Published : 13 Nov 2015 11:13 AM
Last Updated : 13 Nov 2015 11:13 AM

உலக மசாலா: துர்நாற்ற திரவம்

ஆலன் விட்மனும் ஆண்ட்ரூ மாஸ்டர்ஸும் வட கரோலினாவைச் சேர்ந்த நண்பர்கள். இவர்கள் இருவரும் ‘லிக்விட் ஆஸ்’ என்ற ஒரு திரவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் திரவத்தைத் தெளித்தால் மிக மோசமான துர்நாற்றம் வீசும். “நாங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே இந்தத் திரவத்தை உருவாக்கிவிட்டோம். என் பெற்றோர் ரசாயனப் பெட்டி ஒன்றைப் பரிசாக அளித்தனர். ஒவ்வொன்றையும் பரிசோதித்துப் பார்த்தோம். ஒரு சில ரசாயனங்களைச் சேர்த்துப் பார்த்தபோது இறந்த விலங்குகளின் துர்நாற்றம் வந்தது. இந்தத் திரவத்தை எங்களுடன் சண்டையிடும் மாணவர்கள் மீது தெளித்துவிடுவோம்.

நாற்றம் தாங்காமல் ஓடிவிடுவார்கள். அதை மறந்து பல ஆண்டுகளாகிவிட்டன. ஏதாவது தொழில் செய்யலாம் என்று யோசித்தபோது துர்நாற்ற திரவியம் செய்யும் யோசனை தோன்றியது. இதை வாங்குவார்களா என்றும் சந்தேகம் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட நன்றாக வரவேற்பு இருக்கிறது. லாக்கர் அறைகளில் இந்தத் திரவியத்தைத் தெளித்தால் திருடர்கள் யாரும் அங்கே நுழைய மாட்டார்கள். பெண்கள் இந்தத் திரவத்தை வைத்துக்கொண்டால், ஆபத்து ஏற்படும்போது எளிதில் தப்பிவிடலாம்” என்கிறார் விட்மன்.

எப்படியெல்லாம் தொழில் செய்யறாங்க இந்த உலகத்துல…

அமெரிக்காவில் வீடில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கான பொது குளியலறைகள், கழிப்பிடங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்பது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சான்பிரான்சிஸ்கோவில் மட்டும் 6,500 பேர் வீடு இல்லாமல் பொது இடங்களில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 20 குளியலறைகளும் கழிப்பறைகளும் மட்டுமே இருக்கின்றன. இதனால் பலருக்குக் குளிக்கும் வாய்ப்பு கிடைப்பதே இல்லை.

அவர்களுக்காக லாவா மே என்ற தொண்டு நிறுவனம், நகரும் குளியலறை, கழிப்பறைகளை உருவாக்கியிருக்கிறது. அதாவது பழைய பேருந்துகளை வாங்கி, அதில் கழிப்பறைகளையும் குளியலறைகளையும் பொருத்தியிருக்கிறது. இந்தத் தொண்டு நிறுவனத்தை உருவாக்கியவர் டோனிஸ் சாண்டோவல். வீடில்லாத வர்களுக்கு உதவுவதற்காகவே தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டார். “ஒருநாள் தெருவில் அழுக்கான உடையுடன் ஒரு பெண் அழுதுகொண்டிருந்தார். காரணம் கேட்டபோது குளிப்பதற்கு இடமே இல்லை என்றார். அழகான அந்தப் பெண்ணின் முகம் பல அடுக்கு அழுக்குகளால் மோசமாக மாறியிருந்தது.

குளியலறையும் கழிப்பறையும் மனிதனுக்கு இன்றியமையாதவை. உடனே நகரும் குளியலறை என்ற திட்டத்தை உருவாக்கினேன்” என்கிறார் டோனிஸ். இன்று லாவா மே தொண்டு நிறுவனத்தில் ஏராளமானவர்கள் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். எங்கெல்லாம் குளியல றைகளும் கழிப்பறைகளும் தேவைப்படுகின்றனவோ, அங்கே பேருந்து சென்றுவிடும். ஒவ்வொரு பேருந்திலும் வாரத்துக்கு 2 ஆயிரம் பேர் குளித்து வருகிறார்கள். இந்தப் பேருந்துகளுக்குப் பணமாகவோ, சுத்தம் செய்யும் பொருட்களாகவோ நன்கொடை அளிக்கலாம்.

அமெரிக்காவிலும் இந்த நிலைமையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x