Published : 05 May 2015 10:10 AM
Last Updated : 05 May 2015 10:10 AM

உலக மசாலா: நாய் - பூனை கூட்டணி!

அமெரிக்காவில் வசிக்கும் மார்க் டெய்லர் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர். விலங்குகளையும் பறவைகளையும் வித்தியாசமான கோணங்களில் படம் பிடிப்பதில் வல்லவர். இவரது புகைப்படங்கள் நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிகையின் அட்டையை அலங்கரித்துள்ளன.

பிரபல நிறுவனங்களின் காலண்டர்களிலும் இடம்பெற்றுள்ளன. மார்க் டெய்லரின் சமீபத்திய புகைப்படங்கள் எல்லோரையும் பிரமிக்க வைக்கின்றன. எதிரிகளான பூனையும் நாயையும் ஒன்று சேர்த்து, அன்பைப் பரிமாறிக்கொள்ளும் விதத்தில் புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

எதிரிகளை நண்பர்களாகக் காட்டும் இந்த அற்புதமான விஷயத்தை எளிய பின்னணியில் படம் பிடித்திருக்கிறார். நாய் - பூனை, வாத்து - முயல், எலி-முயல் என்று விநோதமான நட்புக் கூட்டணி எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அடடா! அட்டகாசமான புகைப்படங்கள்!

ஒரே அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கூட கீழ்த் தளங்களில் உள்ளவர்களுக்கும் மேல் தளங்களில் உள்ளவர்களுக்கும் வித்தியாசங்கள் காட்டப்படுகின்றன. பணம் படைத்தவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலேயே மிகச் சிறந்த தளத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். இந்த ஏற்ற, தாழ்வுகளைக் குறைக்கும் விதத்தில் புதிய கட்டுமானப் பணியை உருவாக்கியிருக்கிறார் தைவானைச் சேர்ந்த டிசைனர் ஷின் குவோ.

சான்ஃபிரான்சிஸ்கோ அகாடமிக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 27 மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் மேலும் கீழும் நகர்கின்றன. குடியிருப்பே 360 டிகிரிக்குச் சுழல்கிறது. கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மேல் தளத்துக்குச் சென்றுவிடுவார்கள். மேல் தளத்தில் உள்ளவர்கள் கீழ்த் தளத்துக்கு வருவார்கள். இதன் மூலம் எல்லோருக்கும் எல்லா தளங்களிலும் வசிக்கும் வாய்ப்பு சமமாகக் கிடைக்கும். நகரின் நான்கு திசைகளை ரசிக்கவும் முடியும்.

ராட்டினத்தில் வீடு!

பெய்ஜிங் நகரில் ஒரு திரையரங்கத்துக்குக் கூட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்காக `இலவச ஷு பாலிஷ்’ போடும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஷு பாலிஷ் செய்வதற்காக ஸியாவோ ஜியா என்ற மாடலும் வரவழைக்கப்பட்டார். டிக்கெட்களில் தள்ளுபடி, உறுப்பினர் கார்டுகளில் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டதால் எதிர்பார்த்ததை விட மக்கள் குவிந்துவிட்டனர். வயதான பெண்கள் ஒவ்வொருவரும் 1 டஜன் ஷுக்களை பாலிஷ் செய்வதற்காகக் கொண்டு வந்திருந்தனர்.

தனி ஒருவராக ஷு பாலிஷ் போட்டுச் சோர்ந்து போனார் ஸியாவோ ஜியா. ஒருகட்டத்தில் புழுக்கம் அதிகமானதால், மயங்கி விழுந்துவிட்டார். “ஆன்ட்டிகள் எல்லாம் டஜன் கணக்கில் பாலிஷ் போட ஷுக்களைக் கொண்டு வந்தாலும் அவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதைவிடக் கடினமான பணிகளை அவர்கள் வீடுகளில் செய்துகொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார் ஸியாவோ ஜியா.

ஐயோ… பாவம் ஜியா…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x