Published : 26 Nov 2015 11:08 AM
Last Updated : 26 Nov 2015 11:08 AM

உலக மசாலா: நீ பாதி... நான் பாதி...!

தொலைதூரத்தில் இருக்கும் உறவுகள் துயரமானவை. ஆனால் கொரியாவைச் சேர்ந்த ஒரு ஜோடி, இந்தப் பிரச்சினையை வேறுவிதமாகக் கையாண்டிருக்கிறது. டான்பின் ஷின், சியோக் லி தம்பதியர் புகைப்படக் கலைஞர்கள். ஒருவர் நியுயார்க்கிலும் இன்னொருவர் சியோலிலும் வசிக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையே 14 மணி நேர வித்தியாசம். இருவரும் அவரவர் இடங்களில் ஒரே நேரத்தில், ஒரே மாதிரி புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். பிறகு இந்த இரு படங்களையும் ஒன்றாக இணைக்கிறார்கள். வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட படங்களில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறார்கள்.

நாடு, நகரம், சூழல் மாறினாலும் இருவரும் ஒன்றாக இருப்பது போல படங்களை உருவாக்குகிறார்கள். இந்தக் கலைக்கு ‘ஷின்லி ஆர்ட்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இவர்களுடைய ஷின்லி ஆர்ட் படங்களுக்கு இணையத்தில் உலகம் முழுவதிலுமிருந்து மிகப் பெரிய வரவேற்பும் வாழ்த்துகளும் குவிகின்றன.

நீ பாதி… நான் பாதி… என்று பெயர் வைத்திருக்கலாம்!

ஃபோர்ட் நிறுவனம் ‘டிரக் டிரைவிங் சூட்’ ஒன்றை உருவாக்கியிருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினர் போதைப் பொருட்களை எடுத்துக்கொண்டு, வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள். இதனால் உலகம் முழுவதும் விபத்துகள் நிகழ்கின்றன, ஏராளமானோர் உயிரிழந்து விடுகிறார்கள். வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த சூட் உருவாக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடி, ஹெட்போன், கால், கை முட்டிகளுக்குப் பட்டைகள் என்று இது அமைக்கப்பட்டிருக்கிறது. இதை அணிந்துகொண்டு காரை இயக்குவது மிகக் கடினமானது. கண்ணாடி தெளிவான பிம்பத்தைக் காட்டாது. குகைக்குள் செல்வது போலக் காட்டும். ஹெட்போனில் அளவுக்கு அதிகமாகச் சத்தம் வெளிப்படும். கை, கால் முட்டிகளில் கட்டப்பட்டுள்ள பட்டைகள் எளிதாக அசைக்க முடியாதபடி செய்துவிடும். மொத்தத்தில் இந்த சூட் அணிந்து காரை ஓட்டவே முடியாது. இப்படித்தான் போதைப் பொருட்களை எடுத்துக்கொண்டு, வாகனங்களை ஓட்டுவதும் என்று சொல்கிறார்கள். “இந்த சூட் அணிந்து என்னால் சிறிது தூரம் கூட செல்ல இயலவில்லை. போதைப் பொருள் எடுத்துக்கொண்டு ஓட்டுவது எவ்வளவு மோசமானது என்பதை அறிந்துகொண்டேன்” என்கிறார் ஓர் ஓட்டுநர். ஜெர்மனியில் உள்ள மேயர் ஹெண்ட்ஷெல் இன்ஸ்டிடியூட் உருவாக்கியுள்ள டிரைவிங் சூட் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

நல்ல விஷயம்…

பெய்ஜிங்கில் உள்ள சான்யுவான் பாலத்தை இடித்து, 43 மணி நேரங்களில் புதிய பாலத்தைக் கட்டி முடித்திருக்கிறார்கள். பாலத்தின் கட்டுமானப் பணிகள் வீடியோவாக இணையத்தில் வெளியிடப்பட்டது. சில நாட்களுக்குள் 15 லட்சம் மக்கள் பார்வையிட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இங்கிலாந்தில் இந்தப் பணியைச் செய்ய 5 ஆண்டுகள் ஆகியிருக்கும், 3 மடங்கு செலவு அதிகரித்திருக்கும். பிரான்ஸில் 2 முதல் 5 ஆண்டுகளில் இந்தப் பணியைச் செய்து முடித்திருப்பார்கள். பிலிப்பைன்ஸில் 7 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று பல நாட்டைச் சேர்ந்தவர்களும் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் சீனக் கட்டுமான நிறுவனமோ, “24 மணி நேரத்தில் கட்டி முடிப்பதாக உறுதியளித்திருந்தோம். எங்களால் அதைச் செய்து முடிக்க முடியவில்லை. 43 மணி நேரங்களை எடுத்துக்கொண்டோம்” என்று கூறியிருக்கிறது. பாலத்துக்குத் தேவையான உத்திரம், தூண்கள் போன்ற பல பாகங்களும் ஏற்கெனவே செய்து தயாராக இருந்ததால், இத்தனை விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

அசத்துகிறார்கள் சீனர்கள்!

இங்கிலாந்தில் வசிக்கும் ஜேன், ஒரு முட்டையை உடைத்து வாணலியில் ஊற்றிய உடன் அலறினார். அவரது கணவர் கிறிஸ் ஓடி வந்து பார்த்தபோது, வாணலியில் உடைத்த முட்டைக்குள் ஒரு மஞ்சள் கருவும் ஒரு முட்டையும் இருந்தன. ஒரு முட்டைக்குள் 2 மஞ்சள் கருக்கள் அரிதாக இருப்பதுண்டு. ஆனால் ஓடுடன் கூடிய முழு முட்டை இருந்தது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. முட்டைக்குள் இருந்த முட்டையை உடைத்தபோது, மஞ்சள் கரு இல்லை. வெள்ளைக் கரு மட்டுமே இருந்தது என்கிறார் கிறிஸ்.

ஒரு முட்டை காசில் இரண்டு முட்டைகள்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x