Published : 29 Aug 2015 10:20 AM
Last Updated : 29 Aug 2015 10:20 AM

உலக மசாலா: தாத்தாவின் தலையில் கொம்பு!

சீனாவின் கையன் கிராமத்தில் வசித்து வருகிறார் 87 வயது லியாங் ஸியுஸென். 8 ஆண்டுகளுக்கு முன்பு லியாங்கின் தலையில் மச்சம் ஒன்று தோன்ற ஆரம்பித்தது. அது பெரிதாகிக்கொண்டே வந்தது. மச்சம் தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். அது கொம்பு போலப் பெரிதாக வளர்ந்துவிட்டது. கொம்பு நமைச்சல் தருவதாக அடிக்கடி சொல்லி வந்தார் லியாங். சீன மருத்துவம் செய்தும் பலன் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தானாகவே உடைந்து போனது கொம்பு.

எல்லோரும் நிம்மதியடைந்தனர். ஆனால் மீண்டும் அதே இடத்தில் கொம்பு முளைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த முறை அதன் வளர்ச்சி வேகம் அதிகரித்துவிட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்தக் கொம்பும் உடைந்து, மீண்டும் முளைத்தது. தற்போது காண்டாமிருகத்தின் கொம்பு போல 13 செ.மீ. நீளத்துக்குப் பெரிதாக வளர்ந்து லியாங்கின் நிம்மதியைக் கெடுத்து வருகிறது. மருத்துவர்கள் கொம்பைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

பரிசோதனை செய்து பார்த்ததில் தோல் கட்டி என்று தெரியவந்தது. அறுவை சிகிச்சை மூலம் கொம்பை எடுத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் குடும்பத்தினரோ லியாங்கின் வயதைக் காரணம் காட்டி மறுத்து வருகிறார்கள். தன் பிரச்சினையை யாராவது சரி செய்ய மாட்டார்களா என்று காத்திருக்கிறார் லியாங்.

ஐயோ பாவம்… வயதான காலத்தில் இப்படி ஒரு பிரச்சினையா…

கொரியாவைச் சேர்ந்த டிசைனர் ஜாங் ஊசியோக். காபி மூடியை வித்தியாசமான முறையில் உருவாக்கியிருக்கிறார். அதாவது மூடி மனித முகம் போன்று காட்சியளிக்கிறது. வாய்ப் பகுதியில் இருக்கும் துளை மூலம் காபியை உறிஞ்சிக் குடிக்கலாம். ’’மூடியில் ஓட்டை போட்டு, ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக் குடிப்பது வழக்கமானது.

நான் வித்தியாசமாகச் செய்ய நினைத்தேன். மனித முகத்தில் இருந்து காபி பருகுவது எல்லோரையும் உற்சாகமடைய வைக்கும். நான் நினைத்தது போலவே ஆண்களும் பெண்களும் இந்த மூடிக்கு அதிக வரவேற்பை அளித்திருக்கின்றனர். ஒரே மாதிரியான விஷயங்கள் வாழ்க்கையைச் சலிப்படைய வைத்துவிடும். இப்படி விதவிதமாக யோசித்து, நம்மை நாமே உற்சாகம் செய்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் ஜாங் ஊசியோக்.

காபி சுவையாக இருந்தாலே உற்சாகம் வந்துவிடாதா என்ன?

பொதுவாக வயதானவர்கள் ஃபேஷன் குறித்து ஆர்வம்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஜெர்மனியைச் சேர்ந்த 70 வயது குந்தர் ஆன்லைன் ஃபேஷன் உலகில் புதிய சகாப்தம் படைத்து வருகிறார். சமீபத்தில் பெர்லின் ரயில் நிலையத்தில் குந்தர் விதவிதமாக ஆடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ‘’வயது என்பது வெறும் எண்கள்தான். ஃபேஷனுக்கும் வயதுக்கும் தொடர்பில்லை.

ஆரோக்கியமான உடல்நிலை, அழகான எளிமையான ஆடைகள், மகிழ்ச்சியான புன்னகை இருந்தால் போதும். உங்கள் உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சியும் நல்ல எண்ணங்களும் முகத்தில் பிரதிபலிக்க வேண்டும். வேறு ஒன்றும் தேவை இல்லை’’ என்கிறார் குந்தர். தனித்துவம் மிக்கவர் என்று பெர்லின் ஃபேஷன் உலகம் குந்தரைக் கொண்டாடி வருகிறது.

எந்த விஷயத்துக்கும் வயது ஒரு தடையில்லை!

அமெரிக்காவில் வசிக்கிற 25 வயது மாத்யுவும் 24 வயது கைலாவும் சுற்றுலா சென்றனர். அலையடிக்கும் பகுதியில் நின்றுகொண்டிருந்த கைலாவிடம், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கோரிக்கை வைக்க நினைத்தார் மாத்யு. கையில் இருந்த சிறிய மோதிரப் பெட்டியைத் திறந்தார். மோதிரம் உருண்டு, கடலுக்குள் சென்றுவிட்டது. அதிர்ச்சியில் உறைந்து போனார் மாத்யு. கைலாவுக்கும் ஏமாற்றமாக இருந்தது.

சட்டென்று கடலில் குதித்து மோதிரத்தைத் தேட ஆரம்பித்தார் மாத்யு. எப்படித் தேடியும் கிடைக்கவே இல்லை. அருகில் இருந்தவர்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டு, தங்கள் பங்குக்குக் கடலில் குதித்து தேடினர். கைல் ப்ளுஷர் என்பவர் இரண்டு மணி நேரம் கடலுக்குள் தேடி, மோதிரத்துடன் மேலே வந்தார். எல்லோரும் கைதட்டி அவரைப் பாராட்டினர். தனியாக கோரிக்கை வைக்க நினைத்த மாத்யு, நூற்றுக்கணக்கானவர்களுக்கு முன்பு திருமணக் கோரிக்கை வைத்தார். கைலாவும் சம்மதிக்க, மோதிரத்தை அணிவித்தார்.

உயிரைப் பணயம் வைத்து தேடிக் கொடுத்த கைலுக்கு ஒரு பூங்கொத்து!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x