Published : 10 Jan 2017 10:23 AM
Last Updated : 10 Jan 2017 10:23 AM

உலக மசாலா: தனிமையில் வாடும் யானை...

ஸ்காட்லாந்தில் ப்ளேர் ட்ரம்மோன்ட் சஃபாரி பார்க்கில் மாண்டி, டோட்டோ என்ற இரண்டு யானைகள் வசித்து வந்தன. 20 ஆண்டுகளாக மிக நெருங்கிய நண்பர்களாகப் பழகின. கடந்த மார்ச் மாதம் 46 வயதில் டோட்டோ இறந்து போனது. இதனால் மாண்டி மிகவும் சோகத்தில் ஆழ்ந்தது. சரியாக உணவு சாப்பிடாமல் உடலும் இளைத்தது. பிறகு தன்னைத் தேற்றிக்கொண்டு அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்தது.

தற்போது தனிமையில் மிகவும் சிக்கித் தவிக்கிறது மாண்டி. தனக்காக ஒரு நட்பைத் தேடுகிறது. இதனால் மீண்டும் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டது. உற்சாகமாக இருப்பதில்லை, சரியாக உண்பதில்லை. “பொதுவாக யானைகள் தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த யானை இறந்தால் துக்கத்தைக் கடைபிடிக்கின்றன. ஆனால் வெவ்வேறு கூட்டத்தைச் சேர்ந்த மாண்டியும் டோட்டோவும் இவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்ததும் டோட்டோவின் பிரிவுக்காக 10 மாதங்களுக்குப் பிறகு வருத்தப்படுவதும் ஆச்சரியமாக இருக்கிறது. ஐரோப்பா முழுவதும் மாண்டிக்காக 46 வயது யானை ஒன்றைத் தேடிவருகிறோம். மாண்டி ஆதிக்கம் செலுத்தக்கூடிய குணமுடையது. புதிய தோழியைப் படிப்படியாகத்தான் ஏற்றுக்கொள்ளும்” என்கிறார் பூங்கா அதிகாரி கேட்டி மேக்ஃபார்லேன்.

தனிமையில் வாடும் யானை…

கலிபோர்னியாவில் உள்ள ஒரு பெரிய அங்காடியில் தொப்பியும் நீல நிறச் சட்டையும் அணிந்து வந்த மனிதர், வாடிக்கையாளர்கள் செல்லும் வரை காத்திருந்தார். திடீரென்று வலது கையைப் பின்பக்கம் வைத்துக்கொண்டு, காசாளரிடம் பணம் தருமாறுக் கேட்டார். அவர் யோசிக்கவே, கையில் துப்பாக்கி இருக்கிறது என்று சொன்னார். உடனே கைகளைத் தூக்கிக்கொண்டு காசாளர் சற்றுப் பின்னே நகர்ந்தார். மேஜை மீது ஏறிக் குதித்து, இடது கையால் பணத்தை எடுத்தார். வலது கையை முன்பக்கம் சட்டைக்குள் மறைத்தபடி, மீண்டும் மேஜை மீது ஏறிக் குதித்து, கடையை விட்டு அகன்றார். துப்பாக்கி முனையில் 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதை காவல் துறையில் புகார் செய்தனர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, அந்த மர்ம நபரின் கையில் துப்பாக்கியே இல்லை. விரல்களைத் துப்பாக்கி போல மடக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்தக் காட்சிகளை வெளியிட்டு, குற்றவாளியைப் பார்த்தால் தகவல் கொடுக்கும்படி காவல்துறை கேட்டுக்கொண்டது. இரண்டு மாதங்களாகியும் இதுவரை யாரும் தகவல் கொடுக்கவில்லை.

உலகிலேயே மிகவும் அசாதாரணமான கொள்ளை!

ஜெர்மனியில் உள்ள ஒரு தீவில் ஆயிரக்கணக்கான ஈஸ்டர் முட்டைகள் கொட்டிக்கிடந்தன. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வண்ணமயமான இந்த முட்டைகளைச் சேகரிக்க குழந்தைகளும் பெரியவர்களும் கூடிவிட்டனர். இது எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த வழியே செல்லும் சரக்குக் கப்பல்களில் இருந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. முட்டைக்குள் பொம்மையும் சாக்லேட்டும் ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட ஒரு தாளும் இருந்தன. கோணிகளில் சேகரிக்கப்பட்ட இந்த முட்டைகள், குழந்தைகள் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தீவில் கொட்டிக் கிடந்த முட்டைகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x