Published : 23 Apr 2015 11:12 AM
Last Updated : 23 Apr 2015 11:12 AM

உலக மசாலா: நீரில் வளரும் உணவுப் பொருள்!

தாவரங்களை மண்ணில் வளர்க்காமல் காற்றிலும் நீரிலும் வளர்க்கக்கூடிய புதிய நுட்பம் வளர்ந்து வருகிறது. அதைப் பயன்படுத்தி கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் உணவகத்தில் தாவரங்களை வளர்த்து வருகிறார்கள். உணவகத்தின் உள்ளே 24 தூண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தூணிலும் 44 செடிகள் வளர்க்கப்படுகின்றன. கீரைகள், காய்கறிகள், பழங்கள் எல்லாம் இந்தத் தாவரங்களில் இருந்து உணவு விடுதிக்குக் கிடைக்கின்றன.

வாரம் ஒரு முறை பறிக்கப்பட்டு, விதவிதமான சிறப்பு உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். வறட்சியாக, விளைவிக்க முடியாத பகுதிகளில் கூட காற்று மூலம் தாவரங்களை வளர்க்கலாம். சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. நீர் மூலம் வளர்க்கும் தாவரங்களுக்கும் நிலத்தில் வளர்க்கும் தாவரங்களுக்குத் தேவைப்படும் தண்ணீரில் 10 சதவீதம் இருந்தால் போதுமானது.

அடடா! வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை நாமே உற்பத்தி செய்துகொள்ளலாம் போல!

அமெரிக்காவில் உள்ள மினியாபொலிஸில் வசிக்கிறார் 70 வயது ஆலன் லா. ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற ஆலன், கடந்த 15 ஆண்டுகளாகப் பசியால் வாடும் மக்களுக்கு சாண்ட்விச்களை வழங்கி வருகிறார். 1999ம் ஆண்டு இந்த நல்ல காரியத்தை ஆரம்பித்த ஆலன், இதுவரை 10 லட்சம் சாண்ட்விச்களை வழங்கியிருக்கிறார். இவரை எல்லோரும் ’சாண்ட்விச் மேன்’ என்றே அழைக்கிறார்கள். பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களிடமிருந்து சாண்ட்விச்களை நன்கொடையாகப் பெற்றுக்கொள்கிறார். ’ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துவோம்’ என்று எழுதப்பட்டுள்ள தன்னுடைய மினி வேனில் சாண்ட்விச்களை ஏற்றிக்கொண்டு, இரவு 9 மணிக்குக் கிளம்புகிறார்.

ஒவ்வோர் இடமாகச் சென்று சாண்ட்விச்களை வழங்குகிறார். காலை 10 மணிக்கு அவரது வேலை முடிகிறது. மீண்டும் வீட்டுக்கு வந்து சாண்ட்விச்களைத் தயாரிக்கிறார். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் சாண்ட்விச் வழங்கும் பணிக்குச் செலவிடுகிறார். காரிலேயே 2 மணி நேரம் மட்டும் தூங்கிக்கொள்கிறார். மீதி நேரங்களில் நன்கொடையாளர்களைத் தேடிச் செல்கிறார். புற்றுநோயிலிருந்து மீண்டவர் ஆலன். தற்போது மூட்டுவலியால் அவதிப்படுகிறார். ஆனாலும் எந்தக் காரணத்துக்காகவும் சாண்ட்விச் வழங்கும் பணியை நிறுத்தவே இல்லை. ஒருமுறை சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அன்று இரவு மருத்துவச் சீருடையில் காரில் சென்று, சாண்ட்விச்களை வழங்கிவிட்டு வந்தார். ஏழைகளுக்கு உணவளிப்பது என் நோக்கம் அல்ல, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே என் நோக்கம் என்கிறார் ஆலன்.

சாண்ட்விச் மேனுக்கு வந்தனங்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸில் யூசெஃப் சலெ எராகட் மக்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக ஒரு காரியத்தைச் செய்தார். சாலையில் செருப்பின்றி அமர்ந்துகொண்டார். அந்த வழியே செல்பவர்களைக் கை நீட்டி அழைத்தார். ஒவ்வொருவரும் எரிச்சலுடன் நின்றனர். சிலர் பணம் இல்லை என்று கூறி நடந்தனர். சிலரோ என்ன வேண்டும் என்று அதிகாரத்தோடு கேட்டனர். ’பிறருக்குக் கொடுப்பவர்கள் ஒருநாளும் ஏழைகளாக இருக்க முடியாது’ என்ற வாசகம் உள்ள அட்டையை எடுத்துக் காண்பித்தார். தன்னிடமுள்ள பணத்தை அவர்களிடம் நீட்டினார்.

சிலர் கடுமையாகத் திட்டினர். சிலர் பணத்தை வாங்கி, அவர் முகத்தில் வீசி எறிந்தனர். எல்லாக் காட்சிகளையும் வீடியோவோகப் பதிவு செய்துகொண்டார் எராகட். ஒருநாளின் முடிவில் இருவர் மட்டுமே அவரிடம் அன்புடன் பேசினர். அதில் ஒரு பெண், அவரைப் புரிந்துகொண்டு, தன்னிடமுள்ள பணத்தை வழங்கினார். அன்பு செலுத்துவதில் ஏழைகள் மிகப் பெரிய பணக்காரர்களாக இருக்கின்றனர். ஆனால் பணக்காரர்கள் இந்த விஷயத்தில் பரம ஏழைகளாக இருக்கிறார்கள்’’ என்கிறார் எராகட்.

நீங்க சொல்றது உண்மைதான் எராகட்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x