Published : 28 Sep 2016 10:08 AM
Last Updated : 28 Sep 2016 10:08 AM

உலக மசாலா: டால்பின்களை வதைக்கலாமா?

இந்தோனேஷியாவில் டால்பின்களை வைத்து, சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சட்டத்துக்குப் புறம்பாக 72 டால்பின்களைப் பிடித்து, பயிற்சி அளித்து, சர்க்கஸில் பயன்படுத்தி வருகிறார்கள். குளோரின் கலந்த தண்ணீர்த் தொட்டியில்தான் டால்பின்கள் சாகசங்களை நிகழ்த்திக் காட்டுகின்றன. நிகழ்ச்சி முடிந்தவுடன் சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் தண்ணீருடன் அடைக்கப்பட்டு, அடுத்த நகருக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சிறிய டப்பாவுக்குள், மோசமான சாலைகளில் பயணிக்கும் டால்பின்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகின்றன. தொடர்ந்து 30 மணி நேரம்கூட டால்பின் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், அவற்றுக்கு ஓய்வே கிடைப்பதில்லை.

நிகழ்ச்சி முடிந்தவுடன் மக்கள் டால்பின்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்புவதால், அவற்றைத் தரையில் வைத்து போஸ் கொடுக்கச் சொல்கிறார்கள். இப்படிப் பல இன்னல்களைச் சந்திக்கும் டால்பின்கள் விரைவிலேயே மரணமடைந்து விடுகின்றன. ஜகர்தாவைச் சேர்ந்த விலங்குகள் நல அமைப்பு, சட்டத்தின் துணையோடு பல டால்பின்களை மீட்டிருக்கிறது. மீண்டும் அவற்றைக் கடலில் சேர்த்திருக்கிறது. என்னதான் சட்டம் எல்லாம் இருந்தாலும் இன்றும் 3 சர்க்கஸ் கம்பெனிகள் டால்பின்களைப் பயன்படுத்தி வருகின்றன.

அன்பாகப் பழகும் டால்பின்களை வதைக்கலாமா?

ஹங்கேரியைச் சேர்ந்த அரசியல்வாதி சேனட் ஜிடி. அடிப்படைவாத தேசிய யோபிக் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார். அவரது கட்சி யூதர்களையும் ரோமானியர்களையும் கடுமையாக எதிர்த்து வந்தது. ஹங்கேரியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இவர்களையே குற்றம் சுமத்தியது. துணை ராணுவ குழுக்களை அமைத்தது. நாஜிகளைப் போல சீருடைகள் அணிவிக்கப்பட்டு, யூதர்களுக்கு எதிரான எதிர்ப்புகளைப் பிரச்சாரம் செய்துவந்தது.

ஆனால் 4 ஆண்டுகளுக்கு முன், தான் ஓர் யூதர் என்று சேனட் ஜிடி கண்டுகொண்டதிலிருந்து, தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டார்! ‘திடீரென்று நான் பொய்யான வாழ்க்கை வாழ்வதாகத் தோன்றியது. நான் யார் என்ற தேடல் தீவிரமானது. கடைசியில் என்னுடைய பாட்டியைக் கண்டுபிடித்தேன். அவர் யூதர். எங்கள் குடும்பத்தில் ஹிட்லரின் வதைமுகாமில் இருந்து தப்பிப் பிழைத்த ஒரே மனிதர் இவர்தான்.

அவரது தோளில் வதைமுகாம் எண், டாட்டூவாகக் குத்தப்பட்டிருந்தது. வதைமுகாம் குறித்து நிறைய விஷயங்கள் அறிந்தபோது அதிர்ந்துபோனேன். இரண்டாம் உலகப் போரில் மட்டும் 5,50,000 ஹங்கேரி யூதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியின் யூத எதிர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தேன். அவர்கள் என்னைச் சமாதானம் செய்தார்கள். கட்சியை விட்டு வெளியேறினேன். இந்த 4 ஆண்டுகளில் ஒரு யூதனாக என் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொண்டேன். என் பெயரை ஹீப்ரு மொழியில் டோவிட் என்று வைத்துக்கொண்டேன்.

யூதர்களாக இருந்த ஒரே காரணத்தால், எவ்வளவு உயிர்களை இழந்திருக்கிறோம்! நான் இதுவரை யூத எதிர்ப்பாளனாக இருந்ததற்கு, இனிமேலாவது பிராயச் சித்தம் தேட வேண்டும். என்னுடைய 30 வயதுவரை வேறொரு மனிதனாக இருந்தேன். 4 ஆண்டுகளாக இன்னொரு மனிதனாக மாறியிருக்கிறேன். ஐரோப்பிய நாடுகளில் நிலவும் யூத எதிர்ப்புகளுக்கு எதிராகப் போராடுவதே இனி என் வாழ்நாள் லட்சியம்’ என்கிறார் சேனட் ஜிடி.

அடிப்படைவாதம் ஆபத்தானது…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x