Published : 04 Nov 2016 11:08 AM
Last Updated : 04 Nov 2016 11:08 AM

உலக மசாலா: டவுன் சிண்ட்ரோம் ஆசிரியர்!

அர்ஜென்டினாவின் முதல் டவுன் சிண்ட்ரோம் ஆசிரியர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார் நோயலியா காரெல்லா. 3 வயது குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியராக இருக்கிறார். பள்ளியின் முதல்வர், சக ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என்று எல்லோரும் நோயலியாவை உற்சாகப்படுத்துகிறார்கள். குழந்தைகளோடு குழந்தையாக நோயலியா பழகுவதும் பாடம் சொல்லிக் கொடுப்பதும், குழந்தைகளின் விருப்பத்துக்குரிய ஆசிரியராக மாற்றியிருக்கிறது. “டவுன் சிண்ட்ரோம் குழந்தை என்பதால், என்னைப் பள்ளியில் ஒரு அரக்கன் போலப் பார்த்தார்கள். பல பள்ளிகளில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நான் சிறுமியாக இருந்தபோதும் இப்போதும் எனக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் சின்ன வயதிலேயே ஆசிரியராக விரும்பினேன். 31 வயதில் அந்தக் கனவு நிறைவேறிவிட்டது. அன்றைய காலகட்டம் போல இன்று இல்லை. குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை என்னை நேசிக்கிறார்கள். என்னைப் பார்த்து, டவுன் சிண்ட்ரோம் குறைபாடு உள்ளவர்களைப் பற்றிய அபிப்ராயம் மாறி வருவதில் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார் நோயலியா.

வாழ்த்துகள் நோயலியா!

ஜப்பானில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று திருமணம் செய்துகொள்வோர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. நீண்ட நேரப் பணிச் சுமையால், குடும்ப வாழ்க்கைக்கு அதிக நேரம் செலவிட முடியாது என்ற காரணத்துக்காகவே, பலரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை. திருமணம் செய்துகொள்ள நினைப்பவர்களுக்கும் பார்த்து, பழகி, திருமணம் செய்ய போதுமான அவகாசம் இல்லை. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் தயக்கத்திலும் வெட்கத்திலும் பேசுவதில்லை. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுபிடித்திருக்கிறது டோக்கியோவில் இயங்கும் திருமணம் ஏற்பாட்டு மையம். ஆணோ, பெண்ணோ தனக்குத் தேவையான இணையைத் தேர்ந்தெடுத்தவுடன், அவர்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்கிறது. ஜோடிகளுக்கு முகமூடிகளை அணிவிக்கிறது. இதனால் ஆண்களும் பெண்களும் தயக்கம் இன்றி, மனம் விட்டுப் பேச முடிகிறது. ‘முகமூடி இல்லாமல் இணையைத் தேடும்போது, முதலில் அழகுதான் சட்டென்று ஈர்க்கிறது. அதனால் குணத்தைப் பற்றிப் பெரிதாக யாரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். ஆனால் முகமூடி அணிந்துகொண்டு சந்திக்கும்போது, முகம் தெரிவதில்லை. பேச்சின் மூலம் ஒருவரின் குணங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. மனம் விட்டுப் பேச முடிகிறது. சாலைகளில், பூங்காக்களில், உணவகங்களில் சந்தித்தால் கூட யாரும் நம்மைக் கவனித்துப் பார்க்க மாட்டார்கள். ஒரு சின்ன முகமூடி மிகப் பெரிய அளவில் இணையைத் தேர்ந்தெடுப்பதில் பங்களிக்கிறது. நானும் என் கணவரும் உருவத்தைப் பார்க்காமல், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு திருமணம் செய்துகொண்டோம்’ என்கிறார் யசுமாசு கிஷி. டெஃப் அனிவர்சரி திருமண ஏற்பாட்டு மையத்தை நடத்தும் கேய் மட்சுமுரா, ‘ஒரு சின்ன முகமூடி மிகப் பெரிய மாற்றத்தை ஜப்பானிய இளைஞர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. திருமணத்தின் மீது நாட்டத்தை அதிகரித்திருக்கிறது’ என்கிறார்.

முகமூடி வரன்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x