Published : 03 Aug 2016 10:17 AM
Last Updated : 03 Aug 2016 10:17 AM

உலக மசாலா: துடுப்புப் போடுவதையும் படிகளில் ஏறுவதையும் இணைத்து விளையாட்டு

சிம்ஜிம் புதிய வீடியோ கேம். துடுப்புப் போடுவதையும் படிகளில் ஏறுவதையும் இணைத்து உருவாக்கப்பட்ட விளையாட்டு. சிம்ஜிம் விளையாடினால் மொத்த உடலுக்கும் பயிற்சி கிடைத்துவிடும். சிகாகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சிம்ஜிம் விளையாட்டை உருவாக்கியிருக்கிறது. மலைப் பிரதேசத்தில் நடப்பது சிரமமாக இருக்கும் அல்லவா? அதேபோல திரையில் மலைப் பிரதேசத்தில் செல்லும்போது கால்களுக்கு அதிக சக்தி கொடுத்து மிதிக்க வேண்டும். கனமான பொருட்களைத் தூக்குவது சிரமம். அதுவே ஒரு நெம்புகோல் இருந்தால் எளிதாகத் தூக்கிவிடலாம்.

இந்தத் தத்துவத்தை அடிப்படையாக வைத்து, கைகளுக்கும் விளையாட்டுகளை உருவாக்கியிருக்கிறார்கள். சிம்ஜிம் திரையில் இந்த விளையாட்டு மூலம் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகின்றன, நேரம் போன்றவை காண்பிக்கப்படுகின்றன. சிம்ஜிம் கருவியின் விலையை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சிம்ஜிம் ஸ்டுடியோவில் ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம். நீண்ட தூரம் நடந்து செல்லும் போகிமான் கோ விளையாட்டைவிட, சிம்ஜிம் சிறந்தது என்கிறார்கள்.

டூ இன் ஒன் சிம்ஜிம்!

தென் அமெரிக்காவின் மிக ஆபத்தான போதை மருந்து கடத்தல்காரர்களில் ஒருவர் ஜார்விஸ் சிம்மெனெஸ் பாவோ. 8 ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டு, டாகும்பு சிறையில் இருந்து வருகிறார். சிறையில் இருந்து ஜார்விஸ் தப்பிக்க இருக்கிறார் என்ற செய்தியால் பராகுவே காவல்துறை அவரது அறையைச் சோதனை செய்யச் சென்றது. அறையைப் பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

அது ஒரு சிறை அறையாகத் தெரியவில்லை. நவீன ஆடம்பர வீடாகக் காட்சியளித்தது. 3 அறைகள் கொண்ட பெரிய வீடு. குளிர்சாதன வசதி, நவீன குளியலறை, அட்டகாசமான சமையலறை, நூலகம், டிவிடிகள், மிகப் பெரிய டிவி, சோபா, நாற்காலிகள், இன்டர்நெட் இணைப்பு, செல்போன் என்று அத்தனை வசதிகளும் இருந்தன. சிறைக் கைதிகள் விரும்பினால், கட்டணத்தைச் செலுத்திவிட்டு, ஆடம்பர அறைகளில் தங்கிக்கொள்ளலாம் என்ற வசதி அந்தச் சிறையில் அளிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை கொடுத்த அறிக்கைக்குப் பிறகு, ஜார்விஸ் சொகுசு அறையில் இருந்து வேறொரு சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

அவர் வசித்த சொகுசு அறை இடிக்கப்பட்டுவிட்டது. ஜார்விஸ் சிறையில் சொகுசாக வாழ்ந்த செய்தி, பராகுவே நீதித் துறையை அசைத்துப் பார்த்திருக்கிறது. ஜார்விஸின் வழக்கறிஞர் லாரா அகாசுசோ, ‘’என் கட்சிக்காரர் சொகுசு அறைக்காக ஏராளமானவர்களுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார். சட்டத்துறையைச் சேர்ந்த 6 வல்லுநர்கள், 6 சிறை இயக்குநர்களுக்குப் பணம் கொடுத்தே, இந்த வசதியைப் பெற்றிருக்கிறார். ஜார்விஸைக் குறை சொல்வதை விட்டு, அவர்களை விசாரிக்க வேண்டும்’’ என்கிறார்.

அனைவர் மீதும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சக கைதிகளோ, ஜார்விஸ் மிக அன்பான மனிதர் என்று புகழ்கிறார்கள். சிறையில் உள்ள கால்பந்து மைதானத்தையும் நூலகத்தையும் சீரமைத்துக் கொடுத்திருக்கிறார். சமையல் கலைஞர்களை நியமித்து, சுவையான உணவுகளுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

அதிநவீன ஆடம்பரச் சிறை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x