Published : 29 Oct 2015 10:39 AM
Last Updated : 29 Oct 2015 10:39 AM

உலக மசாலா: நாய்க்கு கிடைத்த சொகுசு!

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கிக்கொண்டு, உரிமையாளருடன் நுழைந்த ஹாங்க் நாயைக் கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை. இன்டீரியர் டிசைனராக இருக்கும் காரி விட்மேன், தன் வளர்ப்பு நாய் ஹாங்க்கை முதல் வரிசையில் தன்னுடன் அமர வைத்துப் பயணம் மேற்கொண்டார். நோய் காரணமாக நாய்க்கு உடல் எடை அளவுக்கு அதிகமாகிவிட்டது. நாயால் தானாக எங்கும் நகர்ந்து செல்ல இயலாது. சக்கர நாற்காலியில் வசதியாக அமர வைத்துதான் அழைத்துச் செல்கிறார் காரி விட்மேன். விலங்குகளுக்கு உரிய பகுதியில் நாயை வைக்காமல், பயணிகள் இருக்கையில் நாயை வைத்ததில் பலரும் அதிருப்தி அடைந்தனர். ஆனால் பயணம் முழுவதும் ஹாங்க் அமைதியாக இருந்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துவிட்டது.

நிறைய மனிதர்களுக்கே கிடைக்காத விஷயம் ஒரு நாய்க்குக் கிடைத்தால் அதிருப்தி வராதா என்ன?

சீனாவின் ஸெஜியாங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார் ஸி ஸுவோஷி. சமீபத்தில் சீனாவின் ஆண் - பெண் விகிதம் சமமின்மை குறித்த தன்னுடைய கருத்துகளை வெளியிட்டார். சீனாவில் ஒரே குழந்தை என்ற கொள்கை கடைபிடிக்கப்படுவதால் பெரும்பாலும் ஆண் குழந்தைகளையே விரும்பிப் பெற்றுக்கொள்கின்றனர். இதனால் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவிட்டது. 2020ம் ஆண்டு 3 முதல் 4 கோடி ஆண்கள் திருமணம் ஆகாமல் இருக்கப் போகிறார்கள். பணக்கார ஆண்களுக்கு எளிதில் பெண் கிடைத்துவிடும். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை ஆண்களுக்குத் திருமணம் செய்துகொள்ள பெண் கிடைப்பது கடினம். பெரும்பாலான இளைஞர்கள் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, ஒரு பெண்ணை பல ஆண்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஸி.

‘‘ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் சேர்ந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, ஒற்றுமையாக வாழலாம். இதன் மூலம் ஏழ்மையையும் விரட்ட முடியும். ஆண்களுக்கும் துணை கிடைக்கும். எங்கும் நடக்காத விஷயத்தை நான் சொல்லிவிடவில்லை. ஒரு பிரச்சினைக்கு எனக்குத் தோன்றிய ஆலோசனையைச் சொல்லியிருக்கிறேன். எல்லா விஷயத்துக்கும் தர்க்கம் பார்த்து, பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. இந்த ஆலோசனையை ஏற்காவிட்டால், வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருந்துகொள்ள வேண்டியதுதான்’’ என்கிறார் ஸி.

‘‘இன்று இந்த யோசனை தவறாகத் தெரியலாம். ஆனால் ஆண்கள் குடும்பம் நடத்த பெண்கள் கிடைக்காவிட்டால் அது பெரிய சமூகப் பிரச்சினையாக மாறிவிடாதா? பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து விடாதா? இதை விடச் சிறந்த யோசனையை யாராவது சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன்’’ என்கிறார் ஸி.

சிக்கலான பிரச்சினைதான்..

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 65 வயது ஜாய் மிலின், பர்கின்சன் எனப்படும் நடுக்குவாத நோயை மூக்கால் நுகர்ந்தே கண்டுபிடித்து விடுகிறார். ஜோயைப் பரிசோதித்த ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் உண்மைதான் என்று கூறியிருக்கிறார்கள்.

‘‘மற்றவர்களால் நுகர முடியாத விஷயங்களையும் என்னால் எளிதாக நுகர முடியும். ஒருவர் உடலில் கஸ்தூரி மணம் வந்தால் அவருக்கு பர்கின்சன் நோய் இருப்பதாக அர்த்தம். அனஸ்தீஸியா நிபுணரான என் கணவர் வரும்போது வித்தியாசமான மணம் வரும். ஒருநாள் அவர் உடலில் இருந்து வேறு மணம் வர ஆரம்பித்தது. அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. 6 ஆண்டுகளுக்குப் பிறகு பர்கின்சன் நோயால் தாக்கப்பட்டார். என்னால் எப்படிக் கண்டுபிடிக்க முடிகிறது என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் மிகச் சரியாகக் கண்டுபிடித்து விடுகிறேன்’’ என்கிறார் ஜாய். எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பர்கின்சன் பாதிப்புக்குள்ளானவர்களிடமிருந்து பெறப்பட்ட 6 சட்டைகளையும் 6 சாதாரண சட்டைகளையும் கலந்து வைத்தனர். 12 சட்டைகளில் 11 சட்டைகளைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டார் ஜாய். ஒரு சட்டையில் மட்டும் வாசனை திரவியம் சேர்க்கப்பட்டிருந்ததால் அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. பர்கின்சன் பாதிப்பைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் நுகர்ந்தே ஜாய் கண்டுபிடித்து விடுகிறார் என்றால் மிகப் பெரிய அதிசயம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதிசயம்... அபூர்வம்… ஆச்சரியம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x