Published : 08 Nov 2015 11:27 AM
Last Updated : 08 Nov 2015 11:27 AM

உலக மசாலா: பச்சிளம் குழந்தை பயமறியாது!

பிரேசிலின் மோஸ்டர்டாஸ் நகரில் வசிக்கிறான் 17 மாதக் குழந்தை லோரென்ஸோ. வீட்டுக்குள் வேலை செய்துகொண்டிருந்த அவனது அம்மா, ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அதிர்ந்து போய்விட்டார். லோரென்ஸோவின் வாய், சட்டை முழுவதும் ரத்தம். அருகில் ஒரு பாம்பு. உடனே தன் கணவரை அழைத்தார். எந்தப் பாம்பு கடித்தது என்று தெரிந்தால் சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும் என்பதால் பாம்பை அடித்து, ஒரு பையில் போட்டுக்கொண்டனர். மருத்துவமனைக்கு விரைந்தனர். லோரென்ஸோவுக்கு முதலுதவி அளித்தனர். பிறகுதான் தெரிந்தது, குழந்தையின் உடலில் எங்குமே பாம்புக்கடி இல்லை. நன்றாகப் பரிசோதித்தபோது, உடலில் விஷமும் இல்லை. பாதிக்கப்பட்டது குழந்தை அல்ல, பாம்புதான். ‘‘குழந்தைக்கு அருகே கட்டுவிரியன் பாம்பு தீண்ட வந்தபோது, அது ஒரு பொம்மை என்று நினைத்த லோரென்ஸோ தலையைப் பிடித்துக் கடித்துவிட்டான். சரியான இடத்தில் கடி பட்டதால் பாம்பு காயமடைந்துவிட்டது’’ என்றார் மருத்துவர் கில்மர் கார்டெரி. ‘‘எங்கள் வீட்டு நாய்தான் பாம்பைக் கடித்திருக்கும் என்று நினைத்தோம். மகன்தான் பாம்பைக் கடித்திருக்கிறான் என்று தெரிந்துவிட்டது. நல்லவேளை குழந்தை பிழைத்துவிட்டான்’’ என்று மகிழ்கிறார்கள் பெற்றோர்கள். கட்டுவிரியன் பாம்புகள் அதிக விஷம் கொண்டவை. கடிபட்டவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் உயிரிழப்பை ஏற்படுத்திவிடக் கூடியவை.

பச்சிளம் குழந்தை பயமறியாது!

பிரிட்டனைச் சேர்ந்த மேகியும் அவரது கணவர் ஆன்டியும் ஹெர்குலஸ் என்ற கரடியை வளர்த்து வந்தனர். 1974-ம் ஆண்டு குட்டியாகத் தத்தெடுத்தனர். தங்கள் குழந்தை போலவே அன்பாகக் கவனித்துக்கொண்டனர். கரடிக்குரிய எந்த குணத்தையும் வெளிப்படுத்தாமல் ஹெர்குலஸும் வளர்ந்து வந்தது. சமைக்கப்பட்ட உணவைத்தான் உண்ணும். தேநீர் பருகும். வீடு முழுவதும் சுற்றி வரும். ஹெர்குலஸின் 10-வது பிறந்த நாளை கேக் வெட்டி, சிறப்பாகக் கொண்டாடினர். 8 அடி உயரம் வளர்ந்த ஹெர்குலஸுக்கு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மேகி, ஆன்டியுடன் பல்வேறு இடங்களுக்குச் சுற்றுப் பயணம் செய்திருக்கிறது ஹெர்குலஸ். 2000-ம் ஆண்டில் 26 வயதில் ஹெர்குலஸ் மரணம் அடைந்தது. ‘‘எங்கள் மகனாகவே இருந்தான் ஹெர்குலஸ். அவன் இறந்து 15 ஆண்டுகள் ஆகியும் அவனை எங்களால் மறக்க முடியவில்லை. ஒவ்வொரு நொடியும் அவன் நினைவாகவே இருக்கிறது. எங்களுடன் மேஜையில் அமர்ந்து தேநீர் அருந்துவான். சாப்பிடுவான். நடைப்பயிற்சி செய்வான். விளையாடுவான். எங்கள் தோள் மீது கால்களைப் போட்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பான்’’ என்கிறார் ஆன்டி. ஹெர்குலஸ் ரோமங்களை வைத்து மேகியோ, ஒரு கம்பளி செய்திருக்கிறார். நினைவு வரும்போதெல்லாம் அதை எடுத்து முகர்ந்து பார்த்துக்கொள்கிறார். 15 ஆண்டுகளுக்குப் பிறகும் வலி குறையவில்லை என்று சொல்லும் இந்தத் தம்பதியர், ஹெர்குலஸ் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.

பிரிவு துயரமானது…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x