Published : 05 Jan 2016 09:48 AM
Last Updated : 05 Jan 2016 09:48 AM

உலக மசாலா: ஜெர்மனியின் சூப்பர் போக்குவரத்து!

எரிபொருள் சிக்கனத்துக்காகவும் காற்றில் மாசு குறைப்பதற்காகவும் ஜெர்மனி சைக்கிள் போக்குவரத்தை ஏற்கெனவே ஊக்குவித்து வருகிறது. இப்போது சைக்கிள் போக்குவரத்துக்காகவே சூப்பர் ஹைவே என்ற பெயரில் மிக நீண்ட நெடுஞ்சாலையை உருவாக்கி வருகிறது. 100 கி.மீ. தூரத்துக்கு, 10 நகரங்களை இணைக்கும் விதமாக இந்த நெடுஞ்சாலை திட்டமிடப்பட்டு உருவாகி வருகிறது. இந்த வழியில் 4 பல்கலைக்கழகங்கள், பல்வேறு தொழிற்சாலைகள் இருக்கின்றன. போவதற்கு ஒரு பாதையும் வருவதற்கு ஒரு பாதையுமாக மிக அகலமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சைக்கிள் நெடுஞ்சாலைக்கு அருகில் இருக்கும் சுமார் 20 லட்சம் மக்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்த இருக்கிறார்கள். வாகன நெருக்கடி, காற்று மாசு போன்றவற்றைப் பெருமளவில் குறைக்க இருக்கிறது இந்த நெடுஞ்சாலை. தினமும் சாலைகளில் செல்லக்கூடிய 50 ஆயிரம் கார்களுக்கு இனி வேலை இருக்காது என்கிறார்கள். 5 கி.மீ. தூரத்துக்கு இந்தச் சாலை தயாராகி, பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. விரைவில் முழுச் சாலையும் நிறைவடைந்துவிடும் என்கிறார்கள்.

வரவேற்க வேண்டிய விஷயம்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டர்டன், பீட் செக்லின்ஸ்கி இருவரும் கடலைச் சுத்தம் செய்வதற்கான கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கடலில் மிதக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், காகிதங்கள், எண்ணெய், சோப் போன்றவற்றை இந்தக் கருவி தானாக இழுத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ‘’நாங்கள் இருவரும் சிறு வயது முதல் கடலில்தான் அதிக நேரத்தைச் செலவிட்டிருக்கிறோம்.

பிற்காலத்தில் நீர் விளையாட்டு வீரர்களாக மாறிவிட்டோம். நாங்கள் சின்ன வயதில் பார்த்த கடலுக்கும் இப்போது இருக்கும் கடலுக்கும் நிறைய வித்தியாசம். கடலைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால் குப்பைகளும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இது எங்களுக்கு அதிகக் கவலையையும் வருத்தத்தையும் தந்தது. இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிப்பதற்காகவே நாங்கள் பார்த்து வந்த வேலைகளை விட்டுவிட்டோம். குப்பை உறிஞ்சும் கருவியைப் பலரின் உதவியோடு உருவாக்கினோம். பல்வேறு இடங்களில் இந்தக் கருவியை வைத்துப் பரிசோதனை செய்தோம். திருப்தியாக இருந்தது. நிதி திரட்டி, இந்தக் கருவியை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிவு செய்திருக்கிறோம்.

இதற்காக ஒரு வீடியோவையும் தயாரித்து வெளியிட்டோம். மிக நல்ல வரவேற்பு கிடைத்தது. மறுசுழற்சி முறையில் உருவான சிலிண்டரை கடலில் மிதக்க விடுவோம். குப்பைகள் சிலிண்டருக்குள் இழுக்கப்பட்டு, வடிகட்டப்பட்டு, இன்னொரு பைக்குள் சேர்ந்துவிடும். நீச்சல் குளத்தில் வைக்கப்படும் ஸ்கிம்மர் பாக்ஸ் போலவே இந்தக் கருவியையும் வடிவமைத்திருக்கிறோம். துறைமுகங்களில் இந்தக் கருவி அதிகம் பயன்படும்’’ என்கிறார் ஆண்ட்ரூ டர்டன்.

நண்பர்கள் இருவருக்கும் ஒரு பூங்கொத்து!

அமெரிக்காவில் வசிக்கும் மைக் ட்ராக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விரல்களில் உள்ள நகங்களைச் சேமித்து வருகிறார். ஓர் ஆண்டு முழுவதும் சேமிக்கப்பட்ட நகங்களை வைத்து பேப்பர் வெயிட்டை உருவாக்குகிறார். ஒவ்வொரு பேப்பர் வெயிட்டும் 20 ஆயிரத்தில் இருந்து 33 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ’’எனக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தது. ஒருமுறை நகத்தை நீளமாக வளர்த்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. வளர்க்க ஆரம்பித்தேன். குறிப்பிட நீளத்துக்கு வளர்ந்த பிறகு அதை வெட்டி, வீச மனம் வரவில்லை. ஒரு பையில் நகங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அதை ஒரு கலைப் பொருளாக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

பேப்பர் வெயிட் யோசனை உதித்தது. பச்சை வண்ண பேப்பர் வெயிட்களைப் பார்ப்பவர்கள் வாங்காமல் இருக்க மாட்டார்கள்! எனக்குச் செலவு குறைவாகத்தான் ஆகும். ஆனால் ஒரு வருடம் முழுவதும் பொறுமையாக நகங்களைச் சேமித்து வைக்க வேண்டும். இதுபோல இன்னொரு பொருள் உலகத்தில் இருக்காது. அதனால் விலை அதிகமாக வைத்திருக்கிறேன். விலையைப் பற்றிக் கேள்வி கேட்காமல், வாங்கிச் சென்று விடுகிறார்கள்’’ என்கிறார் மைக் ட்ராக்.

பிழைக்கத் தெரிந்தவர்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x