Published : 06 Nov 2015 09:44 AM
Last Updated : 06 Nov 2015 09:44 AM

உலக மசாலா: பசித்தவர்களுக்கு உணவு!

சான்பிரான்சிஸ்கோவில் சாலைகளிலும் வீட்டு வாசல்களிலும் பழங்கள் தரக்கூடிய மரங்கள் வளர்ப்பதற்கு சட்டப்படி அனுமதி இல்லை. சாலைகளில் பழங்கள் விழுந்து, நசுங்கி அந்த இடத்தில் நடந்து செல்பவர்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கும் என்பதால் அனுமதிப்பதில்லை. பழங்கள் கொடுக்காத பூத்துக்கு குலுங்கும் மரம், செடிகளே எங்கும் வைத்திருக்கிறார்கள். ஏழைகளுக்கு உதவும் ஓர் அமைப்பினர் ஏற்கெனவே இருக்கும் மரங்கள், செடிகளில் பழங்கள் தரக்கூடிய மரங்களின் குச்சிகளை இணைத்து விடுகிறார்கள்.

அலங்கார மரங்களுக்கு அடியே நிஜ மரங்களை நட்டுவிடுகிறார்கள். தொடர்ந்து தண்ணீர் விட்டுப் பராமரிக்கும் பணியையும் செய்கிறார்கள். செடிகளும் மரங்களும் வளர்ந்து, பூத்து, காய்த்து, பழங்களைத் தருகின்றன. அந்த வழியே செல்லும் ஏழைகள் பழங்களைப் பறித்து, பசியாறிக்கொள்கிறார்கள்.

‘‘அனுமதி இன்றி இப்படி அடுத்தவர்களின் இடங்களில் செடிகளை நடுவதும் பராமரிப்பதும் குற்றம். ஆனால் யார் செய்கிறார்கள் என்பதை பொதுமக்கள் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். வீட்டின் உரிமையாளர்கள் இந்தப் பழங்கள் கீழே விழுந்து நடக்கும்போது வழுக்கி விழ வேண்டியிருக்கிறது என்று புகார் அளிக்கிறார்கள்’’ என்கிறார் நகர நிர்வாகி க்ளோரியா சான்.

‘‘கடந்த 5 ஆண்டுகளாக இப்படிப் பழங்களை விளைவித்து வருகிறோம். அதிக மணமோ, குப்பையோ இல்லாத பேரிக்காய், ப்ளம், செர்ரி பழங்களை மட்டுமே விளைவிக்கிறோம். ஒரு வேளை பசிக்கு சில பழங்கள் சாப்பிட்டால் கூட போதுமானது. பசித்தவர்களுக்கு உணவு அளிப்பதை விட நடைபாதை தூய்மை முக்கியமானதா? இதற்காக வீட்டின் உரிமையாளர்கள் சின்ன இடத்தைத் தரவேண்டியது இருக்கிறதே தவிர, பராமரிப்பு எல்லாம் எங்களுடையதே’’ என்கிறார் டாரா ஹுய்.

பசித்தவர்களுக்கு உணவிடுவது எத்தனை உன்னதமானது!

கனடாவில் உள்ள ஒரு மீனவர் காந்தத் தூண்டிலை வலையுடன் இணைத்து கடலில் வீசினார். சிறிது நேரத்துக்குப் பிறகு பழைய மீன் தூண்டில்கள், கொக்கிகள் ஏராளமாகக் கிடைத்தன. மீண்டும் தூண்டிலை வீசியபோது கத்திகள், கத்தரிக்கோல்கள், பூட்டு போன்றவை கிடைத்தன. இன்னொரு முறை ஒரு கல் கிடைத்தது. அந்தக் கல்லில் மொழிபெயர்க்கப்பட்ட குரானும், திசைகளும் எழுதப்பட்டிருந்தன. அடுத்து துப்பாக்கித் தோட்டாவும் துருப்பிடித்த துப்பாக்கியும் கிடைத்தன.

கடலையும் குப்பைக் கிடங்காக மாற்றியாச்சு…

இங்கிலாந்தில் வசிக்கிறார் ஜுலியா காஸ். பிறவியில் இருந்தே அவரது முகத்தின் ஒரு பகுதி கட்டிகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. முகம் கோரமாக இருந்ததால் அக்கம்பக்கத்தில் இருக்கும் குழந்தைகள் ஜுலியாவுடன் பேசவோ, விளையாடவோ மாட்டார்கள். ஜுலியாவின் பெற்றோர்கள் குறை தெரியாமல் பார்த்துக்கொண்டனர். பள்ளியில் படித்த காலம் முழுவதும் சக மாணவர்களால் மோசமான கிண்டலுக்கு உள்ளானார் ஜுலியா. மனம் உடைந்து போனபோது, ஜுலியாவுக்கு அறுவை சிகிச்சை செய்து, ஓரளவு முகத்தைச் சரி செய்தார்கள். ஆனாலும் ஒருபக்கம் முழுவதும் தழும்புகள் இருக்கும். முடியை வைத்து மறைத்துக்கொள்வார். ‘‘என் பெற்றோரைத் தவிர என்னிடம் யாரும் நெருங்கிப் பழக மாட்டார்கள். ஒருகட்டத்தில் நானே மற்றவர்களிடமிருந்து ஒதுங்கிவிட்டேன். ஆன்லைனில் என் குறை தெரியாததால் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். என்னுடைய தனிமையை அவர்கள் போக்கினர். 18 வயதில் ஒருவன் என்னைக் காதலிப்பதாகச் சொன்னான்.

நான் குறையை அவனிடம் சொன்ன பிறகு, காணாமல் போய்விட்டான். அன்பே கிடைக்காத உலகில் காதலை எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது என்று சமாதானம் செய்துகொண்டேன். இதோ 34 வயதில் கிரஹாம் என்ற அற்புதமான மனிதர் என் வாழ்க்கைத் துணையாகக் கிடைத்துவிட்டார். அவரை நேரில் சந்திக்கும் வரை எனக்குக் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. ஆனால் என் குறை பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. குடும்பம் நடத்த உருவம் முக்கியமில்லை, உள்ளம்தான் முக்கியம் என்றார். இந்த ஒரு நல்ல மனிதருக்காகத்தான் இத்தனை நாட்கள் நான் காத்திருந்தேன். இதுவரை பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் அனைத்தும் காற்றில் கரைந்துவிட்டன. இனி என் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும். முதல் முறை தயக்கமின்றி என் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறேன்’’ என்கிறார் ஜுலியா.

சந்தோஷம் என்றென்றும் நிலைக்கட்டும் ஜுலியா…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x