனி மனிதனின் முடி, பாதச் சுவடுகள், எலும்புகள் என்று சொல்லப்படுபவை மனிதர்கள், குரங்குகள், கரடிகளின் முடி, எலும்புகள்தான்! பனி மனிதனைத் தேடுவது வீண் வேலை’ என்கிறார் பெய்ஜிங் அருங்காட்சியகத்தின் முன்னாள் அதிகாரி. ஆனால் அறிஞர்களின் வாதத்தை மறுக்கிறார் ஜாங். ஒருநாள் பனி மனிதனைக் கண்டுபிடித்து, விஞ்ஞானிகளின் கூற்றைத் தவறு என்று நிரூபிப்பேன் என்கிறார்.

பனி மனிதன், இனிமேல் கிடைக்கப் போகிறானா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x