Published : 24 May 2016 10:58 AM
Last Updated : 24 May 2016 10:58 AM

உலக மசாலா: நிஜ ஸ்பைடர்மேன்!

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 12 வயது முகமது அல் ஷேக், தன்னுடைய அசாதாரணமான செயல்களால் ‘ஸ்பைடர்மேன்’ என்று அழைக்கப்படுகிறார். கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்குத் தன்னுடைய கை, கால்கள், உடலை வளைக்கிறார். கால் பாதங்களைத் தூக்கித் தோள்களில் வைக்கிறார். உடலைப் பின்பக்கமாக வளைத்து, தலையை முன்னோக்கிக் காட்டுகிறார். இரண்டு கைகளால் நடக்கிறார். ஒரு கையால் நிற்கிறார். 4 அடி 6 அங்குல உயரமும் 29 கிலோ எடையும் கொண்டவர் முகமது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதே இவரின் தற்போதைய லட்சியம். 2014-ம் ஆண்டு இஸ்ரேலின் தாக்குதல்களில் 2 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல்கள் நடைபெற்று 50 நாட்களில் முகமதுவின் திறமை லெபனான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

உடல் வளைப்பு போட்டியில் 1.4 கோடி வாக்குகள் பெற்றார் முகமது! தனித்துவம் மிக்க 4 உடல் அசைவுகளை, முகமது போலச் செய்வதற்கு இந்த உலகில் யாரும் இதுவரை இல்லை. ஒரு நிமிடம் நெஞ்சு மூலம் மொத்த உடலையும் நிற்க வைக்கும் சாதனையை கின்னஸுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ’’முகமது ஏற்கெனவே உலக சாம்பியன் ஆகிவிட்டான். முகமதுவின் சாதனைகள் மகிழ்ச்சி அளித்தாலும் குதிரை, ஒட்டகங்கள் மீது அவன் நிகழ்த்தும் சாகசங்கள் என்னைக் கவலைப்பட வைக்கின்றன’’ என்கிறார் முகமதுவின் அம்மா ஹன்னா.

‘’என் திறமைகளை உலகம் முழுவதும் சென்று வெளிப்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் எல்லா எல்லைகளும் எங்களுக்கு மூடப்பட்டுவிட்டன. உலகம் முழுவதும் உள்ள அரபு மக்கள் இணையம், ஃபேஸ்புக் மூலம் வீடியோக்களைப் பார்த்துதான் எனக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்குப் பிறகு எனக்கு வெளிநாடுகளில் தங்கி, பயிற்சி எடுத்துக்கொள்ளவும் போட்டிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் சிறுவன் என்பதால் என் குடும்பத்தினர் அதை அனுமதிக்கவில்லை. கின்னஸ் என் சாதனையை ஏற்றுக்கொண்டுவிட்டது. விரைவில் முறையான அறிவிப்பு வரும்’’ என்று காத்திருக்கிறார் முகமது.

ஆஹா! இது மனித உடலா, ரப்பரா!

மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. பைலட் என்ற மிகச் சிறிய கருவியைக் காதுகளில் பொருத்திக்கொண்டால், உலகின் பல மொழிகளையும் மொழிபெயர்த்துக் கொடுத்துவிடுகிறது. எந்த நாட்டுக்குச் சென்றாலும் இனி மொழி தெரியவில்லை என்ற கவலை இருக்காது. நியு யார்க்கைச் சேர்ந்த வேவர்லி நிறுவனம் மூன்று பாகங்கள் கொண்ட பைலட்டை உருவாக்கியிருக்கிறது. பைலட்டை வாங்கிக்கொண்டு, ஸ்மார்ட் போனில் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும். அவரவர் மொழியில் பேசினால், இன்னொரு மொழியில் மொழிபெயர்த்துச் சொல்லிவிடுகிறது பைலட். நாம் பேசப் பேச உடனே மொழிபெயர்ப்பு வந்துவிடாது. சற்று நேரம் கழித்தே மொழிபெயர்த்து, ஒலி வடிவில் வெளிவருகிறது.

தற்போது ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளை மொழிபெயர்க்கிறது பைலட். ஹிந்தி, செமிடிக், அரபிக், ஸ்லாவிக், ஆப்பிரிக்க மொழிகளை விரைவில் பைலட் மொழிபெயர்ப்பில் கேட்க முடியும். ’’ஒரு பிரெஞ்சு பெண்ணைச் சந்தித்த பிறகுதான் எனக்கு இந்த மொழி பெயர்ப்பு யோசனை வந்தது. நவீனத் தொழில் நுட்பம் வளர்ந்த பிறகும் மனிதர்கள் இடையே மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பது என் எண்ணம். நீண்ட முயற்சியில் இந்த பைலட்டை உருவாக்கியிருப்பதில் மகிழ்ச்சி. பைலட் பற்றிய விளம்பரத்தை இதுவரை 70 லட்சம் மக்கள் பார்த்திருக்கிறார்கள். விரைவில் பைலட் விற்பனைக்கு வர இருக்கிறது. 20 ஆயிரம் ரூபாய். பைலட்டைப் பயன்படுத்தியவர்கள் தங்களின் அனுபவங்களைச் சொல்லும்போது எங்களுக்குப் பெருமிதமாக இருக்கிறது. இன்னும் உலகின் பல மொழிகளையும் மொழிபெயர்த்துச் சொல்லும் விதத்தில் பைலட்டைக் கொண்டு செல்வதே எதிர்காலத் திட்டம்’’ என்கிறார் வேவர்லி நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்ட்ரூ ஓசோவா.

வரவேற்க வேண்டிய மொழிபெயர்ப்புக் கருவி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x