Published : 16 Aug 2015 11:12 AM
Last Updated : 16 Aug 2015 11:12 AM

உலக மசாலா: நாய்களைக் காக்கும் நல்ல மனிதர் ஸ்டீவ்!

கலிபோர்னியாவில் வசித்து வருகிறார் ஸ்டீவ். கடந்த 14 ஆண்டுகளாக 50 தெரு நாய்களைப் பராமரித்து வருகிறார். தினமும் நாய்களுக்கு உணவிடுவது, பராமரிப்பது என்பது மிகவும் செலவு பிடித்த விஷயம். சொந்த வீடுகூட இல்லாத ஸ்டீவ், நாய்கள் மீது உள்ள அன்பால் இந்த வேலையைச் செய்து வருகிறார். நாய்களைப் பராமரிப்பதால் அவர் அடிக்கடி வீட்டை மாற்றும்படி நேர்ந்து விடுகிறது. இண்டியானாவில் நண்பர் ஒருவர் உதவி செய்வதாகச் சொன்னதால், நாய்களுடன் கிளம்பத் தயாரானார். ஆனால் 2000 மைல்கள் தொலைவில் இருக்கும் ஓரிடத்துக்கு 50 நாய்களுடன் எப்படிப் பயணிக்க முடியும்? 11 நாய்களைத் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு, 400 ரூபாய்களுடன் கிளம்பினார். வழியில் அலிசியா எட்ரிங்டன் என்பவரைச் சந்தித்தார். ஸ்டீவின் கதை முழுவதையும் கேட்ட அலிசியா, தான் நன்கொடை திரட்டித் தருவதாகக் கூறினார். ஓர் இரவு தன் விடுதியில் இலவசமாகத் தங்கிக்கொள்ளவும் சம்மதித்தார். இணையத்தில் ஸ்டீவ் பற்றிய செய்தியைப் பகிர்ந்துகொண்டார் அலிசியா. உடனே சிலர் நாய்களுக்கான உணவுகளுடன் விடுதிக்கு வந்துவிட்டனர். கெல்லி சியட்டன் என்ற பெண், நாய்களையும் ஸ்டீவ்வையும் இண்டியானாவுக்கு தன்னுடைய வண்டியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டார். ஸ்டீவ் பத்திரமாக இண்டியானா வந்து சேர்ந்தார். 20 லட்சம் ரூபாய் நன்கொடை மூலம் கிடைத்திருந்தது. ஒரு ட்ரக் வாங்கி, மீண்டும் நாய்களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட இருப்பதாகச் சொல்கிறார் ஸ்டீவ். அதிகமான நன்கொடைகளைத் திரட்டிக் கொடுத்த அலிசியா, ‘‘நாய்களுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறார் ஸ்டீவ். அவருக்கு உதவியதில் மகிழ்ச்சி’’ என்கிறார் அலிசியா.

நாய்களைக் காக்கும் நல்ல மனிதர் ஸ்டீவ்!

பிரிட்டனில் வசித்து வருகிறார் பேர்ரி கிர்க். இவருக்கு வேக வைக்கப்பட்ட பீன்கள் என்றால் மிகவும் பிடிக்கும். 1986-ம் ஆண்டு ஒரு குளியல் தொட்டி முழுவதும் வேக வைக்கப்பட்ட பீன்களை நிரப்பி, 100 மணி நேரம் அதில் படுத்திருந்தார். இந்தச் சாதனை மூலம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். தான் என்ன சாதனை செய்தாலும் அதில் வேக வைக்கப்பட்ட பீன் வருவது போலப் பார்த்துக்கொள்வார். அதனால் இவரை எல்லோரும் ’கேப்டன் பீனி’ என்று அழைக்கிறார்கள். 60-வது பிறந்த நாளுக்காக தலையில் 60 பீன்களை டாட்டூவாகக் குத்திக்கொண்டார். ஒவ்வொரு பீனையும் விளம்பரத்துக்காக ஒதுக்கிவிட்டார். ஒரு பீனில் தங்களுடைய விளம்பரத்தை வெளியிட 6500 ரூபாய் வசூலித்தார். மொத்தம் 3 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்களை மூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமிக்கு அளித்துவிட்டார். ’’பேர்ரியின் நடவடிக்கைகள் அடுத்தவர்களுக்கு விநோதமாகத் தெரியலாம். ஆனால் அவரைப் போன்ற நல்ல மனம் படைத்தவர்கள் யாரும் இருக்க முடியாது’’ என்கிறார் குழந்தையின் தாத்தா ராபர்ட்ஸ். பேர்ரி கிர்க் தன் வாழ்நாள் முழுவதுமே அறக்கட்டளைகளுக்கு நன்கொடை பெற்றுத் தரும் வேலைகளிலேயே ஈடுபட்டு வருகிறார்.

கிரேட் கிர்க்!

சீனாவில் வசித்து வருகிறார் 39 வயது ஸெங். 2005-ம் ஆண்டு ஓர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பெற்றார். அப்பொழுது ஸெங் கர்ப்பமாக இருந்ததால், சிறையில் அடைக்கவில்லை. சிறைக்கு வெளியே அவரைப் பராமரித்து வந்தனர். குழந்தை பிறந்து சில மாதங்களுக்குப் பிறகு, ஸெங் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே நடைபெற்ற பரிசோதனையில் மீண்டும் கர்ப்பம் என்று தெரிய வந்தது. மீண்டும் சிறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். இப்படிக் கடந்த 10 ஆண்டுகளில் 14 தடவை கர்ப்பமாக இருந்ததால், சிறையில் அடைக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. 13 கர்ப்பங்களை சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கலைத்திருக்கிறார். பிரசவ காலம் வரை குழந்தையைச் சுமப்பதுபோல நடித்திருக்கிறார். தற்போது உண்மை கண்டுபிடிக்கப்பட்டு, சிறைக்குள் சென்றுவிட்டார் ஸெங்.

ஐயோ… எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x