Published : 04 Aug 2015 11:26 AM
Last Updated : 04 Aug 2015 11:26 AM

உலக மசாலா: நடக்கும் மீன்!

ஆழ்கடலில் வசிக்கக்கூடியது ஃப்ராக்ஃபிஷ். ஆங்கிலர் மீன்களுக்கு உறவினர். பவளப்பாறைகள் அருகில் வசிப்பதால், அதற்கேற்றவாறு நிறங்களைப் பெற்றுள்ளன. இதனால் கண்களுக்குச் சட்டென்று தெரிவதில்லை. மெதுவாகவே இயங்கக்கூடியவை. உடல் முழுவதும் முடிகள் போன்ற உணர்கொம்புகளைப் பெற்ற ஃப்ராக்ஃபிஷ், தற்போது கடல் ஆராய்ச்சியாளர்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. தரையில் மெதுவாக நடந்து வருவதைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

மீன்கள் பறக்கின்றன, நீந்துகின்றன, நடக்கின்றன!

சாதாரணமாக மக்கள் ‘நான் உன் வலியை உணர்கிறேன்’ என்று ஆறுதல் அளிக்கும் விதத்தில் சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே பிறரின் வலிகளை உணர்கிறார் ஜோயல் சலினாஸ். அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் நரம்பியல் நிபுணராக இருக்கிறார் ஜோயல். சிறிய வயதில் இருந்தே பிறரின் வலிகளை உணரக்கூடிய ஆற்றல் இவருக்கு வந்துவிட்டது. ’மிரர் டச் சினெஸ்தீசியா’ (mirror touch synesthesia) என்பது மிக மிக அரிய வகை நோய் என்கிறார்கள் மருத்துவர்கள். கண்ணாடியில் உருவத்தைப் பார்ப்பது போல, ஒருவரைத் தொடுவதன் மூலம் அவரின் வலியை உணர்ந்துகொள்ளும் நோய் இது.

சந்தோஷமாக இருப்பவர்கள் யாராவது ஜோயலைக் கட்டிப் பிடித்தால் அவரும் சந்தோஷமாக இருப்பார். அதுவே வலியுடையவர்கள் கட்டிப் பிடித்தால் ஜோயலும் அந்த வலியை உணர்ந்துவிடுவார். கஷ்டத்தை அனுபவிப்பார். அதாவது நோயாளியின் வலி அளவுக்கு உணர மாட்டார், ஆனால் ஓரளவு வலியை அவரால் உணர்ந்துவிட முடியும். உலகிலேயே 1-2 சதவிகித மனிதர்களுக்கே இந்த நோய் இருக்கிறது. ’’நான் மருத்துவர் என்பதால் இந்த நோய் எனக்கு உதவவே செய்கிறது. என்னிடம் வரும் நோயாளிகளின் பிரச்சினைகளை அவர்கள் சொல்லாமலே உணர்ந்துகொள்ள முடிகிறது’’ என்கிறார் ஜோயல்.

ஐயோ… இப்படியெல்லாம் கூட ஒரு நோயா…

செவ்வாய் கிரகத்துக்குப் பயணம் செய்ய இருக்கிறார் 36 வயது சோனியா வான் மீட்டர். அமெரிக்காவின் விர்ஜினியாவில் வசிக்கிறார் ஜாசன் ஸ்டான்ஃபோர்ட். இவருடைய மனைவி சோனியா. கணவரையும் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு, செவ்வாய் கிரகம் புறப்பட இருக்கிறார் சோனியா. இது ஒரு வழிப் பயணம். திரும்பி பூமிக்கு வரும் வாய்ப்பு இல்லை. செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலைமைகளை ஆராய்வதற்காக மனிதர்கள் அனுப்பப்பட இருக்கிறார்கள். ’’எப்படி மனைவியை அனுப்புகிறீர்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள். மனைவியாக இருந்தாலும் அவரது எண்ணங்களையும் லட்சியங்களையும் மதிப்பதுதான் நல்லது.

செவ்வாய் கிரகத்துக்கு மரணத்தை எதிர்நோக்கி அவர் செல்லவில்லை. புதிய கிரகத்தில் வாழ்வதற்காகத்தான் செல்கிறார். நானும் குழந்தைகளும் அவரைப் பிரிந்து இருப்பது கஷ்டம்தான்… இருந்தாலும் இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதை அங்கீகரிக்கத்தான் வேண்டும்’’ என்கிறார் ஜாசன். 2 லட்சம் விண்ணப்பங்களில் இருந்து 100 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தனர். இதிலிருந்து 24 பேர் பகுதி பகுதியாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டிலிருந்து சோனியாவுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கின்றன. ’’ராக்கெட்டில் செல்வது என் கனவாக இருந்தது. தற்போது இந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் திரும்பி வரமுடியாதுதான். ஆனால் ஒரு சாதனை பயணத்தில், ஆராய்ச்சியில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய அங்கீகாரம்! எல்லோரும் பிறக்கிறோம், மடிகிறோம். அதில் நான் சற்று வித்தியாசமாக இருக்க விரும்புகிறேன். நாங்கள் சாதாரணமாக இருந்தபோது திருமணம் செய்துகொண்டோம். ஆனால் இன்று அற்புதமான தருணத்தில் இருக்கிறோம்’’ என்கிறார் சோனியா.

செவ்வாய் கிரகத்தில் சாதிக்க வாழ்த்துகள் சோனியா!

நியுயார்க்கில் உள்ள பஃபலோ நகரில் 12 அடி உயரத்துக்குப் பனிக் குவியல் 8 மாதங்களாக உருகாமல் இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்வோவெம்பர் புயல் வீசியபோது, நகர் எங்கும் பனி யால் மூடப்பட்டது. சாலைகளில் உறைந்திருந்த பனிகளை எல்லாம் அப்புறப்படுத்தி, காலியான இடங்களில் கொட்டிவிட்டனர். அந்தப் பனிக்குவியல் மீது மண், புற்கள், குப்பைகள் எல்லாம் உருவாகி விட்டன. ஆனாலும் இன்னும் பனி உருகாமல் அப்படியே இருக்கிறது. சூரியக் கதிர்கள் மண்ணையும் குப்பைகளையும் தாண்டி உள்ளே செல்ல முடியாததால் பனி அப்படியே உருகாமல் 8 மாதங்களாக இருக்கிறது என்கிறார் வானிலை ஆய்வாளர் மார் வைசோகி.

ஆச்சரியம்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x