Published : 25 Nov 2015 10:25 AM
Last Updated : 25 Nov 2015 10:25 AM

உலக மசாலா: நாய்களுக்காக எல்லாச் சொத்துக்களையும் செலவிட்ட பணக்காரர்!

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் வசிக்கிறார் 29 வயது வாங் யான். இரும்புத் தொழிற்சாலை நடத்தி, மிகப் பெரிய பணக்காரராக 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார். ஆனால் இன்று அவர் பெயரில் சிறிதும் பணம் இல்லை. அத்தனை சொத்தையும் தெரு நாய்களை காப்பாற்றுவதற்காகச் செலவிட்டிருக்கிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பு யானின் செல்ல நாய் ஒன்று காணாமல் போய்விட்டது. எங்கு தேடியும் நாயை கண்டுபிடிக்க முடியவில்லை. நண்பர் ஒருவர் கசாப்புக் கடைகளில் தேடிப் பார்க்கச் சொன்னார். அப்படிச் சென்றபோது ஒரு நாயை கொல்லும் காட்சியைக் கண்டார்.

மிகவும் மனம் உடைந்து போனார். அன்று முதல் தெருவில் சுற்றித் திரியும் நாய்களில் இருந்து கசாப்புக் கடைகளுக்கு வரும் நாய்கள் வரை காப்பாற்றி வருகிறார். இதற்காக நிறைய பணம் செலவு செய்து ஒவ்வொரு நாயையும் மீட்டு வருகிறார். நாய்களைத் தங்க வைப்பதற்கான இடமாகத் தன்னுடைய தொழிற்சாலையை மாற்றிவிட்டார். நாய்கள் காப்பகம் என்று பெயரும் வைத்துவிட்டார். சிலர் தாங்களாகவே நாய்களைக் கொண்டு வந்து இங்கே விட்டுவிடுகிறார்கள். இதுவரை 215 நாய்களை வைத்துப் பராமரித்து வருகிறார். நாய்களுக்கான உணவு, மருந்து, நாய்களைப் பராமரிப்பவர்களுக்குச் சம்பளம் என சொத்து முழுவதும் கரைந்துவிட்டது.

ஆனாலும் நன்கொடையாகப் பணம் பெற மறுத்து வருகிறார் யான். நாய்களுக்குத் தேவையான கட்டிடம் கட்டுவதற்குப் பொருளாகக் கொடுத்தால் ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார். எதிர்காலத்தில் 1000 நாய்களாவது இங்கே பராமரிக்கும் நிலை உருவாகலாம் என்கிறார். ‘பணக்காரனாக இருந்ததைவிட இன்று நாய்களைப் பராமரிப்பவனாக, அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வோம் என்று யோசிப்பவனாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது’ என்கிறார் யான்.

எதில் மகிழ்ச்சி என்பதை யாரால் சொல்லிவிட முடியும்?

இங்கிலாந்தில் வசிக்கும் ஜோன் மர்பி வீட்டுக்குத் தேவையான 24 பொருள்கள் கொண்ட கிச்சன் செட் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தார். ஜோனின் வீட்டு வாசலில் ஒரு பெரிய ட்ரக் வந்து நின்றது. ட்ரக் முழுவதும் பெரிய, பெரிய அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. சேமிப்புக் கிடங்குக்குப் பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள் என்று நினைத்தார் ஜோன். ஒரு ட்ரக் முழுவதும் இருந்த பெட்டிகள் அனைத்தும் ஜோனின் வீட்டுக்குள் வைக்கப்பட்டன. அந்த அறையே ஒரு கிடங்காக மாறிவிட்டது. 24 பொருட்களுக்கு 48 ராட்சச பெட்டிகளில் வைத்து, பாதுகாப்பு என்ற பெயரில் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ‘’ஒரு சின்ன ஸ்பூனுக்கு இத்தனை பெரிய அட்டைப் பெட்டி என்பதை எல்லாம் சகிக்க முடியவில்லை. பெட்டியைத் திறந்து பொருட்களை எடுப்பதற்குள் சோர்ந்து போய்விட்டோம். வீடே அட்டைப் பெட்டிகளும் காகிதங்களுமாகக் காட்சியளிக்கிறது. இதில் 5 பாத்திரங்கள் உடைந்துவிட்டன. புகார் அளித்து, இந்த அட்டைப் பெட்டிகளைச் சுத்தம் செய்யவேண்டும் என்றும் உடைந்த பாத்திரங்களுக்கு வேறு பாத்திரங்கள் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்’’ என்கிறார் ஜோன்.

குறைந்த காகிதங்களில் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்பது கூடவா தெரியாது?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x