Published : 29 Jul 2016 09:26 AM
Last Updated : 29 Jul 2016 09:26 AM

உலக மசாலா: தேவை சில ஆயிரம் கிரஹாம்கள்!

கிரஹாமைப் பார்ப்பவர்கள் முதலில் முகம் சுளிப்பார்கள், பிறகு ஆச்சரியமடைவார்கள். கிரஹாம் மனிதன் சாயலாக இருந்தாலும் மனிதன் அல்ல. பாட்ரிசியா பிசினினி என்ற கலைஞரால் செதுக்கப்பட்ட விநோதமான மனித உருவம். சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வுக்காக இந்த கிரஹாமை உருவாக்கியிருக்கிறார் பாட்ரிசியா. ஹெல்மெட் போன்ற தலையும் காணாமல் போன கழுத்துமாக ஒருவித அச்சத்தைத் தருகிறது இந்த உருவம்.

“இன்று சாலைப் பாதுகாப்பு குறித்து பெரிதாக யாரும் அக்கறை கொள்வதில்லை. வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பொறுப்பற்றவர்களாக நடந்துகொள்கிறார்கள். இதனால்தான் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. வேகம் என்பது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாக மாறி வருகிறது. அதிவேகம் சிலவேளைகளில் கட்டுப்பாட்டை இழந்து பெரிய விபத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதேபோல நடந்து செல்பவர்கள் மொபைல் போனில் பேசிக்கொண்டோ, ஐபோனில் விளையாடிக் கொண்டோ சாலைகளைக் கடக்கிறார்கள். ஒருவேளை விபத்தில் சிக்கி, உயிர் பிழைக்க நேர்ந்தால், நீங்கள் கிரஹாமைப் போலத்தான் இருப்பீர்கள் என்பதைச் சொல்வதற்காகத்தான் இந்தச் சிலையை வடிவமைத்திருக்கிறோம். சாலைகளில் வேகமாக வாகனங்களை ஓட்டும்போதும் சாலைகளைக் கடக்கும்போதும் கிரஹாம் கண் முன் வந்து, தவறு செய்யவிடாமல் பாதுகாப்பார்” என்கிறார் ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து விபத்து பிரிவின் தலைவர் ஜோய் கலாஃபியோர்.

மெல்போர்ன் ராயல் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் கிரஹாமை உருவாக்க, பாட்ரிசியாவுக்கு உதவி செய்திருக்கிறார்கள். “விபத்து ஏற்பட்டால் கபாலம் முன்னோக்கி நகர்ந்துவிடும். உடல் தூக்கி வீசப்படும்போது பின் மண்டையும் நொறுங்கும். கழுத்துப் பகுதி காணாமல் போகும் என்பதால் இப்படி வடிவமைத்திருக்கிறோம்” என்கிறார் மருத்துவர் கென்ஃபீல்ட். ஆகஸ்ட் 8 முதல் ஆஸ்திரேலியா முழுவதும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக கிரஹாம் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

நம்ம நாட்டுக்குத் தேவை சில ஆயிரம் கிரஹாம்கள்!

சீனாவின் டோங்யாங் நகரில் சிறுநீரில் ஊற வைக்கப்பட்ட முட்டைகளை மக்கள் சாப்பிடுகிறார்கள். சிறுவர்களின் சிறுநீரில் ஊறவைக்கப்பட்ட முட்டைகளைச் சாப்பிட்டால் வலிமை அதிகரிக்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், வெப்பத்தால் வரும் நோய்களைத் தடுக்கும் என்று சீன மக்கள் நம்புகிறார்கள். முதலில் முட்டைகளை சிறுநீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு ஒரு பானை தண்ணீரில் வேக வைக்க வேண்டும். வெந்த முட்டைகளின் ஓடுகளை உடைத்து, முட்டையை மீண்டும் சிறுநீரில் ஊற வைக்க வேண்டும். இவற்றுடன் சில மூலிகைகளை சேர்க்க வேண்டும். வெளிர் மஞ்சளாக முட்டை மாறும். மஞ்சள்கரு பச்சையாக மாறிவிடும். உப்பு கரிக்கக்கூடிய இந்த முட்டைகளை மருந்தாக நினைத்து சாப்பிடுகிறார்கள். “சீன மருத்துவத்தில் இப்படி ஒரு விஷயமே இல்லை. சிறுநீரைக் குடித்தால் எந்த சத்தும் கிடைக்காது. சாதாரணமாக முட்டைகளை வேக வைத்துச் சாப்பிட்டாலே சத்துகள் கிடைக்கும்” என்கிறார் சீன மருத்துவரான ஜாங் யுமிங்.

விநோதமான நம்பிக்கைகள்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x