Published : 21 Dec 2016 09:53 AM
Last Updated : 21 Dec 2016 09:53 AM

உலக மசாலா: தன்னம்பிக்கையின் மறுபெயர்!

ஹாங்காங்கைச் சேர்ந்த 33 வயது லாய் சி வாய், ஆசிய மலையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 முறை பட்டங்களை வென்றிருக்கிறார். 2011-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது மோசமான விபத்து ஏற்பட்டது. “நான் கண் விழித்தபோது மருத்துவமனையில் இருந்தேன். எனக்குச் சில அறுவை சிகிச்சைகள் முடிந்திருந்தன. இனி நான் சக்கர நாற்காலியில்தான் என் வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும் என்றும் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்றும் சொன்னார்கள்.

மருத்துவமனையில் இருந்து திரும்பிய என்னை, குடும்பத்தினரும் நண்பர்களும் அக்கறையுடன் அரவணைத்துக்கொண்டார்கள். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே குத்துச்சண்டை பயிற்சி செய்துகொண்டிருந்தேன். அதைப் பார்த்த என் நண்பர்கள், சக்கர நாற்காலியுடன் மலையேறுவதற்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். 2014-ம் ஆண்டு ஹாங்காங்கின் புகழ்பெற்ற லயன் மலையில் முதல் முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன்.

என் நண்பர்கள் மிகவும் கவலையடைந்தனர். பிறகு என் உறுதியைக் கண்டு ஆதரவளித்தனர். 500 மீட்டர் மலை என்னை வா, வா என்று அன்போடு அழைத்துக்கொண்டே இருந்தது. இரண்டாண்டுகள் நன்றாகப் பயிற்சி செய்தேன். 2016 டிசம்பர் 9-ல் நான் சக்கர நாற்காலியுடன் மலையேறும் விஷயத்தை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தினேன். அந்தக் கிரானைட் மலையில் நம்பிக்கையோடு ஏற ஆரம்பித்தேன். மிகச் சவாலாகவும் கடினமாகவும் இருந்தது. எந்தச் சூழ்நிலையிலும் முயற்சியைக் கைவிட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே என் நினைவில் இருந்துகொண்டே இருந்தது. இறுதியில் மலை உச்சியை அடைந்தேன். ஐந்தாண்டுகளுக்கு முன்பு இதே டிசம்பர் 9 அன்று சாலையில் அடிபட்டுக் கிடந்தேன். ஐந்தே ஆண்டுகளில் கால்கள் இயங்காவிட்டாலும் மலை உச்சியில் அமர்ந்துகொண்டிருக்கிறேன். நான் எதையும் இழந்துவிடவில்லை என்பதை இந்த மலையேற்றம் எனக்கு உணர்த்தியிருக்கிறது” என்று மகிழ்கிறார் லாய் சி வாய்.

மீடியாக்களிலும் சமூக வலைதளங்களிலும் லாய் சி வாயைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மலையேற்றப் பயிற்சியாளர் ஒருவர், “சக்கர நாற்காலியுடன் மலையேறுவதை இதுவரை யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். லாய் சி வாய் சக்கர நாற்காலியுடன் மலையேறியது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை” என்று சிலிர்க்கிறார்.

தன்னம்பிக்கையின் மறுபெயர் லாய் சி வாய்!

ரொட்டிகளில் தடவிச் சாப்பிடக்கூடிய நியுடெல்லாவை, முடிக்குச் சாயம் ஏற்றுவதற்குப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். துபாயைச் சேர்ந்த முடிதிருத்துநர்கள் அபேத், சமீர் இருவரும் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நியுடெல்லாவை முடிகளில் தடவி சிறிதுநேரம் ஊறவைக்கிறார்கள். பிறகு முடிகளைச் சுத்தம் செய்தால், பொன் நிறத்திலும் பளபளப்பாகவும் பட்டுப் போலவும் முடிகள் மாறிவிடுகின்றன. தற்காலிக சாயம் ஓரிரு நாட்களில் காணாமல் போய்விடும். ஆனால் நியுடெல்லா சாயம் 3 வாரங்களுக்குத் தாக்குப்பிடிக்கிறது என்கிறார்கள். சத்தும் சுவையும்கொண்ட குழந்தைகள் அதிகம் விரும்பக்கூடிய நியுடெல்லாவை, முடிக்குச் சாயமாகப் பயன்படுத்துவதற்கு எராளமானவர்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

நியுடெல்லாவுக்கு வந்த சோதனை…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x