Published : 04 Apr 2015 10:50 AM
Last Updated : 04 Apr 2015 10:50 AM

உலக மசாலா: தங்க சைக்கிள்!

தங்க நகை வடிவமைப்பாளராக இருக்கிறார் ஹக் பவர் . ஆபரணங்கள் மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களையும் தங்கத்தால் செய்து விற்பனைக்கு வைத்திருக்கிறார். ஹவுஸ் ஆஃப் சாலிட் கோல்ட் என்ற பெயரில் கம்பெனியை நடத்தி வருகிறார். பல்குத்தும் குச்சி, பற்கள், ஷு லேஸ், காது குடையும் குச்சி, சாப்ஸ்டிக், கண்ணாடி, தட்டு போன்றவற்றைத் தங்கத்தால் வடிவமைத்திருக்கிறார்.

அவர் உருவாக்கிய பொருட்களிலேயே தங்கத்தால் உருவாக்கிய சைக்கிள்தான் மிகவும் திருப்தியளிப்பதாகச் சொல்கிறார். வைரக் கற்கள் பதிக்கப்பட்ட கால்பந்தும் வாடிக்கையாளர்களைக் கவர்கிறது என்கிறார். இந்தப் பொருட்களைப் பரிசாக அளித்தால், வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்கிறார் பவர். தங்கத்தால் செய்யப்பட்ட சைக்கிளின் விலை ரூ.3 கோடி.

உங்க பொருட்களை வாங்கற அளவுக்கு எங்க கிட்ட பவர் இல்லையே…

மெக்ஸிகோவில் குடிக்கும் மின்சார விளையாட்டு மிகவும் பிரபலமானது. நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு, எலக்ட்ரோகட்டிங் மீது கைகளை வைக்க வேண்டும். பேட்டரி மூலம் கிடைக்கும் மின்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் ஏறும். அவரவர் தாங்கும் சக்திக்கு ஏற்ப மின்சாரத்தின் அளவை அதிகரித்துக்கொண்டே செல்லலாம். 20 வோல்ட் முதல் 120 வோல்ட் வரை மின்சாரத்தைப் பாய்ச்ச முடியும்.

ஆனால் 80 வோல்ட் மின்சாரத்துக்கு மேல் யாரும் தாக்குப் பிடிப்பதில்லை என்கிறார் இந்த விளையாட்டை நடத்தி வரும் ஜாவியர். இது பாரம்பரிய விளையாட்டு என்றும் பிறந்தநாள், திருமணம், பொருட்காட்சி, பார்ட்டி என்று சகல நிகழ்ச்சிகளிலும் இந்த விளையாட்டு கண்டிப்பாக இடம்பெறும் என்றும் சொல்கிறார்.

மின்சாரம் அதிகரிக்க, அதிகரிக்க கைகள் விறைத்து, வளையும் அளவுக்கு எல்லாம் சென்றுவிடும். 180 ரூபாயில் ஆரம்பிக்கும் இந்த விளையாட்டு ஒவ்வொரு சுற்றுக்கும் அதிகரித்து, 24 ஆயிரம் ரூபாய் வரை செல்லும். வாடிக்கையாளர்கள் எந்தக் கட்டத்தில் வேண்டுமானாலும் நிறுத்தச் சொல்லலாம்.

ஆபத்தான விளையாட்டா இருக்கே…

பிரிட்டனில் டாட்டூ பார்லர் நடத்தி வருகிறார் ஜோனே பாம். அவரிடம் ஒருவர் வந்து டாட்டூ பற்றி விசாரித்தார். பிறகு வலது கையில் இயேசு படத்தை டாட்டூவாக வரையும்படிக் கேட்டுக்கொண்டார். மிகப் பெரிய படம் என்பதால் 6 மணி நேரம் வரைய வேண்டியிருந்தது. தொடர்ந்து வரைய முடியாது. நடுநடுவே சில நிமிடங்கள் வெளியே சென்று வந்தார் ஜோனே. டாட்டூ வரைந்து முடித்த பிறகு 4,500 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு, அந்த மனிதர் வெளியேறிவிட்டார்.

பணத்தை வைக்கப் போன ஜோனே பதறிவிட்டார். அவரிடமிருந்த 92 ஆயிரம் ரூபாய்களைக் காணவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட படத்தைப் போட்டுப் பார்த்தபோது, டாட்டூ போட்ட மனிதர் பணத்தை எடுத்தது தெரியவந்திருக்கிறது. இயேசுவைப் பற்றிப் பேசிக்கொண்டும், அவரது படத்தை டாட்டூவாகப் போட்டுக்கொண்டிருக்கும் ஒருவர் இந்தக் காரியத்தைச் செய்வார் என்று நினைக்கவில்லை என்கிறார் ஜோனே.

ம்… யாரைத்தான் நம்புவதோ…

உஸ்பெகிஸ்தானில் கடந்த வாரம் இறந்து போனார் டுடி யுசுபோவா. இவர்தான் உலகிலேயே அதிகக் காலம் வாழ்ந்தவர் என்கிறார் கள் டுடியின் நண்பர்கள். 1880ம் ஆண்டு பிறந்தார் டுடி. 135 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்திருக்கிறார். அதற்கான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவற்றைக் காட்டுகிறார்கள் நண்பர்கள்.

ஜியான் கால்மெண்ட் என்ற 122 வயது பெண்தான் இது வரை உலகிலேயே அதிகக் காலம் வாழ்ந்த பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார். தற்போது அந்தச் சாதனையை மாற்றி, டுடியின் பெயரை கின்னஸில் சேர்க்கச் சொல்கிறார்கள்.

நியாயமான கோரிக்கைதான்…





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x