Published : 13 Aug 2015 10:57 AM
Last Updated : 13 Aug 2015 10:57 AM

உலக மசாலா: தண்ணீரைக் காக்கும் கறுப்புப் பந்து!

கலிஃபோர்னியாவில் புதுப் புது வழிகளில் நீர் நிலைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது அரசாங்கம். லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள சில்மர் நீர்த்தேக்கத்தில் இருக்கும் நீர் வேகமாக ஆவியாகி வருகிறது. அதைத் தடுப்பதற்காக நீர்த்தேக்கம் முழுவதும் மூடும் விதத்தில் 9.6 கோடி கறுப்பு பிளாஸ்டிக் பந்துகள் போடப்பட்டிருக்கின்றன. தண்ணீரே கண்களுக்குத் தெரியாதவாறு பந்துகள் அந்தப் பகுதியையே மறைத்துவிட்டன.

இதன் மூலம் தண்ணீரை அழுக்கு, ரசாயனம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதோடு, நீர் ஆவியாகாமலும் தடுக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பந்துகள் மூலம் ஓராண்டுக்கு 300 காலன் (1135 லிட்டர்) தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க முடியும் என்கிறார்கள். அத்துடன் சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களையும் தண்ணீருக்குள் ஊடுருவ விடாமல் தடுத்து விடுகின்றன இந்தப் பந்துகள்.

பிளாஸ்டிக் பந்துகள் மூலம் சுற்றுச் சூழல் சீர்கேடு வராமல் இருந்தால் சரி

பொதுவாக விலங்குகளுக்கு கறுப்பு, வெள்ளை நிறங்களையே அறிய முடியும். விலங்குகளின் உடல் மேல் இருக்கும் வரிகள், எதிரிகளின் கண்களுக்கு எளிதில் சிக்காமல் தப்பிவிட முடியும் என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் வரிக்குதிரையின் கோடுகள் மிக எளிதாக சிங்கம், புலி போன்ற விலங்குகளின் கண்களுக்குக் காட்டிக் கொடுப்பதாகவே இருக்கின்றன என்று சொல்கிறார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி.

சாம்பல் வண்ணத்தை விட, கறுப்பு கோடுகள் இரை தேடி வரும் விலங்குகளுக்குச் சாதகமாக இருக்கின்றன. வரிக்குதிரையின் வரிகள் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதன் மூலம் வரிக்குதிரையின் வேகம், செல்லும் திசை போன்றவற்றை அறிந்துகொண்டு, சுலபமாக வேட்டையாடி விடுகின்றன சிங்கங்கள்.

அடப் பாவமே… பாதுகாப்புன்னு நினைச்சது இப்படி ஆபத்தா மாறிருச்சே!

துருக்கியைச் சேர்ந்த ஃபெதுல்லாவுக்கும் எஸ்ராவுக்கும் கடந்த வாரம் கோலாகலமாகத் திருமணம் நடந்துமுடிந்துள்ளது. மணமக்கள் இருவரும் தங்கள் கல்யாண விருந்தை சிரியாவைச் சேர்ந்த அகதிகளுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட சிரிய அகதிகள், உலகிலேயே மோசமான நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று மணமக்கள் தீர்மானித்தனர். தங்களது திருமணத்தையொட்டி அறக்கட்டளை மூலம் சிரிய அகதிகளுக்கு விருந்து வைக்க முடிவு செய்தனர். திருமணம் முடிந்த பிறகு, மணமக்கள் இருவரும் 4 ஆயிரம் அகதிகளுக்கும் தங்கள் கைகளாலேயே உணவுகளைப் பரிமாறினர்.

‘’சிரியாவைச் சேர்ந்த சகோதரர்களுக்கு உதவ விரும்பினோம். இந்தச் செய்தி உலகம் முழுவதும் புகைப்படங்களுடன் பரவிவிட்டது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துச் சொன்ன அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி” என்கிறார் ஃபெதுல்லா. ’’முதலில் ஃபெதுல்லா என்னிடம் சொன்னபோது, நான் இதை நன்கு புரிந்துகொள்ளவில்லை. ஆனால் சிரியாவைச் சேர்ந்த குழந்தைகளின் கண்களில் மகிழ்ச்சியைப் பார்த்தபோது, ஆச்சரியமடைந்துவிட்டேன்.

மற்றவர்களின் மகிழ்ச்சியில்தான் எங்களின் மகிழ்ச்சி இருக்கிறது என்பதை இதன் மூலம் உணர்ந்துகொண்டேன்’’ என்கிறார் எஸ்ரா. இந்த யோசனையைக் கொடுத்தவர் ஃபெதுல்லாவின் தந்தைதான். ‘’பக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கஷ்டத்தில் இருக்கும்போது, நாம் மட்டும் மகிழ்ச்சியாக இருந்து விடமுடியுமா? எங்களால் முடிந்த ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். மகனிடம் சொன்னேன். எல்லோருக்கும் இதை ஏற்றுக்கொண்டனர்’’ என்கிறார் அலி.

நல்ல மனம் வாழ்க!

ஜெர்மனியைச் சேர்ந்த 26 வயது ஸ்டீவ் ஹகிமியர், மிக நீளமான பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியிருக்கிறார். அதிலும் ஆகாயத்தில் விழாவை நடத்தி முடித்திருக்கிறார். ஆக்லாந்து, நியூஸிலாந்து, ஹவாய், ஆஸ்திரேலியா என்று தொடர்ந்து 46 மணி நேரங்கள் விமானத்தில் பறந்து இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இதன் மூலம் கின்னஸ் சாதனையையும் பெற்றுவிட்டார். அடுத்த பிறந்தநாளை குடும்பத்தினருடன் வீட்டுக்குள் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டீவ்.

வாழ்த்துகள் ஸ்டீவ்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x