Published : 28 Oct 2015 10:59 AM
Last Updated : 28 Oct 2015 10:59 AM

உலக மசாலா: நூடுல்ஸ் மனிதர்

ஜப்பானில் வசிக்கும் 55 வயது டோஷியோ யமமோடோவுக்கு நூடுல்ஸ் சாப்பிடுவது என்றால் விருப்பம் அதிகம். இதுவரை 40 நாடுகளைச் சேர்ந்த 5,500 வகை நூடுல்ஸ்களைச் சுவைத்திருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் நூடுல்ஸ் சாப்பிட்ட அனுபவங்களை, இணையதளத்தில் எழுதி வருகிறார்.

அந்த நாட்டுக்கு நூடுல்ஸ் எப்படி அறிமுகமானது, எப்படிச் சமைக்க வேண்டும், சோடியம் எவ்வளவு இருக்கிறது, கலோரிகள் எவ்வளவு போன்ற விஷயங்களை எல்லாம் சுவாரசியமாக எழுதி வருகிறார். இவரது இணையதளம் உலகம் முழுவதும் மிகப் பிரபலமானது. 1996-ம் ஆண்டில் இருந்து இன்று வரை 14 லட்சம் பேர் இவரது இணையதளத்தைப் பார்த்து இருக்கிறார்கள். சிலர் அந்தந்த நாடுகளில் கிடைக்கும் நூடுல்ஸ்களை அன்பளிப்பாக அனுப்பி வைக்கிறார்கள்.

‘‘நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே நூடுல்ஸ் சமைக்க ஆரம்பித்துவிட்டேன். அன்றிலிருந்து இன்று வரை நூடுல்ஸ் மேல் இருக்கும் ஆர்வம் சற்றும் குறையவில்லை. ஒவ்வொரு நூடுல்ஸையும் சமைத்து, சுவைத்த பிறகு மார்க் போடுவேன். அதி அற்புதமான நூடுல்ஸாக இருந்தால் 4 நட்சத்திரங்கள் கொடுப்பேன். நான் என் தொழில் காரணமாக பல நாடுகளுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது.

அங்கெல்லாம் நூடுல்ஸ்களை மறக்காமல் வாங்கி வந்துவிடுவேன். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நூடுல்ஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நலனை முக்கியமாகக் கருதினார்கள். உடலுக்கு நன்மை தரக்கூடிய விஷயங்களைச் சேர்த்தனர். ஆனால் இன்று எல்லாமே வணிகமயமாகிவிட்டன. வளர்ந்த நாடுகளில் கப் நூடுல்ஸ் மிகப் பிரபலமாக இருக்கிறது, வளர்ந்து வரும் நாடுகளில் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் பிரபலமாக இருக்கிறது. நூடுல்ஸ் தொடர்பான பணிகளுக்காகக் கடந்த ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டேன். புத்தகங்கள் எழுதி வருகிறேன். இன்றும் வாரத்துக்கு 5 நாட்கள் நூடுல்ஸ்தான் சாப்பிடுகிறேன்’’ என்கிறார் டோஷியோ யமமோடோ.

நூடுல்ஸ் கிங்!

சீனாவின் நான்ஜிங் ஆற்றுப் பாலத்தின் மீது பேருந்தை ஓட்டி வந்துகொண்டிருந்தார் பியான் பெங்ஃபீய். பாலத்தின் மீது ஒரு பெண் வேகமாக நடந்து சென்று, சுவர் மீது ஏற ஆரம்பித்தார். சட்டென்று பேருந்தை நிறுத்தி வெளியே குதித்த பியான், ஆற்றில் குதிக்க இருந்த பெண்ணைக் காப்பாற்றிவிட்டார். அந்தப் பெண் தன்னைக் குதிக்க அனுமதிக்க வேண்டும் என்று போராடினார். பியானும் பயணிகளும் அறிவுரை கூறினார்கள். பிறகு காவல்துறையிடம் அந்தப் பெண்ணை ஒப்படைத்தனர். பியானின் சமயோசித அறிவைக் கண்டு, பயணிகளும் அந்தப் பக்கம் வந்தவர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.

பியானுக்குப் பாராட்டுகள்!

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட் விசினோ, நிலத்துக்கு அடியில் மிகப் பிரம்மாண்டமான குடியிருப்பைக் கட்டியிருக்கிறார். வெளியில் இருந்து பார்த்தால் அங்கே ஒரு குடியிருப்பு இருப்பதற்கான எந்த அடையாளமும் தெரியாது. உள்ளே சென்றால் ஆடம்பரமான நவீன வசதிகள்! இந்தக் குடியிருப்புகளை அணு குண்டுகளால் துளைக்க முடியாது, சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் ஆபத்தை ஏற்படுத்த முடியாது.

உலகமே அழிந்து போனாலும்கூட ஒரு வருடம் வரை இந்தக் குடியிருப்பில் வசிக்கும் 80 பேர் உயிரோடு இருக்க முடியும். 4 நட்சத்திர விடுதி போல அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. மருத்துவ வசதி, எரி பொருள் வசதி, தண்ணீர் வசதி, பாதுகாப்பு என்று அனைத்தும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. டிஎன்ஏ பாதுகாக்கும் வசதியும் இருக்கிறது. நிலத்துக்கு அடியிலேயே காய்கறிகளை விளைவித்துக்கொள்ள முடியும். இங்கே குடியேறுபவர்கள் துணிகளையும் அவர்களுக்கான மருந்துகளையும் மட்டும் கொண்டு வந்தால் போதுமானது.

பதுங்கு வீட்டிலிருந்து வெளியே வந்தால் விவசாயம் செய்யலாம், மீன் பிடிக்கலாம், வேட்டையாடலாம் என்கிறார்கள். இந்தக் குடியிருப்பில் தங்குவதற்கு பெரியவர்களுக்கு 23 லட்சம் ரூபாயும் குழந்தைகளுக்கு 16 லட்ச ரூபாயும் செலுத்த வேண்டும். உலகம் அழியக்கூடிய இறுதி நாட்களில் இந்தக் குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களைத் தனி விமானங்கள் மூலம் இங்கே அழைத்து வந்துவிடுவார்கள். இதே போல ஜெர்மனியில் ஒரு பதுங்கு குடியிருப்பு கட்டும் முயற்சியில் இருக்கிறார் ராபர்ட் விசினோ. குடியிருப்பு அமைக்கும் இடத்தை மிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

உலகமே அழிஞ்ச பிறகு நீங்க எல்லாம் இருந்து என்ன செய்யப் போறீங்க?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x