Published : 03 Mar 2016 10:04 AM
Last Updated : 03 Mar 2016 10:04 AM

உலக மசாலா: துணி துவைத்துக்கொண்டே உடல்பயிற்சி!

சீன மாணவர்கள் ஃபிட்னஸ் சைக்கிள், வாஷிங் மிஷின் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்ந்து ஒரே கருவியாக உரு வாக்கி இருக்கிறார்கள். ஆம், டலியன் தேசிய பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாண வர்கள் கண்டுபிடித்துள்ள இந்த இயந்திரத்தின் மூலம் உடற் பயிற்சி செய்துகொண்டே துணி களையும் துவைத்துவிட முடியும். “சைக்கிள் உடற்பயிற்சி உலகம் முழுவதும் மிகப் பிரபலமானது. சிலர் தினமும் துணிகளைத் துவைத்து விடுகிறார்கள். சிலர் வாரத்துக்கு ஒரு முறை துணி துவைக்கிறார்கள். இரு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய முடிந்தால் நேரமும் மிச்சமாகும்.

அப்படி யோசித்துதான் இதை உருவாக்கியிருக்கிறோம். சைக்கிளின் அடிப் பகுதியில் பெரிய ட்ரம் ஒன்று பொருத்தியிருக்கிறோம். சைக்கிள் பெடல்களை மிதிக்கும்போது ட்ரம்மில் உள்ள துணிகள் துவைக்க ஆரம்பிக்கும். அதே நேரத்தில் இதிலிருந்து உருவாகும் தேவைக்கு அதிகமான மின்சாரம் எதிர்கால தேவைக்கு சேமித்து வைக்கப்படும். ஒரே இயந்திரத்தின் மூலம் உடற்பயிற்சி கிடைக்கிறது, சலவை செய்யப்படுகிறது, மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது” என்கிறார்கள் மாணவர்கள். பரிசோதனை அளவில் இருக்கும் இந்தத் திட்டம் முழுமையாக வெற்றி பெறும்போது, மக்களின் உபயோகத்துக்கு வரும்.

உடற்பயிற்சிக்கு நேரமில்லை என்று யாரும் சொல்ல முடியாது!

அமெரிக்காவின் மிச்சிகனில் வசிக்கிறது வெஸ்லி என்ற நாய். சமீபத்தில் இதன் பற்களுக்கு க்ளிப் போடப்பட்டது. இதுதொட ர்பான படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டன. இதுகுறித்து வெஸ்லியின் உரிமையாளரான மோலி மூரே கூறும்போது, “நாயின் பற்கள் வெளியே துருத்திக் கொண்டிருந்தன. அதனால் வாயைச் சரியாக மூட முடியவில்லை. சாப்பிடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. என் அப்பா கால்நடை மருத்துவராக இருந்ததால், பற்களுக்கு க்ளிப் போட்டு விட்டார். பற்களுக்கு க்ளிப் போட்ட முதல் நாய் வெஸ்லிதான்” என்றார்.

ஐயோ... பாவம்!

ஸ்வீடனில் உள்ள விகென் கிராமத்தில் 24 மணி நேரமும் ஒரு கடை திறந்திருக்கிறது. ஆனால் இந்தக் கடையில் ஆட்கள் யாரும் இருப்பதில்லை. ஸ்மார்ட்போன் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, செயலி மூலம் ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். சில நிமிடங்களில் இந்த விஷயங்கள் முடிந்துவிடும். இதுகுறித்து ராபர்ட் இல்லிஜசன் கூறும்போது, “குழந்தைக்குப் பால் பவுடர் வாங்க வேண்டும் என்றாலும், 12.4 மைல்கள் கடந்து செல்ல வேண்டும். அருகில் ஒரு கடை கூட கிடையாது. அதற்காகத்தான் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கடையை திறந்தேன். இந்தச் செயலி ஆப்பிள் நிறுவனம் மூலம் கடந்த ஜனவரி மாதம் அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை எந்தப் பிரச்சினையும் எழவில்லை.

கடையில் எந்தப் பொருள் இல்லை என்றாலும் செயலி மூலம் தகவல் தெரிவிக்கலாம். ஏதாவது பொருள் வேண்டும் என்றாலும் சொல்லலாம். குறைகளைச் சுட்டிக் காட்டலாம். இங்கே வரும் வாடிக்கையாளர்களின் வங்கி அட்டையின் நகலைச் சேகரித்து வைத்திருக்கிறோம். அவர்கள் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருடர்கள் யாராவது நுழைந்தால் அவை காட்டிக் கொடுத்துவிடும். . இதுபோன்ற கடைகளை இன்னும் பல கிராமங்களில் திறக்க வேண்டும் என்பதே என் லட்சியம்” என்றார்.

வரவேற்க வேண்டிய முயற்சி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x