Published : 18 Jan 2017 10:24 AM
Last Updated : 18 Jan 2017 10:24 AM

உலக மசாலா: நாய்க்கு எவ்வளவு அறிவு!

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் வசித்து வருகிறார் 64 வயது பாப். இரவு தீமூட்டுவதற்காக, 15 அடி தூரத்தில் இருந்த விறகுகளை எடுக்கச் சென்றார். அவரது செருப்பு வழுக்கிவிட, கீழே விழுந்துவிட்டார். அவரால் அசையக்கூட முடியவில்லை. உதவிக்கு யாரையாவது கூப்பிடலாம் என்றாலும் கால் மைல் தொலைவு நடக்க வேண்டும். பாப் வளர்க்கும் கோல்டன் ரிட்ரீவர் நாய் கெல்சி, அவரைத் தேடிக்கொண்டு வந்தது. பாப்பின் நிலையைக் கண்டு, ஏதோ அசம்பாவிதம் என்பதை உணர்ந்தது. உதவி கேட்டுக் குலைத்தது. அருகில் யாரும் இல்லாததால், உதவி கிடைக்கவில்லை. சற்று நேரத்தில் சுயநினைவை இழந்தார் பாப். குளிர் மிக அதிகமாக இருந்தது. பனியில் உறைந்து போனவர் மீது நாய் அமர்ந்துகொண்டு கதகதப்பை அளித்தது. அவரது முகத்தையும் கைகளையும் நாக்கால் தடவிக்கொண்டேயிருந்தது. தொடர்ந்து குரைத்துக்கொண்டும் இருந்தது. ஒரு நிமிடம் கூட அவரை விட்டு அகலவில்லை. 20 மணி நேரம் கழித்து, கால் மைல் தொலைவிலிருந்த அண்டை வீட்டுக்காரர் ரிக் வந்துசேர்ந்தார். உடனே ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சுயநினைவின்றி, 20 மணி நேரம் பனியில் உறைந்து கிடந்தவர் உயிர் பிழைக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்றனர் மருத்துவர்கள். “மறுநாள் கண் விழித்தேன். நாயின் உதவியால்தான் நான் உயிர் பிழைத்திருக்கிறேன் என்றும் நாய் இல்லாவிட்டால் இறந்து பல மணி நேரங்கள் ஆகியிருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள். முதுகெலும்பு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் கால்களை அசைக்கக்கூட முடியாது. உயிர் பிழைத்ததை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள் என்று சொல்லிவிட்டனர். மறுநாள் என் கால்களை ஆட்டிப் பார்த்தேன். அசைந்தன. மருத்துவர் கோலன், இதுக்கும் உங்கள் நாய்க்குதான் நீங்கள் நன்றி சொல்லணும் என்றார். 6 மாதக் குட்டியிலிருந்து கெல்சியை வளர்த்து வருவதைத் தவிர, வேறு எதையும் நான் செய்யவில்லை. ஆனால் அது என் உயிரையே காப்பாற்றியிருக்கிறது” என்று நெகிழ்கிறார் பாப். “என் அப்பாவும் கெல்சியும் தனியாக வசித்துவருகிறார்கள். கெல்சியின் ஓயாத சத்தத்தால்தான் ரிக் வந்திருக்கிறார். இல்லை என்றால் அப்பாவைக் காப்பாற்றியிருக்க முடியாது. கெல்சியைப் போல புத்திசாலியான, அன்பான நாயைப் பார்க்க முடியாது” என்கிறார் பாப்பின் மகள் ஜென்னி.

ஓர் உயிரைக் காப்பாற்றும் அளவுக்கு நாய்க்கு எவ்வளவு அறிவு!

கனடாவைச் சேர்ந்த டிரெக், ஸ்டீவ் இருவரும் எஸ்தர் என்ற பன்றியை வளர்த்து வருகிறார்கள். 303 கிலோ எடை கொண்ட மிகப் பெரிய பன்றியாக உருவெடுத்திருக்கும் எஸ்தர், துருவக் கரடி அளவுக்கு இருக்கிறது. “ஓட்ஸ், பார்லி, சோளம், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைத்தான் எஸ்தர் சாப்பிடுகிறது. உணவுக்காக மட்டும் வாரத்துக்கு 2,500 ரூபாய் செலவாகிறது. சில நேரங்களில் ஐஸ் க்ரீம், கேக் போன்றவற்றையும் விரும்பி உண்ணும். இப்பொழுதே துருவக் கரடி அளவுக்கு வளர்ந்துவிட்டது. இன்னும் வளரும் என்கிறார்கள். குளியல் தொட்டியை விடப் பெரிதாக வளர்ந்துவிட்டதால், பெரிய வீட்டுக்குக் குடிபோக இருக்கிறோம். எஸ்தர் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. இவளை 10 லட்சம் பேர் ஃபேஸ்புக்கில் பின்தொடர்கிறார்கள்” என்கிறார் டிரெக்.

ராட்சச பன்றி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x