Published : 30 Sep 2016 10:08 AM
Last Updated : 30 Sep 2016 10:08 AM

உலக மசாலா: டூ இன் ஒன் கார்!

வாகனங்களில் இருந்து கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுவிட்டது துருக்கியைச் சேர்ந்த லெட்விஷன் நிறுவனம். சிவப்பு பிஎம்டபிள்யு கார், கண் முன்னால் ஒரு ரோபோவாக நிமிர்ந்து நிற்கும் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. முழுமையான கார், ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஒவ்வொரு பகுதியாக மாற்றம் அடைந்து, இறுதியில் பிரம்மாண்டமான அன்டிமோனாக உருவெடுத்து நிற்கிறது. தலை, கை, விரல்கள், கால்கள் என்று ஒவ்வொன்றையும் அசைத்து, பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இன்னும் நடக்கும் அளவுக்கு இந்த அன்டிமோன் முன்னேற்றமடையவில்லை. தொடர்ச்சியாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த காரை சாதாரணமாக ஓட்டிச் செல்லவும் முடியும். தேவையானபோது அன்டிமோனாக அவதாரம் எடுக்க வைக்கவும் முடியும். 30 ஆண்டுகால ஆராய்ச்சியில் ஒரு கார்ட்டூன் கதாபாத்திரத்தை, வாகனத்தில் இருந்து உருவாக்கிக் காட்டும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. 12 இன்ஜினீயர்கள், 4 தொழில்நுட்ப வல்லுனர்கள் சேர்ந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். வெவ்வேறு வித கார்களில் 4 கதாபாத்திரங்களைத் தற்போது உருவாக்கி வருகிறார்கள். இந்த ரோபோ கார் விற்பனைக்கு வந்தால், வாங்குவதற்குப் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

டூ இன் ஒன் கார்!

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம்ஷயரில் வசிக்கிறார் 65 வயது மைக்கேல் அம்ப்ரே. தொடர்ந்து சில வாரங்களாக அவருக்கு வரும் கடிதங்கள் எல்லாம் மாயமாகி வருவதை நினைத்து, மிகவும் கவலையடைந்தார். ஐந்தாவது வாரம், கடிதங்கள் காணாமல் போகும் ரகசியத்தைக் கண்டுபிடித்தே தீருவது என்ற முடிவோடு, ஒரு கேமராவை வாயிலில் பொருத்தினார். அன்று வீடியோவில் பதிவான காட்சிகளைக் கண்டு அதிர்ந்து போய்விட்டார். தபால்காரர் அஞ்சல் பெட்டியில் கடிதங்களை வைத்துவிட்டுப் போன, பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு பெண் வருகிறார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கடிதங்களை எடுக்கிறார். சட்டைக்கு அடியில் ஒளித்துக்கொண்டு வேகமாகச் சென்றுவிடுகிறார்.

அந்தப் பெண் மைக்கேலின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 68 வயது ஜாய் ஹார்பாட்டில். அந்தப் பகுதியின் கவுன்சிலராகவும் அவர் இருக்கிறார். மைக்கேலால் இந்தச் சம்பவத்தைக் கண்டு சும்மா இருக்க முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரராகவும் கவுன்சிலராகவும் இருப்பதால் காவல்துறையில் முறையிடவும் தயங்கினார். ஆனால் அவர் மனைவி, ஜாய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். வேறுவழியின்றி புகார் கொடுத்தார் மைக்கேல். விசாரணையில் விளையாட்டுக்காக இப்படிச் செய்ததாக ஜாய் ஒப்புக்கொண்டார். விரைவில் கவுன்சிலர் பதவியில் இருந்து ஓய்வு பெறப் போகும் ஜாய், சிறந்த நிர்வாகி என்பதால், அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ம்… விளையாட்டு வினையாகிவிட்டது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x