Published : 30 Dec 2015 10:11 AM
Last Updated : 30 Dec 2015 10:11 AM

உலக மசாலா: பனிக்குள் புதைந்த நரி!

அமெரிக்காவில் உள்ள எல்லோஸ்டோன் நேஷனல் பார்க்கில் படங்கள் எடுப்பதற் காகக் காத்திருந்தார் புகைப்படக்காரர் டொனால்ட் ஜோன்ஸ். பனிப் பிரதேசத்தில் ஒரு செந்நரி உணவு தேடி வந்தது. நரிக்குத் தெரியாமல் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று எலி ஓடி வந்தவுடன் நரிக்குக் கொண்டாட்டமாகிவிட்டது. எலியைத் துரத்திச் சென்றது. ஒரு வளைக்குள் நுழைந்துவிட்டது எலி. உடனே நரி மூன்றடி உயரத்துக்குத் தாவி, பனி வளைக்குள் குதித்தது.

பாதி உடல் பனிக்குள் புதைந்துவிட்டது. பின்னங்கால்களும் வாலும் மேலே தூக்கிக்கொண்டிருந்தன. எலியை வாயில் கவ்வியபடி சில நிமிடங்களில் வளையை விட்டு வெளியே வந்தது நரி. ‘‘2 மணி நேரமாகக் காத்திருந்தேன். என் வாழ்நாளில் இதுபோன்ற அற்புதமான படத்தை இதுவரை எடுத்ததில்லை. நரி குதித்த வேகத்தைப் பார்த்து, மூக்கு உடைந்திருக்கும் என்றுதான் நினைத்தேன். அட்டகாசமாக வேட்டையாடி மேலே கம்பீரமாக எழுந்து வந்தது!’’ என்கிறார் டொனால்ட் ஜோன்ஸ்.

ஆஹா! எவ்வளவு லாவகம்!

அல்ஜீரியாவில் வசிக்கும் 70 வயதுக்கு மேல் உள்ள முதிய பெண்கள் தங்கள் முகத்திலும் உடலிலும் டாட்டூ குத்திக்கொண்டிருக்கிறார்கள். டாட்டூ குத்திக்கொண்டுள்ளவர்களை அழகான பாட்டிகள் என்று அழைக்கிறார்கள் குழந்தைகள். ஆனால் இன்று டாட்டூ குத்துதல் இஸ்லாமுக்கு எதிரானது என்று சொல்வதால், பாட்டிகள் மிகுந்த குற்றவுணர்வோடு இருக்கிறார்கள். 106 வயது ஃபாட்மா டர்னவ்னி, ‘‘அந்தக் காலத்தில் டாட்டூ குத்துவது குற்றம் என்றெல்லாம் கருதப்படவில்லை. அழகுக்காக என் முகத்தில் டாட்டூ குத்தினார்கள்’’ என்கிறார். ‘‘என்னுடைய வெள்ளி நகைகளை விற்றுதான் 7 தடவை டாட்டூ குத்திக்கொண்டேன். ஒவ்வொரு தடவையும் வலியால் துடிப்பேன்.

என் கண்ணீரில் மை கரைந்துவிடாதா என்று கூட ஏங்கியிருக்கிறேன்’’ என்கிறார் அயிஷா. ‘‘என்னுடைய 3 குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். நான் துயரத்தில் இருந்தபோது, என் சித்தி டாட்டூ குத்திக்கொண்டால் இனி பிறக்கும் குழந்தைகள் பிழைக்கும் என்றார். நானும் நம்பிக்கையோடு குத்திக்கொண்டேன். அதற்குப் பிறகு 6 குழந்தைகள் பிறந்தன. டாட்டூ காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் விஷயம். திடீரென்று மதத்துக்கு எதிரானது என்றால் என்ன செய்ய இயலும்?’’ என்கிறார் 68 வயது ஹொவ்காலி.

ம்...வயதான காலத்தில் இப்படி ஒரு டென்ஷனா?

அமெரிக்காவில் உள்ள யூட்டா பாலைவனத்தைச் சுற்றிப் பார்க்க ஏராளமானவர்கள் வருகிறார்கள். இங்குள்ள வெப்பநீர் ஊற்றுகளில் இருந்து 75 டிகிரி செல்சியஸ் கொதிநிலையில், நிமிடத்துக்கு 757 லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது. இந்தத் தண்ணீர் ஊற்றுகளில் இருந்து வெளியேறி பாலைவனத்தின் பல பகுதிகளுக்கும் ஓடி வருகிறது. அந்தத் தண்ணீரை 2 நீச்சல் குளங்களிலும் சில குளிக்கும் தொட்டிகளிலும் பிடிக்கிறார்கள். இங்கு வரும்போது தண்ணீரின் வெப்ப நிலை பாதியாகக் குறைந்து, குளிப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்து விடுகிறது. பல்வேறு கனிமங்கள் நிறைந்த தண்ணீர் என்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

வெந்நீரில் மணிக்கணக்கில் குளித்தால் தங்களின் நோய் கூட காணாமல் போய்விடுவதாகவும் மிகவும் புத்துணர்ச்சியோடு இருப்பதாகவும் சொல்கிறார்கள். கால்சியமும் மக்னீசியமும் அதிக அளவில் தண்ணீரில் இருப்பதால் தொட்டிகளில் பாறை போல படிந்துவிடுகின்றன. இதற்காகவே தினமும் தொட்டிகளைச் சுத்தம் செய்துவிடுகிறார்கள்.

உலகத்தில் இருக்கும் அனைத்தும் தனக்காவே இருக்கிறது என்று நினைக்கிறான் மனிதன்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x