Published : 30 May 2015 10:48 AM
Last Updated : 30 May 2015 10:48 AM

உலக மசாலா: நாக்கால் தடவிய பின்னர் தாக்கிய புலி!

தாய்லாந்தில் வனவிலங்குகள் பூங்கா மற்றும் கோயில்களில் புலிகள் சுதந்திரமாக வலம் வருகின்றன. புலிக்குட்டிக்குப் பால் கொடுக்கலாம். மடியில் தூக்கி வைத்துக்கொள்ளலாம். பெரிய புலிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். தாய்லாந்து கோயில்களில் புலிகளுடன் பழகவும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புலிக் கோயில் ஒன்றில் ஏராளமான புலிகள் வசிக்கின்றன. இங்கு வசிக்கும் புத்தத் துறவிகள் புலிகளுடன் விளையாடுகின்றனர். மொட்டைத் தலையை, புலி நாக்கால் தடவுவதற்கு அனுமதியளிக்கின்றனர். லுவாங் டா ஜான் என்ற 64 வயது துறவி 300 கிலோ எடை கொண்ட சஹதெப் புலியுடன் விளையாடும்போது, கடுமையாகத் தாக்கிவிட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தேறி வருகிறார். தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புலி தாக்கவில்லை. இது இயல்பாக நடந்த நிகழ்ச்சி என்கிறார்கள் கோயில் நிர்வாகிகள். ஆனால் விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

புலிகளை அதன் வாழ் இடங்களில் விடுவதுதான் புலிக்கும் நல்லது, மனிதர்களுக்கும் நல்லது…

ஐரோப்பிய பனங்காடைகள் வேர்க்கடலைகளைத் தரம் பிரிக்கும் பணியைச் சிறப்பாகச் செய்கின்றன. வேர்க்கடலையை எடுக்கும்போதே எடையைக் கண்டுபிடித்து விடுகின்றன. பிறகு அலகால் ஒரு குலுக்குக் குலுக்குகின்றன. இதன் மூலம் உள்ளே பருப்பு இருப்பதை அறிந்துகொள்கின்றன.

பருப்பு இல்லாத, பூச்சி வேர்க்கடலைகளைத் தூக்கி வீசிவிடுகின்றன. சிறந்த வேர்க்கடலைகளை மட்டும் சேமித்துக்கொள்கின்றன. ஆராய்ச்சியாளர்கள் பல விதங்களில் பனங்காடைகளை வைத்துப் பரிசோதித்துப் பார்த்தபோதும், வேர்க்கடலைகளை அழகாகத் தரம் பிரித்துக் காட்டின!

அடடா! எத்தனை அறிவு!

செக் குடியரசில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிற ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சி மிகவும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளில் மக்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அப்படித் தற்போது சிலர் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். 2 மாதங்கள் நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வெற்றி கரமாகத் திரும்புகிறவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ஸோரா செஞ்கோவா, “என் பாட்டி, தாத்தா மூலம் இரண்டாம் உலகப் போர் கதைகளை நிறையக் கேட்டிருக்கிறேன். நாஜி ஆக்கிரமிப்பில் உலகம் எப்படி இருந்தது என்பதைக் காட்டுவதற்காகவே இந்த நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறேன்’’ என்கிறார். ஸோராவுக்கு ஆதரவாக நிறையப் பேர் இருப்பதைப் போலவே, எதிரான கருத்துகளைச் சொல்லிக் கடுமையாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் ஸோரா முதல் பகுதியைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிட்டார்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நாஜிக்களின் தாக்கம் இருந்துகொண்டிருக்கிறது…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x