Published : 30 Nov 2016 11:06 AM
Last Updated : 30 Nov 2016 11:06 AM

உலக மசாலா: நினைச்சது ஒண்ணு.. நடந்தது ஒண்ணு!

ஜப்பானில் உள்ள ஸ்பேஸ் வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்கா, உலக அளவில் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

இங்குள்ள உறைபனி அருங்காட்சியகத்தில், புதிதாக ஐஸ் ஸ்கேட்டிங் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. விளம்பரங்களால் ஆர்வமானவர்கள், அரங்கத்துக்குள் நுழைந்ததும் அதிர்ந்து போனார்கள். மீன்கள், நண்டுகள், திருக்கைகள், சுறாக்கள் போன்ற 5 ஆயிரம் உயிரினங்கள் பனிக்குள் புதைக்கப்பட்டிருந்தன.

‘நாங்கள் புகைப்படங்களைப் பார்த்துதான் வந்தோம். இவை நிஜமான உயிரினங்கள் என்று அறிந்த பின்னர், பனிக்கு அடியில் தண்ணீரில் உயிரோடு இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இறந்த நிலையில் உறைந்து போயிருப்பதைக் கண்டு அதிர்ந்துவிட்டோம். மகிழ்ச்சிக்காகக் குழந்தைகளை அழைத்து வந்தோம். வருத்தத்துடன் வெளியேறிவிட்டோம்’ என்கிறார் ஒரு பெண்.

ஆரம்பிக்கப்பட்ட இரண்டே வாரங்களில் ஐஸ் ஸ்கேட்டிங் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் ஜப்பான் முழுவதும் பரவிவிட்டன. ‘நாங்கள் புதிய முயற்சி என்று நினைத்து இதைச் செய்தோம். உயிரோடு இருந்த உயிரினங்களைக் கொண்டுவந்து, உறைபனிக்குள் வைக்கவில்லை. இறந்த உயிரினங்களைத்தான் வைத்திருக்கிறோம். குழந்தைகளுக்குக் கடலுக்குள் செல்வது போன்ற அனுபவத்தைக் கொடுக்கவும் கடல்வாழ் உயிரினங்களை அறிந்துகொள்ளவும் இந்த முயற்சியை மேற்கொண்டோம்’ என்கிறார் பொழுதுபோக்குப் பூங்காவைச் சேர்ந்த அசாஹி ஷிம்புன்.

மக்கள் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தால் ஐஸ் ஸ்கேட்டிங் பகுதியை மூடுவதாக அறிவித்துவிட்டனர். மக்களிடம் வருத்தம் தெரிவித்து, அடுத்த ஆண்டு இறந்து போன மீன்களுக்கு நினைவு தினம் அனுஷ்டிப்பதாகவும் கூறியிருக்கிறது ஸ்பேஸ் வேர்ல்ட் நிறுவனம்.

எதையோ பிடிக்கப் போய், எதையோ பிடித்த கதையாக மாறிவிட்டதே!

சீனாவில் ஹை பீம் விளக்குகளால் அதிக விபத்துகள் நடந்து வருகின்றன. அரசாங்கமும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. ஆனாலும் ஹை பீம் விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியவில்லை. விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக மக்களே, தங்கள் கார்களின் பின்பக்கக் கண்ணாடியில் அச்சம் தரும் போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இரவு நேரத்தில் அதிக வெளிச்சம் பாய்ச்சும்போது, காரில் உள்ள போஸ்டர் உருவங்கள் பளீரென்று ஒளிர்கின்றன. அச்சமூட்டும் உருவங்கள் தெரியும்போது பின்னால் வரும் வாகனஓட்டிகள் பயந்து அலறுகிறார்கள். வெளிச்சத்தின் அளவைக் குறைத்தால் இந்த உருவங்கள் கண்களுக்குத் தெரியாது. இந்த உத்தியை அதிக மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால், அச்சமூட்டும் படங்களின் போஸ்டர்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன.

இரவு நேரங்களில் இதுபோன்ற உருவங்களைப் பார்க்கும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் விபத்துகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதனால் சீனாவின் சில பகுதிகளில் இந்த போஸ்டருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் பெய்ஜிங்கில் சட்டப்படி குற்றம் இல்லை என்பதால், கார்களில் போஸ்டர்கள் அதிக அளவில் வலம் வருகின்றன. விபத்துகளில் சிக்குவதை விட, அபராதம் கட்டிவிட்டுப் பாதுகாப்பாகச் செல்லலாம் என்று பலரும் நினைக்கின்றனர்.

அதிக வெளிச்சம் ஆபத்தை ஏற்படுத்தும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x