Published : 08 Jul 2015 10:32 AM
Last Updated : 08 Jul 2015 10:32 AM

உலக மசாலா: திமிங்கலத்துடன் செல்ஃபி!

சப்ரினா பெல்லோனி ஆழ்கடல் சாகசக்காரர். கரீபியன் கடலில் 10 நாட்கள் தொடர்ந்து நீந்திக்கொண்டிருந்தார். அப்பொழுது 7 ஸ்பெர்ம் திமிங்கிலங்களைக் கண்டறிந்தார். பேருந்தை விடப் பெரிதாக இருந்த ஒரு திமிங்கிலத்துடன் தானும் இரண்டரை நிமிடங்கள் நீந்தினார். அந்தக் காட்சிகளைப் புகைப்படங்கள் எடுத்தார் ஃப்ரான்கோ பான்ஃபி.

இதுவரை திமிங்கிலங்களுடன் இவ்வளவு நெருக்கமாகவும், இவ்வளவு நேரமும் யாரும் நீந்தியதில்லை. அதேபோல திமிங்கிலங்களை இவ்வளவு தெளிவாக இதுவரை யாரும் புகைப்படங்கள் எடுத்ததும் இல்லை. ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் 60 அடி நீளம் வரை வளரக்கூடியவை. பத்து நாட்களும் ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன. கூட்டம் கூட்டமாகவே திமிங்கிலங்கள் வாழ்கின்றன. அதிலும் தாயும் குட்டிகளும் ஒன்றாகவே நீந்திக்கொண்டிருக்கின்றன என்கிறார் சப்ரினா.

சபாஷ் சப்ரினா!

கிழக்கு சீனாவின் ஹிஃபேய் பகுதியில் வசிக்கிறார் ஷெங் ரு ஸி. இவருடைய மகன் ஸாங் கை, புற்றுநோயால் 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகனின் நண்பர்கள் 7 பேரும் இன்று வரை ஷெங்கைக் கவனித்து வருகிறார்கள். 2001ம் ஆண்டு, பள்ளி மாணவராக இருந்த ஷாங் கைக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து தாயையும் மகனையும் நண்பர்கள் ஏழு பேரும் அன்புடன் கவனித்துக்கொண்டார்கள்.

அடுத்த மூன்றாவது ஆண்டு ஸாங் இறந்து போனார். ஒரு மகனையும் இழந்து, தனியாக நின்ற ஷெங்கைக் கவனித்துக்கொள்ள நண்பர்கள் முடிவு செய்தனர். “மகனை இழப்பது ஒரு தாய்க்கு எவ்வளவு கொடுமையான விஷயம்? அந்தத் துயரத்திலிருந்து என்னை மீட்டவர்கள் இந்தக் குழந்தைகள்தான். இந்த ஏழு பேரிலும் என் மகன் வாழ்கிறான். கல்லூரிப் படிப்பு முடித்து, அவரவர் குடும்பம், குழந்தை என்று ஆகிவிட்டாலும் கூட இந்தத் தாயை ஒருவரும் மறக்கவில்லை’’ என்கிறார் ஷெங்.

அன்பால் உருவாக்கப்பட்ட அபூர்வ மகன்கள்!

சூரிய ஒளியைக் குவித்து, விதவிதமாக உடலில் ஓவியங்கள் தீட்டிக்கொள்வது சமீபக் காலமாக நடந்து வருகிறது. ஒரு தாளில் வேண்டிய டிசைனை வெட்டி விட்டு, உடல் மீது ஒட்டி விட வேண்டும். பிறகு பல மணி நேரம் வெயிலில் அப்படியே படுத்திருக்க வேண்டும். சூரியன் படும் பகுதி மட்டும் அடர்ந்த நிறமாக மாறும். மற்றப் பகுதிகள் தோலின் நிறத்தை ஒத்திருக்கும். டாட்டூ போன்று வலியும் கிடையாது, நிரந்தரமாக இந்த ஓவியம் உடலில் இருக்கப் போவதும் இல்லை என்பதால், இதைச் செய்துகொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சூரிய ஒளியில் இப்படி நேரடியாகப் பல மணிநேரம் இருக்கும்போது தோல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள். சூரியக் குளியலின்போது தோலை இவ்வளவு தூரம் யாரும் வருத்திக்கொள்வதில்லை. ஆனால் இந்த ஓவியத்துக்காக அதிகப்பட்சமாகத் தோல் பாதிக்கப்படுகிறது. அதனால் ஆபத்தும் அதிகரித்திருக்கிறது. சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாப்பதுதான் சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.

வம்பை விலை கொடுத்து வாங்கணுமா என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x