Published : 17 May 2016 10:15 AM
Last Updated : 17 May 2016 10:15 AM

உலக மசாலா: ஜீன்ஸில் கின்னஸ் சாதனை!

துருக்கியில் தையல் கலைஞராக இருக்கிறார் 34 வயது காசிம் அண்டக். உலகிலேயே மிகச் சிறிய ஜீன்ஸைத் தைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். ’’நாங்கள் பரம்பரையாக தையல் தொழிலைச் செய்து வருகிறோம். நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது மிகவும் அலுப்பாகத்தான் இருந்தது. ஒரே மாதிரி வேலையைச் செய்கிறோம் என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது. என்னால் வேறு தொழிலையும் செய்ய முடியாத சூழல். இந்தத் தொழிலை இன்னும் சுவாரசியமாக மாற்றிக்கொள்வது எப்படி என்று யோசித்தேன். புதுப் புது யோசனைகள் உதித்தன. அவற்றைச் செய்து பார்த்தபோது, ஏராளமான வரவேற்பு கிடைத்தது. என் அப்பா ஒரு குழந்தைக்கு சிறிய ஜீன்ஸைத் தைத்துக் கொடுத்தார்.

அதைப் பார்த்துதான் மிகச் சிறிய ஜீன்ஸ்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 7.5 செ.மீ. ஜீன்ஸை உருவாக்கிப் பார்த்தேன். வெற்றிகரமாகத் தைத்து முடித்த பிறகு, 5 செ.மீ. ஜீன்ஸைத் தைக்க ஆரம்பித்தேன். அளவு சிறியதாகப் போகும்போது தைப்பதும் கடினமாகிக்கொண்டே வரும். 2.5 செ.மீ. ஜீன்ஸ் தைத்து முடித்தவுடன், அதை விடச் சிறியதைத் தைக்க முடியுமா என்று என் அப்பா சவால் விட்டார். அந்தச் சவாலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதற்காக 0.9 செ.மீ. ஜீன்ஸையும் தைத்து முடித்தேன். இந்தச் சிறிய ஜீன்ஸை தையல் இயந்திரத்தில் தைக்க முடியாது. ஆனால் அதையும் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறேன். கின்னஸ் புத்தகத்துக்கும் தகவல் அனுப்பினேன். உலகிலேயே மிகச் சிறிய ஜீன்ஸ்களை உருவாக்கியவன் என்று கின்னஸ் அமைப்பு என்னைத் தேர்வு செய்துவிட்டது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை’’ என்கிறார் காசிம்.

கஷ்டமான சாதனைதான் காசிம்… வாழ்த்துகள்!

வியட்நாமைச் சேர்ந்த டான் வின் இயற்கை ஆர்வலர். ’’என்னுடைய தோட்டத்தில் ஐரோப்பிய பறவை ஒன்று நீல வண்ணத்தில் 4 முட்டைகளை இட்டிருந்தது. முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவருவதைப் பார்க்க வேண்டும் என்பதற்காக மரத்தில், கூட்டுக்கு மேலே ஒரு கேமராவைப் பொருத்தியிருந்தேன். அன்று தாய்ப் பறவை வழக்கத்தை விட பரபரப்பாக இருந்தது. முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளி வரும் நேரமாக இருக்கும் என்று ஆவலோடு காத்திருந்தேன்.

சிறிது நேரத்தில் தாய்ப் பறவை உணவு தேடிச் சென்றுவிட்டது. மிகப் பெரிய பாம்பு ஒன்று கூட்டுக்கு வந்து, 4 முட்டைகளையும் ஒவ்வொன்றாக விழுங்கியது. பிறகு வேகமாக மரத்திலிருந்து இறங்கிச் சென்றுவிட்டது. இந்தக் காட்சியைக் கண்டு நான் அதிர்ந்துவிட்டேன். அழகான குஞ்சுகளை எதிர்பார்த்துக் காத்திருந்த நான், யாரோ துரோகம் இழைத்துவிட்டதைப் போல உணர்ந்தேன். கூட்டுக்குத் திரும்பும் தாய்ப் பறவைக்கு எப்படி இருக்கும் என்பதை நினைக்கும்போதே கஷ்டமாக இருந்தது. இயற்கை எல்லோருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதில்லை…’’ என்கிறார் டான் வின். பாம்பு முட்டைகளை விழுங்கும் காட்சியை இதுவரை உலகம் முழுவதும் 30 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

ஓர் உயிர் இன்னொன்றுக்கு உணவு…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x