Published : 20 Oct 2016 11:21 AM
Last Updated : 20 Oct 2016 11:21 AM

உலக மசாலா: தங்கையின் தியாகம், அண்ணனைக் காப்பாற்றட்டும்!

சீனாவில் வசிக்கும் யாங் லி (24), 3 மாத கர்ப்பமாக இருந்தார். இவரது அண்ணன் யாங் ஜுனுக்கு (29) கடந்த ஆண்டு நிணநீர்ச் சுரப்பி புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 5 கீமோதெரபி, 18 ரேடியோதெரபி, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை வழங்கப்பட்டன.

புற்றுநோயில் இருந்து மீண்ட யான் ஜுன், கடந்த ஜூலை மாதம் மீண்டும் பாதிக்கப்பட்டார். இந்த முறை அவரைக் காப்பாற்ற ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை ஒன்றுதான் வழி என்றும், தங்கை யாங் லி யின் ஸ்டெம் செல் மிகவும் பொருந்துவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அண்ணனைக் காப்பாற்றுவதா, தன் வயிற்றில் வளரும் முதல் குழந்தையைக் காப்பாற்றுவதா என்று யாங் லி குழப்பம் அடைந்தார்.

வறுமையில் பிறந்தாலும் தன் அண்ணன் கஷ்டப்பட்டு படிக்க வைத்து, நல்ல நிலைக்குக் கொண்டு வந்ததை எண்ணிப் பார்த்தார் யாங் லி. 7 வயது அண்ணன் மகள், தனது தந்தையை இழப்பதைவிட, நான் குழந்தையை இழப்பது பெரிய விஷயமில்லை என்று முடிவு செய்தார். கணவனிடம் எடுத்துச் சொல்லி, சம்மதிக்க வைத்தார்.

“அண்ணனின் உயிரைக் காப்பாற்ற இருக்கும் கடைசி முயற்சியை என்னால் செய்யாமல் இருக்க முடியாது. கனவுகளுடன் என் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இது ஒரு துன்பமான காலக்கட்டம்தான். எனக்கு வேறு வழியில்லை” என்று சொன்ன யாங் லி, கருவைக் கலைத்தார். மருத்துவர்கள் இவரது செயலை மிகவும் பாராட்டினர். யாங் லி-யின் உடல் தேறியவுடன் ஸ்டெம் செல்லை எடுத்து, யாங் ஜுனுக்குப் பொருத்த இருக்கிறார்கள்.

ஏற்கெனவே யாங் ஜுன் ரூ.30 லட்சம் மருத்துவத்துக்குச் செலவு செய்திருக்கிறார். மேலும் ரூ.40 லட்சம் தேவைப்படுகிறது. மருத்துவர் காவோ லிஹோங் தனிப்பட்ட முறையில் யாங் ஜுனுக்காக நன்கொடை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அண்ணன், தங்கை பாசத்தை எடுத்துரைத்து, இவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். விஷயம் சமூக வலைதளங்கள் மூலம் பரவியது. நன்கொடைகள் குவிகின்றன.

தங்கையின் தியாகம், அண்ணனைக் காப்பாற்றட்டும்!

சிங்கப்பூரில் ஓர் இளைஞர் தன் வருங்கால மனைவி போகிமான் ரசிகை என்பதால், 3 ஸ்நோர்லக்ஸ் ப்ளஷ் பொம்மைகளை இணையம் மூலம் வாங்கினார். திருமணத்துக்குப் பிறகு வீட்டுக்கு வந்த மனைவி, பொம்மைகளைக் கண்டு அதிர்ந்துவிட்டார். ஒவ்வொரு பொம்மையும் 1.5 மீட்டர் உயரம் கொண்டதாக இருந்தது. அறையில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டது. இந்தப் பொம்மைகளை அகற்றாவிட்டால், தன் பிறந்த வீட்டுக்கே சென்று விடுவதாக மிரட்டினார் மனைவி. உடனே பொம்மைகளை விற்க முயன்றார். ஆனால் ஒருவரும் வாங்குவதற்குத் தயாராக இல்லை.

மிகக் குறைந்த விலையில் யாராவது இந்தப் பொம்மைகளை வாங்கி, தன் வாழ்க்கையைக் காப்பாற்றும்படி இணையத்தில் கோரிக்கை வைத்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பொம்மைகளை விற்பனை செய்துவிட்டதாகவும் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிய நல்ல உள்ளத்துக்கு நன்றி என்றும் தெரிவித்திருக்கிறார்.

ம்... வாழ்க்கைக்கே உலை வைத்த பரிசு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x