Published : 25 May 2016 11:45 AM
Last Updated : 25 May 2016 11:45 AM

உலக மசாலா: பசி வந்தால் எல்லாம் பறந்துபோகும்!

தென்னாப்பிரிக்காவின் குருகர் தேசியப் பூங்காவில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார் 41 வயது லிஸி. ‘‘நான் அணையின் மீது உட்கார்ந்து தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளைப் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். முதலைகள் அமைதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. அந்தப் பகுதியில் கடலாமை ஒன்று நீந்தி வந்தது. உடனே முதலை மிக வேகமாக ஆமையைத் துரத்திச் சென்றது. ஆபத்து அருகில் வந்ததை உணர்ந்த ஆமை, தன்னுடைய தலையையும் கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டது. முதலை வாயில் ஆமையைக் கவ்விக்கொண்டது. கடினமான ஓடு இருப்பதால் முதலையால் கடிக்க முடியவில்லை. அதற்குள் இன்னும் சில முதலைகள் அங்கே வந்துவிட்டன. மூர்க்கமாகச் சண்டையிட்டன. ஆமையைப் பிடித்த முதலை வேறு வழியின்றி, அப்படியே விழுங்கிவிட்டது. பிறகு தண்ணீருக்குள் சென்று மறைந்துவிட்டது. ஒரு முதலை முழுதாக ஆமையை விழுங்குவதை இப்போதுதான் பார்த்திருக்கிறேன்!’’ என்கிறார் லிஸி.

பசி வந்தால் எல்லாம் பறந்துபோகும்!

கனடாவைச் சேர்ந்த 55 வயது பிரையன் ஸெம்பிக் மேஜிக் கலைஞர். சவால்களைச் செய்துப் பார்ப்பது என்றால் பிரையனுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஒரு மாதம் முழுவதும் குளியலறையில் வசித்தால், 4.7 லட்சம் ரூபாய் பந்தயம் என்றார் நண்பர். உடனே சவாலை ஏற்று ஒரு மாதம் முழுவதும் குளியலறையில் வசித்து, பணத்தைப் பெற்றுக் கொண்டார் பிரையன். அடுத்து ஒரு வாரம் பாலத்துக்கு அடியில் உறங்கினால் 13 லட்சம் ரூபாய் பந்தயம் என்றார் நண்பர். அதையும் செய்து முடித்து, பணத்தைப் பெற்றுக்கொண்டார். அடுத்த சவால் உண்மையிலேயே சிக்கலானதாக இருந்தது.

‘‘அறுவை சிகிச்சை மூலம் பெண்களைப் போல மார்பகங்களை உருவாக்கி, ஒரு வருடம் வாழ்ந்தால், 67.7 லட்சம் ரூபாய் தருவதாக நண்பர் சொன்னார். சவாலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகச் சட்டென்று சம்மதித்துவிட்டேன். 1997-ம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் எனக்கு மார்பகங்கள் கிடைத்தன. இந்தச் செலவையும் நண்பர்களே பார்த்துக்கொண்டனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு பாதிப் பணம் கொடுத்தார். ஓராண்டு முடிவில் முழுப் பணமும் பெற்றுவிட்டேன். அதற்குப் பிறகு மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. சோம்பேறித்தனமாகவும் இருந்தது. என்னுடைய தொழிலில் மிகவும் பரபரப்பாகவும் இருந்தேன். மார்பகங்களாலேயே நான் பிரபலமாகவும் ஆரம்பித்தேன்.

விளம்பரங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் திரைப்படங்கள் என்று என் வாழ்க்கை பிரமாதமாகச் சென்றது. அதனால் மார்பகத்தை நீக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு வரவில்லை. 2014-ம் ஆண்டு வரை அரை மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதித்து விட்டேன். இதற்குக் காரணம் என்னுடைய மார்பகங்கள்தான். சமீபத்தில் என் மகள் மிகா, மார்பகங்களை நீக்கிவிடச் சொன்னாள். தேவையான அளவுக்குச் சம்பாதித்துவிட்டேன். இனி எனக்குப் பணம் முக்கியமில்லை. என் மகளின் விருப்பத்துக்காக 19 ஆண்டுகளுக்குப் பிறகு மார்பகங்களை நீக்கிவிட்டேன்’’ என்கிறார் பிரையன் ஸெம்பிக்.

பந்தயத்துக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் இந்த மனிதர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x