Published : 22 May 2016 09:21 AM
Last Updated : 22 May 2016 09:21 AM

உலக மசாலா: நிஜ பொம்மை வீடுகள்

அமெரிக்காவில் குழந்தைகள் விளையாடுவதற்குச் சிறிய வீடுகள் கட்டிக் கொடுப்பதுண்டு. கட்டிட வல்லுனர் ஆலன் மோவர், குழந்தைகளுக்கான ப்ளேஹவுஸ்களை உருவாக்கி வருகிறார். இந்த வீடுகள் கிட்டத்தட்ட நிஜ வீடுகளைப் போலவே இருக்கின்றன. 2 அறைகள் கொண்ட வீடுகளில் இருந்து மாடி வீடுகள் வரை கட்டிக் கொடுக்கிறார். இந்த வீட்டின் சுவற்றில் மலை ஏற்றம் செய்வது போல குழந்தைகள் ஏறி விளையாடலாம். மாடியில் இருந்து சறுக்கிக்கொண்டு கீழே வரலாம்.

ஊஞ்சல் ஆடலாம். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி, தோட்டத்தைப் பராமரிக்கலாம். பார்பி பொம்மைகளுக்கு அலங்காரம் செய்யலாம். சமையலறையில் பிடித்த உணவுப் பொருட்களைச் சாப்பிடலாம். ஓவியம் தீட்டலாம். மின்சாரம், தண்ணீர் வசதி இருக்கிறது. ’’எங்களின் ப்ளேஹவுஸில் குழந்தைகள் விளையாடுவதற்கு மணிக்கணக்கில் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறோம். சிலர் சொந்தமாக வீடுகளை வாங்க விரும்புவார்கள். 6 லட்சம் முதல் 50 லட்சம் வரை வீடுகளை விற்பனை செய்கிறோம். சிலர் இன்னும் அதிக வசதி, விளையாட்டுக் கருவிகள் எல்லாம் எதிர்பார்ப்பார்கள். அவர்கள் விருப்பப்படி செய்து கொடுப்போம்.

பெரும் பணக்காரர்களே எங்களின் வாடிக்கையாளர்கள். அதனால் கட்டணத்தைப் பற்றியோ, விலையைப் பற்றியோ யாரும் கவலைகொள்வதில்லை’’ என்கிறார் ஆலன் மோவர்.

இதுக்கு நிஜ வீடே வாங்கிவிடலாம் போலிருக்கே!



சீனாவில் வசிக்கும் லி யுன்பெங்கும் சென் ஸுவான்சியும் அரசாங்க அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள். கடந்த வாரம் இருவருக்கும் திருமணம் முடிந்தது. அன்று இரவு அலங்கரிக்கப்பட்ட அறையில் மணமகன் லி யுன்பெங் சீனாவின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பார்த்து ஒரு தாளில் எழுத ஆரம்பித்தார். மணமகள் சென் ஸுவான்சி அவருக்கு உதவி செய்துகொண்டிருந்தார். 17 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சீனாவின் கம்யூனிஸ்ட் அரசியலமைப்புச் சட்டத்தின் 11-வது அத்தியாயத்தை திருமணநாள் அன்று மணமக்கள் இருவரும் எழுதிக்கொண்டிருந்த புகைப்படங்களும் செய்தியும் இணையத்தில் பரவி, ஆதரவையும் எதிர்ப்பையும் அள்ளி வருகின்றன. சமீபக் காலமாக இளைய தலைமுறையினரிடம் தேசப்பற்றும் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் மீது இருக்கும் அபிமானமும் குறைந்து வருகின்றன.

அதனால் இளைய தலைமுறையினரிடம் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ’100 நாட்களில் கம்யூனிஸ்ட் அரசியலமைப்புச் சட்டத்தைக் கைகளால் எழுத வேண்டும்’ என்ற சவால் ஆரம்பிக்கப்பட்டது. கட்சியின் மீது ஆர்வம் கொண்ட ஏராளமான இளைஞர்கள் இந்தச் சவாலில் இறங்கியிருக் கிறார்கள். அவர்களில் லி யுன்பெங்கும் ஒருவர். சவாலில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காகத் திருமணத்தன்றும் எழுதினார். ‘‘நானும் என் மனைவியும் இந்தச் சவாலை மிகவும் மகிழ்ச்சியோடுதான் செய்தோம்.

எங்கள் வாழ்க்கையை இதைவிடச் சிறப்பாக ஆரம்பிக்க முடியாது. நானும் மனைவியும் நம்புகிற சித்தாந்தம் பற்றியும் அதற்காக நாங்கள் மேற்கொண்ட இந்தச் சவால் பற்றியும் யாருக்கும் கருத்து சொல்ல உரிமை இல்லை’’ என்கிறார் லி யுன்பெங்.

அட! புரிதலும் காதலும் இருப்பதால்தான் இந்தச் சவாலை செய்ய முடிந்திருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x