Published : 23 Mar 2016 10:51 AM
Last Updated : 23 Mar 2016 10:51 AM

உலக மசாலா: தானாக இயங்கக்கூடிய ஷூ!

ஷூ போடுபவர்களுக்கு லேஸ் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். ஷூ தயாரிக்கும் பிரபல நைக்கி நிறுவனம், தானாக இயங்கக்கூடிய ஷூக்களை உருவாக்கியிருக்கிறது. 1989-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, 2015-ம் ஆண்டில் வெற்றி பெற்றுவிட்டது. நைக்கி ஹைபர் அடாப்ட் 1.0 என்ற ஷூக்களை வாங்கி, கால்களை நுழைத்தால் தானாகவே இறுகிக்கொள்ளும். அதைத் தளர்த்த வேண்டும் என்றால் ஷூக்களின் பக்கவாட்டில் இருக்கும் பட்டனை அழுத்தினால் போதும்.

2 நொடிகளில் தளர்த்திவிடும். காலை வெளியில் எடுத்துவிடலாம். ஷூ வாங்கி 2 வாரங்கள் வரை இப்படி பட்டனை அழுத்தும் வேலை இருக்கும். பிறகு தானாகவே இயங்க ஆரம்பித்துவிடும். பாட்டரியில் இந்த ஷூ வேலை செய்கிறது. 2 வாரங்களுக்கு ஒருமுறை பாட்டரியை சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். இது ஆரம்ப முயற்சி. இன்னும் ஷூக்களில் பல புதுமைகளைச் செய்ய இருக்கிறோம் என்கிறார்கள் நைக்கி நிறுவன உரிமையாளர்கள். விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஷூக்கள், பல வண்ணங்களில் கிடைக்கின்றன.

தானியங்கி ஷூ!

டெக்சாஸில் கடந்த 59 ஆண்டுகளாக மார்ச் மாதம் இரண்டாவது வார இறுதியில் ‘ரேட்டில் ஸ்நேக் ரவுண்ட்அப்’ என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் கண் முன்னே ஆயிரக்கணக்கான பாம்புகளின் தலைகள் வெட்டப்பட்டு, தோல்கள் உரிக்கப்படுகின்றன. அமெரிக்காவின் தென் பகுதிகளில் பாம்புகள் பிடித்து, கொல்லப்படும் நிகழ்ச்சி சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. டெக்சாஸில் மட்டும்தான் மிகப் பெரிய அளவில் இது நடைபெறுகிறது. அதிக விஷம் கொண்ட ரேட்டில் பாம்புகள், ஏராளமான கால்நடைகளைக் கொன்று வந்தன.

1958-ம் ஆண்டு ஜூனியர் சேம்பர் ஆஃப் காமர்ஸ், பெருகியிருந்த பாம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தது. இன்றும் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக வருகிறார்கள். 6 மாதங்களுக்கு முன்பே பாம்புகளைப் பிடித்து ஓரிடத்தில் சேகரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரே இடத்தில் நெருக்கமாகவும் போதிய உணவு இன்றியும் வசிக்கும் பாம்புகள், கொல்வதற்கு முன்பே இறக்கும் நிலைக்குச் சென்று விடுகின்றன.

மயக்கத்தில் இருக்கும் பாம்புகளைக் கண்ணாடி அறைக்குள் வைத்து, பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பாம்பு பிடிப்பவர்களிடம் அழகிப் போட்டியும் நடத்தப்படுகிறது. பாம்புகளின் தோல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பாம்புகளின் மாமிசத்தில் செய்யப்பட்ட உணவுகள் கிடைக்கின்றன. சமீபக் காலங்களாக பாம்புகளை கொல்லும் இந்த நிகழ்ச்சி மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. ’மனிதர்கள், கால்நடைகள் பாம்புகளால் பாதிக்கப்படும்போது, கொல்வது தவிர்க்க இயலாது. பெருகும் பாம்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க, இதுதான் வழி’ என்கிறார்கள் ஆதரவாளர்கள். ‘இன்று அறிவியலும் மருத்துவமும் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. பாம்பு கடித்தால், மருத்துவம் செய்துகொள்ள முடியும். கடந்த 10 ஆண்டுகளாக எந்தக் கால்நடையும் பாம்பு கடித்து இறக்கவில்லை’ என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். அதிகாரப்பூர்வமாக இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டாலும் இன்றும் பல இடங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

விலங்குகள் நல அமைப்புகள் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x