Published : 14 Apr 2015 12:12 PM
Last Updated : 14 Apr 2015 12:12 PM

உலக மசாலா: நீரின் மேல் வீடு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடற்கரை கழிமுகத்தில் ஓர் அழகான வீடு அமைந்திருக்கிறது. மரங்களை வைத்து நீரின் மேல் வீடு கட்டியிருக்கிறார்கள். அனைத்து வசதிகளும் கொண்ட பெரிய வீடு, பசுமைக்குடில்கள், கலங்கரை விளக்கம், விளையாட்டுத் திடல் எல்லாம் இங்கே இருக்கிறது. சூரிய சக்தியைக் கொண்டு தேவையான மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்கிறார்கள்.

மழை நாட்களில் தண்ணீரைச் சேமித்துக்கொள்கிறார்கள். பசுமைக்குடில்கள் மூலம் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்களை விளைவித்துக்கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர்கள் கிங், ஆடம்ஸ் இருவரும் நகர நெருக்கடி பிடிக்காமல், 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து குடியேறிவிட்டனர். குழந்தைகளுடன் சேர்த்து நால்வர் மட்டுமே இந்தப் பெரிய வீட்டில் வசிக்கின்றனர். அந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வீட்டைப் பார்க்க விரும்பினால், சந்தோஷமாக அழைத்துச் செல்கிறார்கள்.

அடடா! அற்புதமான இடம்!

பிரிட்டனைச் சேர்ந்த 57 வயது டேவ் ஹீலி பார்வையற்றவர். சஹாராவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாரத்தான் போட்டியில் இலக்கை அடைந்திருக்கிறார். தற்போது சஹாரா பாலைவனத்தில் 6 நாட்களில் 160 மைல்கள் தூரம் ஓடி, சாதனை படைத்திருக்கிறார். சஹாரா பாலைவனத்தில் ஓடுவது மிகவும் கடினமான சவால். 50 டிகிரி வெயில், மணலில் கால் புதையும், விரைவில் களைப்பு ஏற்படும். உதவியாளர்கள் மற்றும் நண்பர்களின் வழி நடத்தலில் இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார் டேவ் ஹீலி. தன்னுடைய சாதனைகள் மூலம் கிடைக்கும் பணத்தை, பார்வையற்றவர்கள் அறக்கட்டளைக்கு வழங்கி வருகிறார்.

அட்டகாசமான சாதனை!

நெதர்லாந்து முதியோர் காப்பகம் ஒன்றில் புதுமையான ஒரு யோசனையைச் செயல்படுத்தி வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் காப்பகத்தில் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். அதற்குப் பிரதிபலனாக ஒரு மாதத்தில் 30 மணி நேரங்களை முதியவர்களுடன் செலவிட வேண்டும். முதியவர்களுக்காக விளையாட்டு, பிறந்தநாள் பார்ட்டி என்று பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், அவர்கள் ஆதரவாகப் பேசக்கூடிய மனிதர்களைத்தான் விரும்புகிறார்கள்.

அதனால்தான் மாணவர்களுக்கு இலவசமாகத் தங்கும் வசதியை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த யோசனை பிரமாதமாக வெற்றி பெற்றுவிட்டது. மாணவர்களும் ஆர்வமாக முதியவர்களிடம் உரையாடுகிறார்கள், உதவி செய்கிறார்கள். முதியவர்களும் மனம் விட்டுப் பேசி, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறார் விடுதியின் உரிமையாளர். மற்ற முதியோர் இல்லங்களிலும் இந்த யோசனையைச் செயல்படுத்த இருக்கிறார்கள்.

நல்ல யோசனை… இந்தியாவிலும் செயல்படுத்தலாமே…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x