Published : 28 Apr 2017 09:47 AM
Last Updated : 28 Apr 2017 09:47 AM

உலக மசாலா: தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்த தனி மனிதர்!

சீனாவின் காவோவாங்பா என்ற மலைக் கிராமத்தின் தலைவர் ஹுவாங் டஃபா. 36 ஆண்டுகளில் 10 கி.மீ. தூரத்துக்கு மூன்று மலைகளில் கால்வாய் வெட்டி, தண்ணீர் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! 56 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கிராமத்தில் கடுமையான வறட்சி. மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்தனர். அன்றாடத் தேவைகளுக்குக் கூட பல மைல் தூரம் சென்று தண்ணீர் எடுத்துவர வேண்டியிருந்தது. மக்களின் துயர் துடைக்க மூன்றாவது மலையில் இருந்த நீரைக் கொண்டு வந்து சேர்க்கத் திட்டமிட்டார் 23 வயது டஃபா. 1959-ம் ஆண்டு வேலையை ஆரம்பித்தார். ஆனால் அவர் நினைத்தது போல வேலை எளிதாக இல்லை. ஊர் மக்கள் இது செய்ய முடியாத வேலை, நேரம் விரயம் என்றார்கள். ஆனால் இதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. நவீனக் கருவிகள் இன்றி, மலையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கினார். ஒருகட்டத்தில் தான் சரியாகச் செய்கிறோமா என்று சந்தேகம் வந்தவுடன், வேலையை நிறுத்திவிட்டு நகருக்குச் சென்று நீர் தொழில்நுட்பம் படித்தார். பொறியியல் வல்லுநர்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பணியைத் தொடர்ந்தார். கிராம மக்களும் அவருடன் சேர்ந்து வேலை செய்தனர். இவரது மகளும் பேரனும் இறந்தபோதுகூட துக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு, வேலையைத் தொடர்ந்தார். 1995-ம் ஆண்டு 7,200 மீட்டர் நீண்ட கால்வாயும் 2,200 மீட்டருக்கு துணைக் கால்வாயும் வெட்டி முடிக்கப்பட்டன. மூன்று மலைகளைக் கடந்து தண்ணீர் வந்து சேர்ந்தது. வழியில் இருந்த மூன்று கிராமங்கள் பயனடைந்தன. டஃபாவைக் கவுரவிக்கும் விதத்தில் அவர் பெயரையே கால்வாய்க்குச் சூட்டினர். “மக்களுக்குத் தண்ணீர் கிடைத்த பிறகுதான் என் மனம் அமைதியானது. நல்ல விளைச்சல். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாங்கள் இந்த வேலையைச் செய்திருக்காவிட்டால் இன்றும் வறுமையில்தான் வாடிக்கொண்டிருந்திருப்போம்” என்கிறார் 82 வயது டஃபா. 1,200 மக்களால் ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் கிலோ அரிசி வரை விளைவிக்கப்படுவதற்குக் காரணம் இவர்தான்.

தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்த தனி மனிதர்!

ரஷ்யாவைச் சேர்ந்த 20 வயது ஆண்ட்ரே நகோமி என்ற இளைஞர், பெண்களுக்கான உள்ளாடை விளம்பரப் போட்டியில் கலந்துகொண்டு, வெற்றி பெற்றிருக்கிறார்! பெண்களுக்கான உள்ளாடை நிறுவனம் ஒன்று ஆன்லைனில் புகைப்படப் போட்டியை அறிவித்தது. தன் தோழி மூலமாக விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆண்ட்ரே, தனக்குப் பெண் சாயல் இருப்பதால் போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தார். ஒப்பனை செய்து, விதவிதமான உள்ளாடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்து, போட்டிக்கு அனுப்பி வைத்தார். “விளையாட்டுக்குத்தான் இந்தக் காரியத்தைச் செய்தேன். ஆனால் என்னை வெற்றியாளராக அறிவிப்பார்கள் என்று நினைக்கவே இல்லை. நேரடியாக என்னைப் புகைப்படங்கள் எடுப்பதற்கு வந்தபோது தான் நான் ஆண் என்று தெரிந்தது. என்னைப் போட்டியிலிருந்து நீக்கிவிட்டு, இரண்டாம் இடத்திலிருந்த ஒரு பெண்ணை வெற்றியாளராக அறிவித்தனர்” என்கிறார் ஆண்ட்ரே.

என்ன ஒரு குறும்பு…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x