Published : 10 Dec 2016 09:56 AM
Last Updated : 10 Dec 2016 09:56 AM

உலக மசாலா: டூ இன் ஒன் ட்ரெட்மில் சைக்கிள்!

ஓர் அறைக்குள் இருந்துகொண்டு ட்ரெட்மில்லில் நடப்பது கொஞ்சம் அலுப்பூட்டக்கூடிய விஷயம். பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் ட்ரெட்மில்லில் நடந்தால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்று ப்ரூயின் பெர்க்மேஸ்டர் சிந்தித்தார். ‘நான் இப்படி யோசித்தேனே தவிர, அதை எப்படிச் செய்வது என்ற சிந்தனை என்னிடம் இல்லை. கொஞ்ச காலம் இதை மறந்தும் போனேன். மறுபடியும் நினைவுக்கு வந்தபோது தீவிரமாக இறங்கிவிட்டேன். சில ஆண்டுகள் பல விதங்களில் முயற்சி செய்துப் பார்த்தேன்.

இறுதியில் சைக்கிள் ஓட்டிக்கொண்டே ட்ரெட்மில்லில் நடக்கும் விதமாக எலக்ட்ரிக் சைக்கிளை உருவாக்கிவிட்டேன். என் கண்டுபிடிப்புக்கு Lopifit என்று பெயர் சூட்டினேன். இந்த சைக்கிள் மூலம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கும் பயணிக்கலாம், அப்படியே ட்ரெட்மில்லில் நடந்து உடற்பயிற்சியையும் முடித்துக்கொள்ளலாம். இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் நேரம் மிச்சமாகிறது. நடப்பது அத்தனை சுவாரசியமாக மாறிவிடும். சைக்கிளை நிறுத்துவதற்குத் தனியாகவும் ட்ரெட்மில்லை நிறுத்துவதற்குத் தனியாகவும் இரண்டு பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் இந்த சைக்கிளை இயக்கலாம்’ என்கிறார் ப்ரூயின் பெர்க்மேஸ்டர்.

2014-ம் ஆண்டு வெளிவந்த இந்த ட்ரெட்மில் சைக்கிளுக்கு ஏராளமான வரவேற்பு. தேவை இருக்கும் அளவுக்கு சைக்கிள்களின் உற்பத்தி அதிகமாகவில்லை. அதனால் முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டும். சைக்கிளின் விலை 1.42 லட்சம் ரூபாய்.

டூ இன் ஒன் ட்ரெட்மில் சைக்கிள்!

கானா நாட்டில் 10 ஆண்டுகளாக இயங்கிவந்த போலி அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டிருக்கிறது. கானா மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த சிலரால் இந்தத் தூதரகம் இயக்கப்பட்டு வந்தது. கானாவில் அமெரிக்கத் தூதரகம் மிகப் பெரிய கட்டிடத்தில் மிகுந்த பாதுகாப்போடு இயங்கி வருகிறது. இங்கே 24 மணிநேரமும் ராணுவ வீரர்கள் இருப்பார்கள். கண்காணிப்பு கேமராக்களும் இருக்கின்றன. ஆனால் போலி அமெரிக்கத் தூதரகம் அழுக்கடைந்த ஒரு கட்டிடத்தில் தகரக்கூரையுடன் இயங்கி வந்தது. இங்கே அமெரிக்கர்கள் யாரும் வேலை செய்யவில்லை. கானா, துருக்கியைச் சேர்ந்த சிலர் மட்டுமே இருந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு விசா ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். 4 லட்சம் ரூபாயைக் கட்டணமாக வாங்கிக்கொண்டு, போலி ஆவணங்களைத் தயாரித்து, அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் அனுப்பி இருக்கிறார்கள். வாரத்துக்கு 3 நாட்கள் இந்த அலுவலகம் வேலை செய்து வந்தது. சமீபத்தில்தான் அமெரிக்கத் தூதரகம் இந்த விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கிறது. கானா காவல்துறை போலி தூதரகத்தை முற்றுகையிட்டது. அமெரிக்கா, இந்தியா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 150 போலி பாஸ்போர்ட்கள் கைப்பற்றப்பட்டன. போலி தூதரகம் மூடப்பட்டது. குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. கானாவின் தலைநகரிலேயே இயங்கி வந்தாலும் இந்தப் போலி தூதரகத்தைப் பத்தாண்டுகளாக எப்படிக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தார்கள் என்று எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

தூதரகத்திலும் போலியா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x