Published : 17 Jul 2015 10:32 AM
Last Updated : 17 Jul 2015 10:32 AM

உலக மசாலா: நிஜ பார்பி பெண்!

28 வயது டச்யானா டஸோவா ரஷ்யாவைச் சேர்ந்தவர். இவருக்கு லிவிங் பார்பி, ரியல் டால் போன்ற செல்லப் பெயர்களும் உண்டு. ஒரு பார்பி பொம்மை உயிரோடு வலம் வந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறார் டச்யானா. தலைமுடி, முக ஒப்பனை, ஆடைகள் என அனைத்தையும் பார்பியைப் போன்றே மாற்றிக்கொண்டார். அவரது அறை, படுக்கை, கார் அனைத்தும் இளம் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கின்றன.

‘‘12 வயதில் ஒரு பார்பி பொம்மை எனக்குக் கிடைத்தது. அன்று முதல் பார்பியின் மேல் அளவுக்கு அதிகமான ஆர்வம் வந்துவிட்டது. வளர, வளர என்னை பார்பியாகவே நினைத்துக்கொண்டேன். இன்று எல்லோரும் என்னை நிஜ பார்பி என்று அழைக்கும்போது, நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போய்விட்டன’’ என்கிறார் டச்யானா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், குழந்தைகள் பார்ட்டிகள் என்று எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறார்.

உடலை வருத்தி ஒரு பார்பியாக இருப்பதை விட, ஒரு சாதாரண டச்யானாவாக இருப்பதில் என்ன கஷ்டமோ?

ஆட்ரி ஹெப்பர்ன் உலகப் புகழ்பெற்ற நடிகையாகவும் மாடலாக வும் திகழ்ந்தவர். ஆஸ்கர், கோல்டன் க்ளோப் உள்ளிட்ட பல விருது களைப் பெற்றவர். பிற்காலத்தில் யுனிசெஃப் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டு, பணியாற்றி வந்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் அளித்து வந்தார். பலவிதங்களிலும் வித்தியாச மானவராக இருந்த ஆட்ரி ஹெப்பர்னைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார் அவரது மகன் லுகா டோட்டி.

‘‘என் அம்மா மிகப் பெரிய நடிகை என்றோ, புகழ்பெற்ற மாடல் என்றோ எங்களுக்குத் தெரியாது. ஆடம்பர வாழ்க்கை நாங்கள் வாழவில்லை. எத்தனையோ பிரபலங்கள் அம்மாவைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். அவர்கள் பிரபலங்கள் என்று தெரியாது. அம்மாவின் நண்பர்கள் என்றுதான் நினைத்திருக்கிறோம். மிக எளிமையான அம்மாவாக மட்டுமே அவர் எங்களிடம் நடந்துகொண்டார். விதவிதமாகச் சமைத்துப் போடுவார்.

அம்மா என்றாலே அன்பு, உணவு, நண்பர்கள் மூன்று மட்டுமே எங்கள் நினைவுக்கு வருகின்றன. பொதுவாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மிகப் பெரிய இடைவெளியை வைத்திருந்தார். யுனிசெஃப் வேலைகள், பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டுதல் என்று எப்பொழுதும் பரபரப்பாகவே இருப்பார். அம்மா இறந்த பிறகுதான் அவர் எவ்வளவு பெரிய ஆளுமை என்பது எங்களுக்குத் தெரிந்தது’’ என்கிறார் லுகா.

உருவத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் மிக அழகான பெண்மணி!

கனடாவைச் சேர்ந்த தம்பதியர் ஜெனிவிவ் எபன் ஸ்டோல்ஸ். 5 வயது அரியாவும் 2 வயது எல்லியாவும் இவர்களது மகள்கள். கடலில்தான் இந்தச் சிறிய குடும்பம் வசிக்கிறது. நீச்சல், அலை விளை யாட்டு, படகு விளையாட்டு, நீர் விளையாட்டுகள் என்று எப்பொழுதும் சாகசமான விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடலில் வசிக்கும் டால்பின்கள்தான் அரியா, எல்லியாவின் நண்பர்கள். ஜெனிவிவ் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அந்த வேலை அலுப்பூட்டியது.

உடனே ராஜினாமா செய்தார். ஸ்டோல்ஸைத் திருமணம் செய்துகொண்டு, சேமிப்பை வைத்து ஒரு படகு வாங்கினார். அதில் ஒரு குடும்பம் வசிப்பதற்கான எல்லா வசதிகளும் இருந்தன. நிலத்தை விட்டு, நீருக்குள் குடிபுகுந்தனர். இரு குழந்தைகளின் பிரசவத்துக்கு மட்டுமே இருவரும் கனடா திரும்பினார்கள். கடலில் வசித்தாலும் குழந்தைகள் படிக்கிறார்கள்.

ஸ்டோல்ஸ் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்த அனுபவத்தில், மகள்களுக்கு ஆசிரியராகி விட்டார். ‘‘வெளியில் இருந்து பார்க்க அலுப்பூட்டும் நீர்ப்பரப்பாகத் தெரிந்தாலும் கடல் ஏராளமான பொக்கிஷங்களை ஒளித்து வைத்திருக் கிறது. ஒவ்வொன்றையும் தேடிப் பார்ப்பதும், அறிந்துகொள்வதும், புத்தகமாக எழுதுவதும் சுவாரசியமாக இருக்கிறது’’ என்கிறார் ஸ்டோல்ஸ். கப்பல்கள், படகுகளில் வரும் மனிதர்களுக்கு ஏதாவது வேலை செய்துகொடுத்து, சம்பாதிக்கவும் செய்கிறார் ஜெனிவிவ்.

ஒவ்வொரு நொடியும் இயற்கையுடன் போராடும் சாகசக் குடும்பம்…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x