Published : 28 Jul 2016 09:07 AM
Last Updated : 28 Jul 2016 09:07 AM

உலக மசாலா: நடனமாடும் ராணுவ வீரர்கள்!

தென்கொரியாவையும் வடகொரியாவையும் பிரிக்கும் பகுதியைப் பாதுகாப்பது இரண்டு நாடுகளுக்குமே மிகவும் சவாலான பணியாக இருக்கிறது. இதனால் ராணுவ வீரர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் சோர்ந்து போய்விடுகின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் தென்கொரிய அரசாங்கம், வாரம் ஒருமுறை பாலே நடனம் கற்றுக் கொடுத்து வருகிறது. கனமான ராணுவ ஷூக்களை அணிந்த கால்கள், மென்மையான பாலே ஷூக்களை அணிந்தபடி நடனமாடுகின்றன. “அரசாங்கம் என்னை அணுகியபோது, ராணுவ வீரர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று யோசித்தேன்.

நம்பிக்கை இல்லாமல்தான் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இதோ பாலே வகுப்பு ஆரம்பித்து ஓராண்டு ஆகிறது. ஆரம்பத்தில் கற்றுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் பாலே வகுப்பு புத்துணர்வு ஊட்டுவதாகச் சொன்னார்கள். எனக்கு நம்பிக்கை வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நடனத்தைக் கற்றுக்கொண்டார்கள். எனக்கும் ராணுவ வீரர்களுக்கும் மகிழ்ச்சியான நேரமாக மாறிவிட்டது” என்கிறார் பாலே நடனக் கலைஞர் லீ ஹையாங் ஜோ. “வடகொரிய எல்லையில் பாதுகாப்புப் பணி மிகவும் கடினமானது. பாலே நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகு மன அழுத்தத்திலிருந்து விடுபட்டுவிட்டேன். சக வீரர்களிடம் நட்பு பாராட்டத் தொடங்கிவிட்டேன்” என்கிறார் 23 வயது ராணுவ வீரர் கிம் ஜூ ஹையோக்.

நடனமாடும் ராணுவ வீரர்கள்!

இங்கிலாந்தில் வசிக்கும் ஹன்னா, 2 வாத்துகளை வளர்த்து வருகிறார். தினமும் 3 வேளை வாத்துகளைக் குளிக்க வைக்கிறார். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வாத்துகளுக்கு டயாபர் மாற்றுகிறார். சமையலறை, படுக்கையறை, தோட்டம் என்று வாத்துகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றன. “எனக்கு பாப்பி, பீச் வாத்துகளை சேர்த்து 3 குழந்தைகள். பிறந்த 10 வாரங் களில் என்னிடம் வந்து சேர்ந்தன. என்னை அம்மாவாகவே ஏற்றுக் கொண்டன. ஒரு நாளைக்கு டயாபருக்கே 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. எங்களுடன் அமர்ந்து இரண்டும் டிவி பார்க்கின்றன. நாய், பூனை போன்ற விலங்குகள்தான் பொதுவாக இப்படி அன்பாக இருக்கக்கூடியவை. பறவைகள் இப்படி இருப்பது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது!” என்கிறார் ஹன்னா.

டயாபர் வாத்துகள்!

நியுயார்க் நகரின் சுரங்கப் பாதைகளிலும் ரயில்களிலும் மிகப் பெரிய செல்லப் பிராணிகளை அழைத்துச் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு வந்திருக்கிறது. செல்லப் பிராணிகளின் உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கைகளுக்கு அடக்கமான சிறு பிராணிகளை அழைத்துச் செல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. செல்லப் பிராணிகளைப் பிரிய மனமில்லாதவர்கள் பெரிய விலங்குகளையும் பையில் போட்டு, தோளில் மாட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றனர். செல்லப் பிராணிகளை நடக்க வைத்து அழைத்துச் செல்வதுதான் குற்றமே தவிர, பையில் எடுத்துச் செல்வது குற்றமில்லை என்கிறார்கள்.

கட்டுப்பாட்டை மீறுவதற்கு எத்தனையோ வழிகள்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x